Header Ads



பிக்குகளின் அடாவடித்தனம் - ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

காணாமற்போனோரின் குடும்பத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்வில், அடிப்படைவாத பௌத்த பிக்குகளைக் கொண்ட குழுவினர் குழப்பம் விளைவித்தமை தொடர்பாக, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள், கண்டனம் தெரிவித்துள்ளன. 

மருதானையில் நேற்று முன்தினம், சவில் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, காணாமற்போனோரின் குடும்பத்தினர் பங்கேற்ற நிகழ்வு, வெளிநாட்டு இராஜதந்திரிகளின் முன்பாகவே குழப்பப்பட்டது. 

இதற்கு, அமெரிக்கா கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தது. 

இந்தநிலையில், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளன. 

30 இற்கும் மேற்பட்ட காணாமற்போனோரின் குடும்பத்தினர், தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் போதே இந்த நிகழ்வு இடம்பெற்றதாகவும், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் இராஜதந்திரிகள் முன்பாகவே இந்த நிகழ்வு குழப்பப்பட்டதாகவும், இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஒன்றுகூடும் உரிமையையும், கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து பயணத்தை மேற்கொண்ட காணாமற்போனவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், நான்கு ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

No comments

Powered by Blogger.