Header Ads



ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்துள்ள 4 கேள்விகள்...!

கொழும்பில் மகளிர் அணியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அதன் போது அரசாங்கத்திடம் நான்கு கேள்விகளை தொடுத்தார்.

இதற்கமைய ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரிற்காக அமெரிக்கா சென்ற போது புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை சந்தித்து யார்?

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் விடுதலைப் புலிகள் தடை நீக்க வழக்கில் அரசு தலையிடாமைக்கான காரணம் என்ன? 

இதன் பின்பாவது இவ்வழக்கில் அரசு தலையிடுமா ? 

விடுதலைப் புலிகளிடம் அமெரிக்காவில் இருக்கும் 300 பெற்றோல் நிலையங்கள், 20 கப்பல்கள் தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? 

என்ற நான்கு கேள்விகளை அரசிடம் தொடுத்த எதிர்க்கட்சி தலைவர் இக் கேள்விக்கு உடனடியாக பதிலை அரசு தர வேண்டும் என்றும் கோரினார். 

கொழும்பு மேயரின் வாசஸ்தலத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மகளிர் அணியுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புலம்பெயர் அமைப்புக்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியாக பொய் பிரசாரங்களை அரசாங்கம் செய்து வருகிறது. நான் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த போது ஐ.தே.க. வின் இலண்டன் கிளை பிரதிநிதிகளையே சந்தித்தேன். ஆனால் எனக்கு எதிராக  உண்மைக்கு புறம்பான செய்திகளை ஆளும் தரப்பினர் செய்து வருகின்றனர்.

புலம்பெயர் தமிழர் அமைப்பினை தான் சந்திக்க விரும்பினாலும் என்னுடன் நட்புறவை வளர்க்க அவர்கள் விரும்பவில்லை. புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே ஒட்டி உறவாடி வருகின்றார். 

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்து என்னை தோற்கடிக்க முயற்சித்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு உடன்படவில்லை. இந்நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ புலம் பெயர் தமிழர் அமைப்பின் உதவியை நாடி ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடித்தார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலை புலிகள் மீதான தடை நீக்க  வழக்கில் அரச தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் என்ன? எனவே இந்த வழக்கில் இன்னும் 3 மாதங்களில் மேன்முறையீடு செய்யாவிடின் விடுதலை புலிகளின் அமைப்பினுடைய பணங்கள் கே.பி.யினுடைய கணக்கிற்கு வந்து விடும்.

எனவே விடுதலை புலிகளின் உடைமைகளை பங்கு கொள்ளும் நோக்குடனா இந்த வழக்கில் அரசு தலையிடவில்லை.

இந்நிலையில் விடுதலை புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 20 கப்பல்களில் 18 இந்தோனேஷியாவில் இருப்பதாக தெரிய வருகிறது. அவ்வாறாயின் ஏன் இவற்றை இலங்கை அரசினால் பெற முடியவில்லை? 

எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறது அரசு. யுத்தத்திற்கு பின்பு இலங்கைக்கு புலம்பெயர் தமிழரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது நான் அல்ல.

எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசிடம் நான்கு கேள்விகளை தொடுக்கிறேன்.

ஐ.நா. பொது சபை கூட்டம் அமெரிக்காவில் இடம்பெற்ற வேளை புலம்பெயர் தமிழர் அமைப்பை சந்தித்தது யார்? ஐரோப்பிய நீதிமன்றின் விடுதலை புலிகள் தடை நீக்க வழக்கில் இலங்கை அரசு தலையிடாமைக்கான காரணம் என்ன? இதன் பின்பாவது தலையிடுமா? மேலும் விடுதலை புலிகளின் அமெரிக்காவிலுள்ள 300 பெற்றோல் நிலையங்கள் மற்றும் 20 கப்பல்கள் தொடர்பில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தொடர் கேள்விகளை எழுப்பி இதற்கான பதிலை உடனடியாக தர  வேண்டும் என கோரினார். 

No comments

Powered by Blogger.