Header Ads



இலங்கை முஸ்லிம்கள் குறித்து, இங்கிலாந்தில் கலந்துரையாடல்..!

ஸ்ரீ லங்கா முஸ்லீம் கவுன்சில் ஸ்தாபக தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் மீடியா போரத்தின்  தற்போதய தலைவரும் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என் எம் அமீன் அவர்கள் இங்கிலாந்து ஹெரோ வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் கடந்த சனிக்கிழமை 27/09/2014 அன்று சந்திப்பொன்றை நடாத்தினார்.

இச் சந்திப்பானது மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் (SLMCC) இல் குறித்த தினம் மக்ரிபுத் தொழுகையைத் தொடர்ந்து ஹேரோ பள்ளிவாயல் இமாம் அதாவுர் ரஹ்மான் மவ்லவி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றதுடன் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் ஊடகத் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான  அஷ் ஷெய்க் பாசில் பாரூக் அவர்களும் சகோதரர் அமீன் அவர்களுன் சேர்ந்து குறித்த சந்திப்பில் கருத்துக்களை முன் வைத்தார்.

அண்மைக் காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக நடைபெற்று வரும் இனவிரோத செயற்பாடுகளின் தற்போதைய யதார்த்த நிலை பற்றி தெளிவு     படுத்துவதும் இலங்கையிலும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழுகின்ற இலங்கை முஸ்லிம்கள் குறித்த இனவிரோத செயற்பாடுகளை வெற்றி கொள்வதில் எவ்வாறான அணுகுமுறைகளைக் கடை பிடிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதுமே இச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. 

அங்கு தமது கருத்துக்களை வழங்கிய சகோதரர் அமீன் அவர்கள் குறித்த இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் மிகச் சிறிய குழுக்களே செயற்படுவதாகவும் நாட்டில் வாழும்  பெரும்பான்மையான பௌத்த சகோதரர்கள் இன்று வரை முஸ்லிம்களுடன் சுமூகமான உறவைப் பேணியே வருகின்றனர் என்பதை முஸ்லிம் சமூகம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறித்த இனப் பிரச்சினையை கட்டுப் படுத்துவதிலும் மேலும் வளர்ந்து விடாமல் தடுப்பதிலும் எமது சமூகம் மிகவும் நிதானமாகவும் சாணக்கியத்துடனும் செயற்பட வேண்டி இருப்பதுடன் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்துடனும் நாட்டின் அனைத்து சமூகங்களுடனும்  நல்லுறவைப் பேணி சகவாழ்வை ஏற்படுத்திக் கொள்வதே  சிறந்த தீர்வாக அமையும் என்பதையும் அங்கு வழியுறுத்தினார்.

அதே வழிமுறையைக் கையாண்டே அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் கவுன்சிலும் ஷூரா சபையும் பயணித்துக் கொண்டிருப்பதாக சுற்றிக் காட்டிய அமீன் அவர்கள் புலம் பெயர் இலங்கை  முஸ்லிம்கள் குறித்த இனவாதப் பிரச்சினை விடையங்களில்  தீர்வை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றியே தமது செயற்பாடுகளை அமைத்துக்  கொள்வதுடன் நாட்டையும் நாட்டின் இறையாண்மையையும் பாதிக்காத வகையிலேயே காய் நகர்த்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

தெளிவான, அடிப்படையான எவ்விதக் காரணங்களும் இன்றியே முஸ்லிம்களின் மத விவகாரங்கள், உரிமைகள், ஆடை, கலாச்சாரம், பொருளாதாரம் என அனைத்தும் இனவாதிகளால் குறிவைக்கப் படுவதாகவும் வாரா வாரம் அவர்கள் ஊடகங்களை ஒன்று  கூட்டி  முஸ்லிம்களுக்கு எதிராக சுமத்தி வருகின்ற அபாண்டங்கள் பற்றிய  யதார்த்த நிலையை பெரும்பான்மை சமூகம் வரை கொண்டு செல்லக் கூடிய அளவிலான எந்தவொரு ஊடகமும் எமது சமூகத்திடம் இல்லாதிருப்பது துரதிஷ்டமே  என்றும் சுற்றிக் காட்டிய அமீன் அவர்கள் 49 வானொலி சேவைகளும் 18 தினசரிப் பத்திரிகைகளும் 19 தொலைக் காற்சி சேனல்களும் நாட்டில் இருக்கின்ற போது அதில் ஒன்று கூட நாட்டு முஸ்லிம்களுக்கு சொந்தமானதாக இல்லாதிருப்பதுடன்  முஸ்லிம்கள் ஊடகத் துறையில்  இன்று வரை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருப்பதாக எடுத்துரைத்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அஷ் ஷெய்க் பாசில் பாரூக் அவர்கள் ஜம் இய்யத்துல் உலமா உள்ளிட்ட குறித்த முஸ்லிம் அமைப்புக்கள் இனப் பிரச்சினை விடையத்தில் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் இஸ்லாத்துக்கும் நாட்டு முஸ்லிம்களுக்கும் எதிராக அண்மைய காலங்களில் முன்வைக்கப் பட்டு வருகின்ற இட்டுக் கட்டுகளுக்கும் விமர்சங்களுக்கும் தகுந்த பதில்களை வழங்கும் விதத்தில் சிங்களப் பாஷையில் ஜம் இய்யத்துல் உலமாவினால் புத்தகங்கள் தொகுக்கப் பட்டு வருவதாகவும் குறிப்பிட்டதோடு கல நிலவரங்களைக் கருத்திற் கொண்டு அதற்கேற்றவாறு நாம் முயற்சிகளை மேற்கொள்கின்ற போது அதனைப் புரிந்து கொள்ளாத எமது சகோதரர்கள் சிலர் ஜம் இய்யஹ்வையும் முஸ்லிம் கவுன்சிலையும் ஷூரா சபையையும் தவறாக விமர்சித்து வருவது கவலைக்குரியதே எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.