Header Ads



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் எமது நிபந்தனைகளை ஏற்கவேண்டும் - திஸ்ஸ விதாரண

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரித்தாலும் ரணிலுக்கு மாத்திரம் ஆதரவளிக்கமாட்டோம். இதில் நாம் தெளிவாக இருக்கிறோம். ஜனாதிபதி  தேர்தல் தொடர்பில் இன்று கூடவுள்ள  லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுக்கும். ஜனாதிபதியிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் கூறுவோம் என சிரேஷ்ட அமைச்சருமான லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  

Th க்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது செவ்வியின் தொகுப்பு கீழே தொகுக்கப்பட்டுள்ளது. 

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் லங்கா சமசமாஜக் கட்சி இறுதித் தீர்மானம் எடுத்துவிட்டதா? 

பதில்: இன்று  ஞாயிற்றுக்கிழமை கூடும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே முடிவெடுக்கவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு எப்போது நடைபெறவேண்டும் என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. எனவே, இந்த நிலைமையில் எந்தவொரு அரசியல் கட்சிகளையும் சந்தித்து முடிவெடுக்கவேண்டும். கட்சியின் செயற்குழுவுக்கு எதிராக முடிவெப்பதாலேயே கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுகிறது. 

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலின் தொடர்பில் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? 

பதில்: ஜனாதிபதி முறைமை, நடைமுறையில்  உள்ள அரசியலமைப்பு ஆகிய இரண்டுக்குமே இடதுசாரிக் கட்சிகள் எதிரானவை. கலாநிதி என்.எம்.பெரேரா தலைவராக இருந்த காலத்தில் ஆட்சிமுறையையும், அரசியலமைப்பையும் மாற்றவேண்டுமென கூறி போராடினார். கொல்வின் ஆர்.டிசில்வா காலத்திலும் அரசியலமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அன்றைய எதிர்ப்பு இன்றும் அப்படியே இருக்கிறது. அரசியலமைப்பு, ஜனாதிபதி  ஆட்சி முறை என்பவற்றுக்கு இன்றும் இடது சாரிகள் எதிராகவே இருக்கின்றனர். 

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலை ஜனவரியில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினரை தேர்தலில் ஆதரிப்பீர்களா? 

பதில்: இதுவரை  எந்த தரப்பினருக்கு ஆதரவளிப்போம் என முடிவு எடுக்கவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்கவை மாத்திரம் ஆதரவளிக்க மாட்டோம். அந்த விடயத்தில் நாம் தெளிவாக இருக்கிறோம். மத்திய செயற்குழுவே இந்த விடயத்தில் முடிவெடுக்கும். 

கேள்வி: பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுவருகின்றன. இது தொடர்பில் உங்களது கருத்து என்ன? 

பதில்:பொதுவேட்பாளராக யாரை நிறுத்துவார்கள் என்று இன்னும் முடிவாகவில்லை. ஆனால்  ஐ.தே.க.வின் பொதுவேட்பாளரை ஏற்கமுடியாது. பொதுவான ஒரு வேட்பாளராலேயே தேர்தலில் வெற்றிபெற முடியும். 

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதா? 

பதில்: நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறையை மாற்றவேண்டும் என்ற விடயத்தில் அரசின் பங்காளிக் கட்சிகள் அரசுடன் முரண்படவாய்ப்புண்டு. இதுவரை சில கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டாம் என்று கூறிவருகின்றன. சிலர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்  அரசியலமைப்பு மாற்றம் வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர் அரசியலமைப்பு மாற்றத்துடன் ஜனாதிபதி முறையை மாற்றவேண்டும் என்கின்றனர். ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றவேண்டும் எனவும், ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் இம்மமாற்றத்தை கொண்டுவர  வேண்டும் என்கின்றனர். அதேநேரம், நாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கவேண்டும் என்றே கூறுகின்றோம். 

கேள்வி: பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பில் அரசதரப்பு என்ன முடிவெடுத்துள்ளது?  

பதில்: பிரதமர் பதவியை அடுத்த ஆட்சியில் யாருக்கு வழங்குவது என்ற பிரச்சினை இன்றே எழுந்துள்ளது. இவற்றை நான் ஊடகங்களின் ஊடாகவே அறிந்தேன். இருப்பினும், இத்தகைய பிரச்சினையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே முடிவெடுக்க வேண்டும். ஜனாதிபதி இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுப்பார்  என்று தற்போது கூற முடியாது. 

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடியவர்களுக்கு உங்களது நிபந்தனை என்ன? 

பதில்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய ஒருவர் எமது கட்சியின் நிபந்தனைகளை ஏற்கவேண்டும். ஜனாதிபதி முறை ஒழிப்பு, அரசியலமைப்பு மாற்ற உள்ளிட்ட பல விடயங்களில் தெளிவு வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முதல் பொதுமக்களின் தேவை என்ன என்பதை ஆராயவேண்டும். இப்படியான பல விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்கியுள்ளோம். அடுத்ததாக அவருடன் சந்தித்து எமது கோரிக்கை தொடர்பான தெளிவுபடுத்தல்களை முன்வைக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்  ஜனாதிபதியை சந்திக்கவுள்ளோம். 

கேள்வி: வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில் மக்களுக்கான சலுகைகள் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகின்றதே... 

பதில்: 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவே ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும், அது தொடர்பில் இன்னும் நான் படிக்கவேண்டி உள்ளது. மக்கள் நலன்  சார்ந்த பல விடயங்கள் எனது அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கேள்வி: இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக்  கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் நிலை காணப்படுகின்றதா? பதில்: சர்வ கட்சிக் குழு  எனது தலைமையில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவுக்கு வரும் நிலையில், பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டது. அந்தக் குழுவில் சில முக்கிய தீர்மானங்கள் கூட்டமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், இன்று அமைத்துள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் எனது கட்சியும் இல்லை. நானும் இல்லை. இதனால் எனக்கு எதுவும் கூறமுடியாது. ஜனாதிபதி நல்லமுடிவை  எடுப்பார் என நம்புவோம்.

No comments

Powered by Blogger.