Header Ads



புனர் நிர்மாணம்..!


(மு.இ.உமர் அலி)

ஸ்வர்ண இலைகளும் 
மரகதப்புஸ்பங்களும்
வலுவான கிளைகளும் 
கொண்ட கற்பக தரு
சருகுகள் கூட 
உருக்கினால் உபயோகமாகும்
வேர்களும் 
இலாமிச்சையாட்டம் மணக்கும் !

கருப்பு உடல்தான் என்றாலும் 
குறுக்காலறுத்தால்
முறுக்குத்தெறிக்கும் நன்கு 
முற்றிய கருங்காலி !

ஓட்டுக்குருவிச்சை 
தொட்டுக்கொண்டதால் 
பட்டு மிலாறாகி 
தொட்டால் உடைகிறது 
பட்சிகளுறங்க பல 
மெத்தைகளாகின்றது!

முருங்கையாக உருமாறி 
முற்றிய காய்களுடன் மலருமுன் 
உதிர்கின்ற பூக்களுடன் 
வெடித்த பட்டையிலிருந்து
ஓட்டினால் ஓட்டுப்படாத 
பிசின் நிரம்பி வழிகிறது !

பொருக்குப்பிடித்து மயிர்க்கொட்டி அப்பி
அரிபட்ட இலைகளுடன் 
சாரைப்பாம்பு கடித்தவன் உரியானுடன் 
ஓடிவந்து பட்டையக்காரும்வரை 
திமிர்த்துப்போய் காத்திருக்கிறது!

வீதியால்போகும் சொறிநாய் 
இதன் அடியில்தான் 
காலைக்கிளப்பிச்செல்கின்றது!

ஆனால் மரங்கொத்தி வந்து 
அடிமரத்துடன் போட்டியிட்டு 
தோற்றுவிட்டு 
மீண்டும் வாழை மரத்தில் 
தன் வீரத்தைக்காட்டுகின்றது!

கந்துகள் முறிந்து விழுந்த இடமெல்லாம் 
பதியமாகி சிறு சிறு புதர்கள்
காய்கள் தெரிகின்றன 
ஆனால் யாவும் புச்சி!

பச்சையம் தொகுப்பதற்குப்பதிலாக
மரம் மன இச்சையின் பிடியிலே சிக்கிட 
நிச்சையம்அழிவுதான் என 
வேர்கள் கதறி அழுகின்றன !

ஒற்றை மரத்தோப்பை
ஒருமித்து 
அடாத்தாக பிடித்தவர்கள்
நினைக்கிறார்கள் 
அழிந்தால் நமக்கென்ன 
மரமும் நல்ல விலைதானே 
அதன் கரியும் கூட பயன்தானே
என்ற சுயலாபச்சிந்தனையில்!

வேர்கள் தாகத்தால் தவிக்கும்போது 
வானம் கொதிநீரைத்தான் 
கொட்டித்தீர்க்கிறது 
சுடுநீர் குடித்த பக்க வேர்கள் மட்டுமன்றி
உச்சிக்கிளையும் வெந்து வாய்விட்டு 
அலறுகின்றது !

இருந்த பழங்களெல்லாம் 
தட்டத்தனியாக தின்றுமுடித்த 
ஒரு பேராசைக்கிளி
இன்னும் இருக்கின்றதா என்று 
பழுத்த இலைகளினூடே
புகுந்து தேடுகிறது!

இலையை அரித்த புழுக்களின் 
பிழுக்கை விழுந்த இடமெல்லாம்
புற்களும் முளைக்கவில்லை 
தரிசாகுதல் தெரிகிறது!

ஆட்டங்காணும் அந்த அரசமரத்துக்கு 
ஆற்றோரநாணல் முட்டுக்கொடுக்கிறது
பப்பாசிக்கிளை ஒன்று 
ஊன்றுகோலாய் தெரிகிறது!

வேலி அழிந்த காலை
வழிப்போக்கர்கள் எல்லோரும் 
நின்று இளைப்பாறி 
தின்று தீர்த்து 
எதுக்கும் உதவுமென்று 
ஒருதுண்டு பட்டையை 
உரித்தெடுத்துச்செல்கின்றார்கள் 
உயிர் வாயுவை உட்கொண்டு
மரணவாயுவை 
துப்பிவிட்டுச்செல்கின்றார்கள் 
காப்பான் இல்லா மரம் 
வறண்ட கண்களுடன் கம்பலையுமாய்
கைகளைப்பிசைந்து கொண்டு 
மாரி ஒன்றுக்காக மனதில் வேள்வி செய்கிறது!

முதல் வேர்
மூலவேர் அடியூற்றுவரை ஓடியது
ஆந்த ஜீவ விழுதும் அழுகின்றது!

அடியைத்தறித்தால்
அது தழைக்க நாளாகும்
ஆனால் சாகாது 
புதுக்கிளை வளர்த்தலும் 
சாத்தியப்படாது !

என்ன செய்யலாம் 

சித்தாந்தங்கள் மாறவேண்டும்
ஒற்றுமை ஓங்க வேண்டும்
யாரும் எதிரியில்லை 
யாவரும் நண்பர்களே !

அடகு வைத்தவற்றை 
மீட்டுக்கொள்ளவேண்டும் 
ஒத்தியும் குத்தகையும் 
இனித்தேவையில்லை !

பலன்தரும் மரத்துக்கு 
வளம் தேவை ,உரம் தேவை 
சுத்திப்பாத்தி பிடிக்கணும் 
நல்ல பாசனம் செய்யணும் 
களை பிடுங்கணும் 
சில கவரகற்றனும் !

ஒட்டுண்ணிகளை 
எட்டவே வைக்கணும் 
மாட்டுச்சாணியை 
கொட்டிக் கலைக்கணும்!

மரங்கார் மாடுகளை 
கிட்டத்திலெடுககாமல்
எட்டக்கணுவிலே 
ஓட்டக்கட்டணும்!

படுகின்ற கந்தாகினும் 
அதை உருப்படவைத்து
வெறும் பற்றைகளெல்லாம்
வெட்டியழிக்கணும்! 

நாளைய சந்ததி நலமாய் இருக்கணும்
ஏழை எளியதுகள் இல்லாது போகணும் 
கோழைகளல்ல நாங்கள் என்று
கோஷமாய் நின்று சொல்லியும் காட்டனும்! 

No comments

Powered by Blogger.