Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் தாக்குதலும், எரிக் சொல்ஹெய்மின் பதில் தாக்குதலும்..!


இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த 15ம் திகதியன்று குருநாகலில் வைத்து வெளியிட்ட ஆச்சரியத்தக்க தகவல்கள் தொடர்பில் நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் பதில் வழங்கியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் இந்த வார்த்தை தாக்குதலை, தற்போதைய நிலையில் பெரிதாக எடுக்கமுடியாது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நோக்காகக் கொண்டே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும் மஹிந்த ராஜபக்ச உட்பட்ட அனைவருக்கு தெரிந்த விடயங்களை தாம் வெளிப்படுத்துவதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சமாதான நிலைப்பாட்டுக்காக நோர்வே, ஏற்பாட்டாளராக செயற்பட்டது.

இதன் போது அந்தநாடு சமாதான முனைப்பை கருத்திற்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவிகளை செய்தது. எனினும் இராணுவ நடவடிக்கைகளுக்காக நிதியுதவிகளை வழங்கவில்லை.

சுமாதான முயற்சிகளில் விடுதலைப் புலிகளை கொண்டு வரவேண்டும் என்பதற்காக நோர்வே,  விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்துக்கு பொருளாதார வளங்களை வழங்கியது.

இதில் வானொலி உபகரணங்களும் அடங்கும்.

இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் அனைத்து தலைவர்களுக்கும் தெரிந்த நிலையிலேயே வழங்கப்பட்டன.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்திலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இவை அனைத்தும் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன.

மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் பல தடவைகள், அவரை சந்தித்து சமாதான முயற்சிகள் தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது அமைச்சர் பின்னர், பிரதம மந்திரி என்ற அடிப்படையில் அவர் தமது முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்கினார் என்று சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மஹிந்த ராஜபக்ச தமது முழு ஒத்துழைப்பையும் நோர்வேயின் முயற்சிகளுக்கு வழங்கியதாகவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் 2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ச, நோர்வே தமது சமாதான பணிகளை மேற்கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

அத்துடன் தனிப்பட்ட ரீதியிலும் தம்மை அழைத்தார்.

இதனையடுத்து பல தடவைகளாக மஹிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அரசியல் கோரிக்கைகளை தம்மூலமாக அனுப்பினார். அத்தனை கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துக்கு ஒழுங்குற கொண்டு போய் சேர்க்கப்பட்டன.

இதன்போது மஹிந்த ராஜபக்ச, தம்மை தனிப்பட்ட ரீதியிலும் நோர்வே அரசாங்கத்தையும் பாராட்டினார்.

இந்தநிலையில் 2010ஆம் ஆண்டும் மஹிந்த ராஜபக்ச, நோர்வேயின் சமாதான முயற்சிகளை ஏற்றுக்கொண்டதுடன் இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

இதற்கு மேலதிகமான விபரங்கள் யாவும், விளக்கமாக 2015ம் ஆண்டு வெளியாகப்போகும் தாமும் நோர்வேயின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்கீசனும் மேற்கொண்ட சமதாதான முயற்சிகள் தொடர்பாக பிரித்தானிய செய்தியாளர் மற்றும் ஆசிரியர் மார்க் செல்டர் எழுதி வெளியிடவுள்ள நூலில் உள்ளடங்கியுள்ளதாக எரிக் சொல்;ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள எரிக் சொல்ஹெய்ம், தம்மை பொறுத்தவரையில், உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்றில்லாமல், அனைவருமே தமக்கு தெரிந்த விடயங்களை உண்மையாக அந்த விசாரணைக்குழுவிடம் வெளியிடவேண்டும் என்று எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்து விடயங்களும் கூறப்பட வேண்டும் என்று நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியாக முக்கியமான திட்டங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் செயலாளருக்கும் அந்த அமைப்பின் நிறுவனங்களுக்கும் உதவ வேண்டியது அனைவரும் கடமை என்று தாம் நம்புவதாகவும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. அரசியல் அதிர்வுகளுக்காக உண்மைகளை மறந்துவிட்டுப் பேசுவதில் நமது ஜனாதிபதியும் விதிவிலக்கானவர் அல்லர். எரிக் சொல்ஹெய்மின் சமாதான முன்னெடுப்புகள் முழுமையான வெற்றியளிக்காமைக்கு நோர்வேயின் உள்நோக்கம் நீங்கலாக, அரசு - புலி ஆகிய இருதரப்பினருமே ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றார்கள்.

    தேர்தல் காலப் பேச்சு என்பதற்காக அலட்சியம் செய்யாது சொல்ஹெய்ம் தனது பதில் கருத்தை வெளியிட்டிருப்பது -பொதுமக்களின் பார்வையில்- சிறந்தது என்றே தோன்றுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.