Header Ads



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ராவய பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி..!

மீண்டுமொரு தேர்தல் மோசடியினூடாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் ஆணையாளரை அச்சுறுத்தியும், வாக்கு எண்ணிக்கையில் மாற்றங்களை மேற்கொண்டும் அரசாங்கம் வெற்றியைப் பெற்றுக் கொண்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்டம் ஊடாக கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மூன்றாவது பதவிக் காலத்துக்குப் போட்டியிடவுள்ளார்.

எனினும் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கால அவகாசம் கொடுக்காமலும், தேர்தல் முறைகேடுகள் மூலமும் மீண்டுமொரு முறை வெற்றி பெற அரசாங்கமும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சிங்களப் புலனாய்வுப் பத்திரிகையான ராவய விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் தற்போதைய பதவிக் காலத்தின் நான்காம் ஆண்டு நிறைவின் பின்னரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியும்.

அதன் படி நவம்பர் 19ம் திகதியே ஜனாதிபதியின் நான்காண்டு பதவிக் காலம் நிறைவடைகின்றது.

அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலை சந்திக்க தீர்மானிப்பதில் அரசாங்கம் சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

முதலாவது சிக்கல் ஜனவரியில் இலங்கைக்கு வரவுள்ள பாப்பரசரின் விஜயமாகும்.

பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் எந்தவொரு நாட்டுக்கும் விஜயம் செய்வதில்லை என்ற வழமையை பாப்பரசர் கடைப்பிடித்து வருவதனால் அவரது வருகைக்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.

மறுபுறத்தில் எதிர்க்கட்சிகள் சுதாகரித்து, பரவலான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க இடமளிக்காத வகையில் தேர்தலை நடத்தி முடிப்பது தொடர்பாகவும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

தற்போதுள்ள சட்டக் கோவைகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடக்கம் 45 நாட்களுக்குக் குறையாமலும், 65 நாட்களுக்கு மேற்படாத கால எல்லைக்குள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

எனவே சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நவம்பா் 19ம் திகதி இரவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பல வேட்பாளர்களை எதிர்க்கட்சி வேட்பாளர்களாக களமிறக்கி, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதறடிப்பது அரசாங்கத்தின் இன்னுமொரு இலக்காகும்.

இவ்வாறான இன்னும் பல மோசடிகளின் ஊடாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றியைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. உண்மை எல்லோருக்கும் புரிய ஆரம்பிக்கின்றது. அராஜகத்தாலும் அடக்குமுறையாலும் மக்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள். சென்ற முறையே தேர்தலில் மோசடி செய்ததாக சொல்லப்பட்டது. இந்தமுறை என்ன செய்தாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதே அவர்களது முளு நோக்கமும். அதற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களை யாரும் நம்பாதீர்கள். நாட்டை சுடுகாடாக்கி விடுவார்கள். பெளத்தர்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளார்கள். அது எந்தளவு பரவ ஆரம்பிக்கின்றதோ அந்தளவு இவர்களது சரிவு..

    ReplyDelete

Powered by Blogger.