Header Ads



தலைவர் காட்டிய தலைவர், தலைவரைக் காட்டிக் கொடுக்கிறாரா..?

(நவாஸ் சௌபி)

அவல வாழ்வு வாழத்தான் முஸ்லிம் காங்கிரஸை கட்டி வளர்த்தோமாவென மக்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆதங்கப்பட்டதோடு, அடுத்த தேர்தலில் இவற்றுக்கு தீர்ப்பு பெறுவதாகவும் ஒலுவில் உயர்ச்சிப் பெருவிழாவில் மார்தட்டிப் பேசியிருக்கிறார் தலைவர் ரவூப் ஹக்கீம். 

இடத்திற்கிடம் ஏற்றவாறு பேசுவதில் ஹக்கீமுக்கு நிகர் ஹக்கீமேதான் என்றவகையில் தனது சாணக்கியமான பேச்சுக்களை ரவூப் ஹக்கீம் பேசிவருவது வழக்கம். தலைவர் இவ்வாறு பேசுவதை  விமர்சிக்கின்ற பலரும் கிழக்கில் ஒரு பேச்சு, வடக்கில் ஒரு பேச்சு, கொழும்பில் ஒரு பேச்சு, தமிழில் ஒன்று சிங்களத்தில் ஒன்று என்று இதனைச் சுட்டிக்காட்டுவதுமுண்டு.

இந்தவரிசையில்தான் தற்போது ஊவாவில் ஒரு பேச்சு, கிண்ணியாவில் ஒரு பேச்சு, ஒலுவிலில் ஒரு பேச்சு என்று கடந்த வாரங்களாக ரவூப் ஹக்கீம் தனது மேடைப் பேச்சுக்களை பேசியிருக்கிறார். இந்தப் பேச்சுக்களில், தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நடந்திருக்கிறது என்பதை நன்கு உணர்ந்துகொண்ட ஒரு தலைவராகத் தான் இருப்பதை அவர் வெளிக்காட்டவும் முனைந்திருக்கிறார். 

இத்தகைய வெளிப்படுத்தலில் ஒன்றாக ஒலுவில் மேடையில் ஹக்கீம் பேசுகையில் ...

ஒலுவிலில் பல்கலைக்கழகம், துறைமுகம் போன்ற பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அவை இப்பகுதி மக்களின் விடிவுக்கு வழிவகுக்கவில்லை. மாறாக அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் ஒலுவில் கிராமத்தில் எவ்வளவுதான் அபிவிருத்தித் திட்டங்கள் வந்தாலும் ஒலுவில் பல்கலைக்கழகம்,, ஒலுவில் துறைமுகம் என்று நாமம் சூட்டப்பட்டாலும் அவற்றுள் அனுபவிக்க எதுவுமில்லை என்கின்ற ஒரு கவலை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

என்று மக்களில் ஒருவராக இருந்து ஹக்கீம் பேசிய மேற்படி பேச்சானது மக்களின் கவலையை உணர்ந்த ஒரு தலைவராக அவரைக் காட்டியிருக்கிறதோ இல்லையோ மாறாக ஒலுவில் மக்களுக்கு துரோகம் செய்த ஒருவராகப் பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களைக் காட்டிக் கொடுத்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிய முடிகிறது.

ஏனெனில் ஒலுவில் துறைமுகம் மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகம் இரண்டும் மறைந்த பெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் பெரும் கனவாக இருந்து அவரது சிந்தனையால் வடிவம்பெற்று செய்து முடிக்கப்பட்ட பிரமாண்டமான அபிவிருத்திப் பணிகளாகும். அவ்வாறு இருந்தும் இன்று அவை இரண்டும் அப்பகுதி மக்களின் விடிவுக்கு வழிவகுக்கவில்லை. மாறாக அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது என்றெல்லாம் ஹக்கீம் ஒலுவில் மண்ணிலேயே நின்றுகொண்டு பேசினால். இது யார் மீது போடுகின்ற பழி. இதற்கு காரணமானவர் யார் என்ற கேள்வியை கேட்டால் ஹக்கீம் யாரைச் சொல்லுவார். 

தலைவர் காட்டிய தலைவர் என்று ஒரு துண்டுப் பிரசுரத்தின் மூலம் தன்னை ஒரு தலைவராகக் காட்டிக்கொண்ட ஹக்கீம் அந்த பெரும் தலைவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து இவ்விரு அபிவிருத்திப் பணிகளையும் அப்பிரதேச மக்களுக்கு சரியாக பெற்றுக் கொடுக்காமல் ஆட்சி அமைக்கின்ற அரசுகளுக்கு கொத்தடிமைகளாக இருக்கின்ற வக்கத்த அரசியலைச் செய்துவிட்டு இப்போது வந்து முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு ஒலுவில் மக்கள் இவ்விரு அபிவிருத்திகளாலும்  கவலையைத்தான் கண்டார்கள் அவற்றுள் அனுபவிக்க ஒன்றுமில்லை என்றால் பெரும் தலைவர் செய்த இவ் அபிவிருத்திகள் ஒலுவில் மக்களை வாட்டிவதைப்பதற்குத்தான் என்பதை ஹக்கீம் சுட்டிக்காட்டுவதாகவே அமைகிறது. 

பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்ள் தூரநோக்கோடு சிந்தித்து உருவாக்கிய துறைமுகம், பல்கலைக்கழகம் ஆகிய இரண்டையும் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொத்தாக கொண்டு அதனை மேலும் மேலும் அபிவிருத்தி செய்து இச்சமூகத்தின் பயன்பாட்டிற்கு பொருத்தமான ஒன்றாகவும் பெறுமதியுடைய ஒன்றாகவும் அவற்றை உருவாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டிய ஹக்கீம்,  அந்தக் கடப்பாட்டை உணராமல் இவை இரண்டும் ஒலுவிலில் ஏற்படுத்தப்பட்டிருக்க கூடாது என்ற வகையில் பெரும் தலைவரையே குற்றவாளியாக்குவது போல் பேசுவது எந்தவகையில் நியாயம்.

ஒலுவிலில் தனது மையத்தை அடக்கம் செய்ய வேண்டும் என்று பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் நேசித்த மண்தான் ஒலுவில் மண். அந்த மண்ணிலே நின்று கொண்டு அந்த மக்கள் இந்த அபிவிருத்திகளால் அல்லல் படுகிறார்கள் ஒலுவில் துறைமுகம் காரணமாக இப்பிரதேசத்திலுள்ள கடற்கரையைக் கூட கடல் கொண்டு செல்கின்றது. அதனால் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மாற்றீடாக ஆறுதலுக்காவது அரச தொழில் வாய்ப்புகளில் இக்கிராமத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல் புறக்கணிப்பு நடக்கிறது. 

என்று இப்பொழுது ஒப்பாரி வைப்பதில் என்ன புன்னியம் இருக்கிறது. தான் அமைச்சராக இருந்த ஆட்சிக் காலங்களில் இந்த மக்களுக்காக தான் இதனை முன்னின்று செய்யாத நிலையில் இந்தக் குற்றத்தை யார் மீதும் போடாமல் தானே ஏற்றுக்கொண்டு ஹக்கீம் தனது முகத்துக்கு நேரே தன் விரலை நீட்டிப் பேச வேண்டும். அத்துடன் இத்தகைய பணிகளைத்தான் முதன்மைப்படுத்திச் செய்ய வேண்டும் என்றும் தலைவர் காட்டிய தலைவரிடம் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

இது ஒரு புறமிருக்க, இன்று ஒலுவில் மக்களுடன் இவ்வளவு பாசமும் பற்றும் வைத்துப் பேசும் இதே தலைவர், கடந்த 2013.09.01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் துறைமுகம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்தவைக்கப்படும் விழா அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெறவில்லை என்பதற்காக ரோஹித அபேவர்த்தனவையும் அழைத்து வந்து தனது பெயரும் அந்த அழைப்பிதழில் வரவேண்டும் என்பதற்காக இரண்டாவது அழைப்பிதழை அதற்காக அச்சிட்டு தனது கட்சிக்காரர்களுக்கு அதனை வழங்கி தனது தலைமைத்துவ வல்லமையை காண்பித்த ஹக்கீமுக்கு அப்போது இத்துறைமுகத்தால் ஒலுவில் மக்கள் படும் துன்பமும் துயரமும் தெரியாமலே போனதா?

அழைப்பிதழில் தனது பெயரில்லை என்பதற்காக அதன் அமைச்சரை அழைத்துவர முடிந்த ஹக்கீமுக்கு துறைமுகத்தால் ஒலுவில் மக்கள் படுகின்ற அவலங்களை ஒரு அமைச்சரை அழைத்துவந்து ஏன் காட்ட முடியாமல் போனது. அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான வாழ்வாதாரங்களையும் ஏன் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது.  

அப்போதே இந்த துறைமுகத்தாலும் ஒலுவில் அபிவிருத்தியாலும் இப்பிரதேச மக்களுக்கு எந்தப் பயனையும் அனுபவிக்க முடியவில்லை என்று மஹிந்த அரசுடன் பேசி அதற்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தவிதமான அக்கறைகளையும் எடுக்காமல், பெயரில்லாத அழைப்பிதழில் தன் பெயரை இடுவதற்கு முண்டியடித்து அதை இட்டுக்கொண்டு மஹிந்தவுடன் வந்து துறைமுகத்தையும் திறந்துவிட்டுச் சென்று இப்போது இந்த அபிவிருத்திகளால் ஒன்றுமில்லை என்று காலம் கடந்த ஞானம் பெற்றதுபோல் கதை சொல்வதில் என்ன பயனிருக்கிறது.  

இதில் இன்னுமொரு வருந்ததக்க விடயம் துறைமுகத் திறப்பு விழா நினைவுக் கல்லில் அஷ்ரஃபின் பெயர் பொறிக்கப்படவில்லை என்பதாகும். கிழிந்துபோகின்ற அழைப்பிதழில் தங்கள் பெயரை பதிய எடுத்த முயற்சியைக் கூட வரலாறாகிப் போகும் கல்லில் பெரும் தலைவர் அஷ்ரபின் பெயரைப் பதிக்க எடுக்கவில்லை என்பதையும் தற்போதுள்ள தலைவர் காட்டிய தலைவர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒலுவில் துறைமுகத் திறப்பு விழாவில் அதாஉல்லாவும் ஹக்கீமும் தங்களது அரசியல் பலத்தைக் காட்ட முட்டி மோதி கண்ட இடமெல்லாம் கட்டவுட்களும் சாத்தினார்கள். அதில்கூட தலைவருக்கு ஒரு கட்டவுட் வைக்காமல் தங்களை துறைமுகத்தின் கப்பல்களாகக் கருதி கட்டவுட்களை பெரிதாகவே நிறுத்தினார்கள் இப்படியெல்லாம் துறைமுகத்தை திறந்துவைத்த ஹக்கீம் இந்த மக்களின் நிலையை அவர்களின் அவலங்களை அப்போதெல்லாம் நினைத்தும் பார்க்காமல் இப்போது வெள்ளைக் கொடி பிடித்து நிற்பது எதற்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வும் நல்ல தீர்ப்பும் கொண்டுவருவேன் என்ற ஏமாற்று நம்பிக்கையை வழங்கி வாக்குப் பெறுவதற்கா? 

இதனடிப்படையிலேயே அவர் அன்று தனது பேச்சை முடிக்கும் போது 'எனவே இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் அடுத்த கட்ட அரசியலின் முக்கியமான அம்சம் என்பதனை நாம் உணர்ந்துள்ளோம். அடுத்த கட்டமாக ஒரு தேர்தல் வருகின்ற போது இவற்றையெல்லாம் தீர்ப்தற்கான ஒரு வியூகம் வகுக்கப்பட வேண்டும். அந்த வியூகம் எவர் வந்தாலும் இந்த பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருவதற்கான பொறுப்பை அந்த தலைமை ஏற்க வேண்டும் என்பதில் நாம் விடாப்பிடியாக இருப்போம் என்கின்ற செய்தியை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.' என்றவாறு முடிக்கிறார்.   

இப்படி ரவூப் ஹக்கீம் தலைவராக வந்த காலத்திலிருந்து பேசிய மேடைகளில் இதுவரை வகுத்த வியூகங்களை எடுத்தால் பத்து நாட்டை ஆளலாம் அந்தளவிற்கு ஹக்கீம் வியூகங்களை வகுத்திருக்கிறார். ஆனால் அந்த வியூகங்களால் முஸ்லிம் சமூகம் அடைந்த பயன் எதுவென்றும் தெரியாது. ஆனாலும் அவர் தொடர்நதும் தனது வியூகங்களை வகுத்துக்கொண்டே வருகிறார். உண்மையில் ஹக்கீம் ஒரு வியூகத் தலைவரே...!!

1 comment:

  1. " சலசலப்பு தேவையில்லை பணியாரம்தான் தேவை " என்பர் நம் முன்னோர்.

    ஆனல் இக்கட்டுரையின்படி இதில் விமர்சிக்கப்பட்டுள்ளவருக்கு,

    " சலசலப்புத்தான் தேவை பணியாரமல்ல " என்பதனை அவர்களது கடந்த கால அரசியலில் நிருபித்துள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.