Header Ads



பதுளை முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள் - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

பதுளை மாவட்ட முஸ்லிம்கள் தேர்தலில் நல்லிணக்கத்தை வலியுறுத்தியுள்ளதோடு அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படும் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றார்கள்

நேற்று வெளியான 2014 ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாரிய முன்னேற்றத்தையும் மக்கள் ஆதரவையும் கொடுத்திருக்கிறது. கடந்த மாகாணசபைத் தேர்தலைவிட இம்முறை 1 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஐ.தே.க பெற்றிருக்கிறது. அந்த வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பங்காளிக்கட்சியாக இருந்து உழைத்ததில் மகிழ்ச்சி அடைகிறது.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் எம்முடைய செய்திகளை ஏற்று எம் மீது நம்பிக்கை வைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த, அதனை ஆதரித்த, அதற்காக உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நடந்து முடிந்துள்ள ஊவா மாகாணசபைக்கான தேர்தலில் பதுளை மாவட்ட முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் புத்திசாலித்தனமாக  செயற்பட்டதன் மூலம் அம்மாவட்ட முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கிடையிலான நல்லினக்க சகவாழ்வை இத்தேர்தலில் மீண்டுமொரு முறை வலியுறுத்தியுள்ளதோடு அரசியல் ரீதியாக தாம் தனிமைப்படுத்தப்படுவதில் இருந்தும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வரும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சந்தர்ப்பவாத முஸ்லிம் கூட்டணியை பதுளை முஸ்லிம்கள் நிராகரித்துமுள்ளார்கள்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மூன்று முக்கிய விடயங்களை வலியுறுத்தி இம்முறை ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் ஆதரவு வழங்கியது. தூர நோக்குடனும், பதுளை மாவட்ட முஸ்லிம்களின் நிலை குறித்துத் தெளிவான பார்வையுடனும், தேசிய அரசியல் நிலைமைகளை வெகுவாகக் கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டது. 

பிரதேசத்தின் ஏனைய சமூகங்களுடனான நல்லிணக்கம் இனரீதியாக ஊவா முஸ்லிம்கள் அரசியலில் தனிமைப்படுத்தப்படும்  அபாயத்தைத் தவிர்த்தல் அத்தோடு ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றினை உறுதி செய்தல் என்பனவே இத்தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மூன்று பிரதான இலக்குகளாக அமைந்திருந்தன. இந்த தேசத்தில் அனைத்து மக்களும் நன்மையடைகின்ற நல்லாட்சி முறைமையொன்று உருவாக வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப் பட்டு வளர்ந்து வருகின்ற ஒரு முற் போக்கு அரசியல் சக்தி என்பதன் அடிப்படையில் இந்தத் தேர்தல் கூட்டும் பிரச்சாரமும் அமைந்திருந்தன. எமது நோக்கங்கள் இரண்டினை நாம் இத்தேர்தலில் வெற்றிகரமாக அடையப்பெற்றிருக்கின்றோம். அதாவது சகோதர சமூகங்களுடனான முஸ்லிம்களின் சகவாழ்வு அரசியல் ரீதியாக வலியுறுத்தப்பட்டிருப்பதோடு, அவர்கள் இனரீதியாக அரசியலில் தனிமைப்படுத்தப்படுகின்ற அபாயத்திலிருந்தும் ஊவா முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். 

பதுளை மாவட்ட முஸ்லிம்கள் இந்த உடன்படிக்கையினையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு ஆதரித்திருக்கிறார்கள்.  ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவளிப்பதில் ஒரு அர்த்தமும் தூரநோக்கும் இருப்பதனை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். மிகக் கூடுதலான முஸ்லிம்கள் இம்முறை வாக்களிப்பில் பங்கேற்றுள்ளார்கள்.   பதுளை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்த அதே சந்தர்ப்பத்தில், முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னான்டோ உட்பட மாவட்டத்தின் ஏனைய தொகுதி அமைப்பாளர்களுக்கும் தம்முடைய வாக்குகளை வழங்கியுள்ளார்கள். இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியினை பதுளை மாவட்டத்தில் பெற்று 8 ஆசனங்களை தனதாக்கியிருக்கின்றது. இது முஸ்லிம்களுக்கு சாதகமான அரசியல் வெற்றியாகும். அண்ணளவாக முஸ்லிம்களின் 17000 வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் வேட்பாளர்களாகிய அஹமட் நஸீர் அவர்கள் 15686 வாக்குகளையும் வேட்பாளர் அமீர் அவர்கள் 15003 வாக்குகளைப் பெற்று  முறையே 11ம் 12ம் இடங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் தெரிவாகிய 8வது உறுப்பினர் 20064 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவராகிய அமீர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளை விட சுமார் 5000 வாக்குக்களை இம்முறை மேலதிகமாக பெற்றுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. அந்த வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இந்த வியூகம் பதுளை மாவட்ட முஸ்லிம்களை மேலும் ஒற்றுமைப்படுத்தி வலுவூட்டியிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன இணைந்த கூட்டமைப்பிற்கு 5045 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இறுதிக்கட்டத்தில் அதாவது தேர்தலுக்கு முன்னைய இரண்டு நாட்களுக்குள் (இவ்விரு நாட்களிளும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேர்தல் விதிகளை மீறும் செயலாகும்) வாக்குகளை விலை கொடுத்து வாங்கியமை, மற்றும்  சட்ட விரோத தேர்தல் பிரச்சாரங்கள் காரணமாகவே இவ்வாறானதொரு தொகை வாக்குகள் குறித்த கூட்டணிக்கு கிடைத்தன. நாம் தேர்தல் பிரச்சாரக் காலங்களில் குறிப்பிட்டது போல இந்த கூட்டணிக்கு அளிக்கப்பட்ட   வாக்குகள் இறுதியில் செல்லாக் காசாகவே இன்று மாறியுள்ளன. இவை ஐ.தே. கட்சிக்கு வழங்கப்பட்டிருக்குமேயானால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றினை மிக இலகுவாக உறுதிசெய்திருக்க முடியும். எனவே அரசாங்கக் கட்சிக்கு வாக்களிக்க விரும்பாத முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே. கட்சிக்கும் கிடைத்துவிடக் கூடாது என்பதனை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் முகவர்களாக பதுளையில் களமிறங்கிய முஸ்லிம் கட்சிகளின் தூர நோக்கற்ற நடவடிக்கை காரணமாகவே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை தோன்றியிருக்கிறது. 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வளர்ந்து வரும் பொறுப்பு வாய்ந்த  அரசியல் இயக்கம் என்றவகையில் பதுளை மாவட்டத்தின் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து நாம் முன்பை விடவும் அதிக கரிசனையுடன் செயல்படுகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியூடாக குறித்த பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் நாம் ஆராயவிருக்கின்றோம்.

அதே நேரத்தில் முஸ்லிம் மாகாண சபைப் பிரதிநிதித்துவதினூடாக எதிபர்க்கப்பாடும் அபிவிருத்திப் பணிகளை  தெரிவு செய்யப்பட்டுள்ள 8 ஐ.தே.கட்சி உறுப்பினகளினூடாக நாம் முடிந்தவரை பெற்றுக்கொடுப்பதட்கு அர்பணிப்புடன் செயட்படுவோம்.  எம்முடைய கருத்துக்களை ஏற்று, எம் மீது நம்பிக்கை வைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த, அதனை ஆதரித்த, அதற்காக உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் நம்பிக்கைகள் வீண்போகாத வண்ணம் மக்களுக்கு விசுவாசமான எமது அரசியல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் பதுளை மாவட்டத்தில் முன்னெடுப்போம் எனவும் இங்கு கூறி வைக்க விரும்புகின்றோம்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்காலத்தில்  வினைத்திறனோடு அமுலாக்கப்படும் எனவும் நாம் நம்பிக்கை வெளியிடுக்கின்றோம்.

மக்களுக்கு விசுவாசமான அரசியல் முறையொன்றினை உருவாக்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவோம். 

No comments

Powered by Blogger.