சோபித தேரரின் மௌனம் - எதிர்கட்சிகளுக்கு பின்னடைவா..?
-GTN-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் நீதியான சமூகத்திற்கான இயக்கத்தின் தலைவர் மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாததுடன் கடும் மௌனத்தை கடைப்பிடிப்பது அரசியல் வட்டாரங்களில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது
ஜனநாயகக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ஏற்பாட்டின் கீழ் மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்-டிரான் அலஸின் தந்தையின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது சோபித தேரர் வலியுறுத்திவரும் அரசமைப்புமாற்றம் தொடர்பான விடயங்கள் ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் ஆராயப்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.இதன் காரணமாக அதனை மையப்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரங்கள் எதனையும் முன்னெடுக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து தேரருக்கு தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நிமாலை கேட்டுக்கொண்ட ஜனாதிபதி தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் இந்த விடயம் குறித்து தான் கவனம் செலுத்துவதாகவும், அதனால் தற்போதைக்கு இது தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுக்கவேண்டாம் எனவும் சோபித தேரரை கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதியினுடான இந்த சந்திப்பின்பின்னர் மாதுளவாN சோபித தேரர் வேறு எந்த நடவடிக்கைகளிலும் பங்குகொள்ளவில்லை. இதன்பின்னர் அவர் வெள்ளிக்கிழமை மாலபேயில் உள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு இதயநோய்க்கான பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் மத்தியில் பொதுவான கருத்து காணப்படாதது குறித்தும்,ஜாதிக ஹெல உறுமய உறுதியான நிலைப்பாட்டை எடுக்காதது குறித்தும் சோபித தேரர் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை மிரட்டல் செய்திருப்பார்கள். தற்போது அதுதான் இந்த ஆட்சியில் நடந்துகொண்டிருக்கின்றது.
ReplyDelete