Header Ads



''நேரடி ரிப்போர்ட்'' மண்ணில் புதைந்த உடல்கள் - மீட்புப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது


(நஜீப் பின் கபூர்)

பதுள்ளை மாவட்டம்.  
ஹல்தமுல்லை உதவி அரச செயலகப் பிரிவு. 
தலை நகர் கொழும்பிலிருந்து தூரம் 200 கிலோ மீற்றர்கள்.
மாவட்டத் தலைநகர் பதுள்ளையிலிருந்து 52 கிலோ மீற்றர்கள். 
சம்பவ இடம் 
கொஸ்லாந்தை - மீரியபெத்த

நேரம் சரியாக காலை 7.32 
ராஜூவும் அவனது மனைவியும் எவ்வளவு விரைவாக தம்மால் ஓட முடியுமோ ஓடிக்கொண்டிருந்தார்கள்..! 

படைப்பின் படி ராஜூ மனைவி தனது கனவனுக்கு பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள். ராஜூ ஓடிக் கொண்டே ஒரு முறை தனது மனைவியைத் திரும்பிப் பார்த்தான் பின்னால் வந்த தனது மனைவி லக்மியை அங்கு காணவில்லை. 

பெரும் சத்தத்துடன் மண் சரிந்து பாறைகளுடன் தன்னை விரட்டி வருவதை அவன் பார்த்தான். முடியும் மட்டும் தனது விசையைக் கூட்டி ஓட முடிந்ததால் உயிர் பிழைத்து  இப்போது அவன் கொஸ்லாந்தை கணேச தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கபட்டிருக்கும் மறுவாழ்வு முகாமில் பேயரைந்தவனாக நிற்கின்றான்.

காலையிலேயே பள்ளிக்கூடம் போயிருந்த பிள்ளைகள் பலபேர் தனது பெற்றோர்களைக் காவு கொண்ட அந்த மண்சரிவை பார்த்து ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது நேரம் காலை 9.30.

மீட்புப் பணியாளர்களும் கனரன  இயந்திரங்களும் அங்கு வந்து மாலை 5.20 வரை  பணிகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மோசமான கால நிலை. மழை, பணி மூட்டங்கள்  தொடர்ந்தும்  மண் சரிவு நடந்து கொண்டிருப்பதால் மீட்புப் பணியாளர்களுக்குக் கூடப் பாதுகாப்பு கிடையாது என்பதால் அவர்களை விடியும் வரை அந்த இடத்திலிருந்து அரசாங்கம் வெளியேருமாறு கட்டளை பிறப்பித்து விட்டது. எனவே மண்ணில் புதையுண்டவர்களில் எவரும் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புக்கிடையாத ஒரு நிலை இப்போது அங்கு.

அரசு சொல்லும் செய்திகளையும் பொது மக்கள் தருகின்ற  தகவல்களையும் இப்போது ஒரு முறை பார்ப்போம்.

118 வீடுகள் 
147 குடும்பங்கள் பாதிக்கப்பட்டவர்கள் தொகை 518
மண்ணில் புதையுண்டிருப்பார்கள் என்று நாம் எதிர் பார்க்கும் தொகை 100க்கும் குறைவு.
(ஊடகங்கள் சொல்கின்ற படி புதையுண்டிருப்பவர்கள் எண்ணிக்கை 150 முதல் 300வரை)
தற்போது வரை மீட்கப்பட்டிருக்கின்ற சடலங்கள் 4.
மண்சரிவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பிரதேசம் 200 ஏக்கர்வரை. 
புதையுண்டவர்கள் பெரும்பாலானவர்கள் இந்திய வம்சவழி மக்கள்.

1997ல் ஒரு முறை இந்தப் பிரதேசத்தில் மண்சரிவு நிகழ்ந்தது அப்போது 7பேர் மண்ணில் புதையுண்டார்கள். இதனால் இந்தப் பிரதேசம் மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற இடம் என்று 2005 லும் 2011லும் அதிகாரிகள் அடையாளப்படுத்தி இருந்ததுடன் இவர்களைப் பாதுகாப்பான இடங்களில்  குடியேற்றுமாறு ஹல்தமுல்லை அரசாங்க செயலாளருக்கு பணிப்புரை வழங்கி இருக்கின்றார்கள். 

இந்த நிலையில் அவர்களை அந்த சிபார்சுகளின்படி குடியமர்த்தி இருந்தால் இந்த அனர்த்தம் நடந்திருக்க மாட்டது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது.

இவ்வளவு பெருந் தொகையானேரை ஒரே நேரத்தில் எப்படிக் குடியமர்த்துவது அதற்குத் தேவையான காணி பணம் என்பவைகள் எமக்குக் கிடைத்தால்தானே நாம் இவற்றை செய்திருக்க முடியும் என்று  ஹல்தமுல்லை பிரதேச செயலாளர் தரப்பில் தற்போது பதில் தரப்படுக்கின்றது.

ஏறக்குறைய 10 வருடங்கள் 150 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடம் பெற்றுக் கொடுக்க முடியாது என்ற விடயத்திற்கு தற்போது நியாயம் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நேற்று இந்த இடத்திலிருந்து வெளியேருமாறு நாம் அவர்களைக் குறிப்பிட்டிருந்தோம் என்று ஹல்தமுல்லை செயலாளர் குறிப்பிட்டாலும் அப்படி எமக்கு எவரும் தகவல் தறவில்லை என்று மக்கள் மறுக்கின்றார்கள்.

இப்போது அதிகாரிகளும் அமைச்சர்களும் ஹெலியில் அங்கு மின்னல் வேகத்தில் பறந்து போய் இருக்கின்றார்கள்.

இயற்கை அழிவுதான் என்றாலும் ராஜூ ஓடிய வேகத்தில் ஓடாது ஆமை வேகத்தில் மலையக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஓடி இருந்தாலும் இந்த  உயிர்ளைக் காப்பாற்றி இருக்க முடியும். 

1 comment:

  1. தனக்கு சின்ன வலியென்றாலும் அரைமணி நேரத்தில் அமெரிக்கா பறந்திடும்
    நம்ம நாட்டு ராஜாவுக்கு புதையுண்ட மக்களைக் காப்பாற்றும் கவலை வரவில்லை.
    எங்களுக்கு ஹஜ் செய்வதற்கு நீர் பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.
    இப்படி ஆபத்தான சூழலில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வாழ்வதற்கு
    அந்தப் பணத்தையாவது கொடுத்திடு அய்யா.... வாக்குக்காக வடக்கில் கொட்டிய பணத்தை இந்த மக்களுக்கு செலவு செய்திருந்தாலே 300 பேரென்ன 3000 பேரைக் காப்பாற்றி இருக்கலாமய்யா..

    ReplyDelete

Powered by Blogger.