Header Ads



பலஸ்தீனத்தை அங்கீகரித்த சுவீடன்

பலஸ்தீன தேசத்திற்கு சுவீடன் அங்கீகாரம் அளித்துள்ளது. ஐரேப்பிய ஒன்றியத்தின் நீண்டகால உறுப்பு நாடொன்று பலஸ்தீனத்தை அங்கீகரித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

"இரு நாட்டு தீர்வே இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினைக்கு ஒரே முடிவாகும்" என்று சுவீடன் பிரதமர் ஸ்டபன் லப்வன் குறிப்பிட்டுள்ளார். இது சர்வதேச சட்டத்திற்கமைய தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் பலஸ்தீனத்தை அங்கீகரித்த 130க்கும் அதிகமான நாடுகளுடன் சுவீடனும் இணைந்து கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் இருந்தே பலஸ்தீனத்தை அங்கீகரித்த ஹங்கேரி, போலாந்து மற்றும் ஸ்லோவாக்கியாவை தவிர்த்து 28 அங்கத்துவம் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை தவிர்த்து வருகின்றன.

எனினும் சுவீடனின் இந்த முன்னெடுப்பு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நாடுகள் பலஸ்தீன தேசம் பேச்சுவார்த்தை மூலமே நிறுவப்பட வேண்டும் என்று தொடர்ந்து வாதிட்டு வருகின்றன.

பலஸ்தீன முன்னாள் தலைவர் யாஸிர் அரபாத் 1988 ஆம் ஆண்டு 1967க்கு முன்னரான எல்லையைக் கொண்ட ஒருதலைபட்சமாக பலஸ்தீன அரசை பிரகடனம் செய்தார். இதனை அரபு நாடுகள், கொமியுனிஸ்ட் நாடுகள் மற்றும் பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட அணிசேரா நாடுகள் அங்கீகரித்தன.

No comments

Powered by Blogger.