Header Ads



காட்டிக் கொடுத்தலும், கூட்டிக்கொடுத்தலும்..!

 (Atham Lebbe Ahamed Nifras)

புல்லுக் கட்டுகள் தமக்கு சரியாக பங்கிடப்படவில்லை என்று சில கறுப்பு ஆடுகள் ஓநாய்களிடம் போய் முறையிட்டு நீதிகேட்ட கதையாக முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. அதாகப்பட்டது - இந்த நாட்டில் இனச்சம்ஹாரம் ஒன்றிற்காக கத்திகளை தீட்டிக் கொண்டிருக்கும் பொதுபலசேனா இயக்கத்தை சில ஹஜ் முகவர்கள் சந்தித்திருக்கின்றனர்.   ஒரு சமூகத்தின் சமூக, சமய அரசியல் விடுதலை என்பது அந்த சமூகம் தூர்ந்துபோகும் வரைக்கும் அடைந்து கொள்ளப்படாமல் விடுமாயின், அந்த இனக்குழுமம் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். தமது வரலாறும் அவ்வாறு ஆகிவிடக்கூடாது என்று இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொரு கணம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசியலிலும் சரி, சமூகத்திலும் சரி, சமயம்சார்ந்த விடயத்திலும் சரி நிறைய 'கறுப்பு ஆடுகள்' இருக்கின்றன. உண்மையில் கறுப்பு ஆடுகள் பட்டிபட்டியாக வெள்ளையாடுகளுக்குள் மறைந்து கொண்டு சுற்றித்திரிகின்றன. 

நமக்குள் துரோகிகள் 

தமது சொந்த லாபங்களுக்காகவும் பொண்டாட்டி பிள்ளைகளை கார் பங்களாக்களுடன் வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவும் தமது சமூகத்தை காட்டிக் கொடுப்போரும் கூட்டிக் கொடுப்போரும் புதுசுபுதுசாக உருவாகிக் கொண்டிருப்பதால் இந்த சமூகத்தை ஒரு அங்குலம் கூட முன்னகர்த்த முடியாத கையறு நிலை ஏற்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளும், கடும்போக்கு இனவாதிகளுமே முஸ்லிம்களை பலி எடுத்தனர் என்றும் இனவாத இயக்கங்கங்களே நிகழ்காலத்தில் எமது பொது எதிரி என்றும் முஸ்லிம் சமூகம் இத்தனை நாளாக நினைத்துக் கொண்டிருக்கின்றது.  ஆனால் நிஜம் வேறு மாதிரியாக இருக்கின்றமை இப்போதே புலப்படுகின்றது. நமக்குள்ளேயே நிறைய துரோகிகள் இருக்கின்றார்கள். 'எவன் பொண்டாட்டி எவன்கூட போனால் நமக்கென்ன – நமக்கு நாலு காசு கிடைத்தால் போதும்' என்பது போல், இந்த சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தம்முடைய அரசியலும் வியாபாரமும் நிலைத்திருந்தால் போதும் என்பதற்காக எதிரிகளுடன்  உறவு கொண்டாடுகின்ற பலரை காலம் நமக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றது.  உங்களுக்குத் தெரியும்! எந்தவொரு சமூகத்தையோ அல்லது போராட்டத்தையோ பிரிப்பதற்கு எதிரிகளுக்கு இருக்கும் மிகச் சுலபமான வழி அதற்குள் இருக்கும் 'கறுப்பு ஆடுகளை' கண்டறிவதுதான். அவ்வாறானவர்களை தமது நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றால்போல் பயன்படுத்துவதன் மூலம் எதிரிகள் அந்த சமூகத்திற்குள் பிளவைவும் மோதலையும் உண்டுபண்ணி இலகுவாக காரியத்தை சாதித்துவிடுகின்றனர். இந்த யுக்தி உலகளவில் மிகப் பிரபலமாக கையாளப்படுவது மட்டுமன்றி, இலங்கையிலும் இவ்வாறான உதாரணங்கள் பலவற்றை கடந்தகால வரலாற்றில் காணலாம். ஆக, பொது எதிரியை தோற்கடிப்பதற்கு முன்னதாக இவ்வாறான களைகளை பிடுங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. 

முன்கதை சுருக்கம்

கடந்த சில வருடங்களாக ஹஜ் குழுவுக்கும் ஹஜ் முகவர்களுக்கும் இடையில் கோட்டா பங்கீடு தொடர்பில் பாரிய இழுபறி நிலவி வருகின்றது. இதனால் ஹஜ் யாத்திரையின் புனிதத் தன்மை தவணை முறையில் கெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இம்முறை 91 முகவர்களுக்கு இடையில் ஹஜ் குழுவினால் கோட்டா பகிரப்பட்ட முறைமை நியாயமற்றது என்று தெரிவித்து 10 ஹஜ் முகவர் நிறுவனங்கள் வழக்குத்தாக்கல் செய்திருந்தன. இதனை விசாரித்த நீதிமன்றம் நியாயமான அடிப்படையில் கோட்டாவை மீள பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மதவிவகார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவுக்கு அமைய பகிந்தளிப்பு மேற்கொள்ளப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆயினும் இலங்கையின் பிரச்சினையை மட்டும் சவூதி அரசாங்கம் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இங்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் பட்டியல் அனுப்பப்படும் வரைக்கும் காத்திருக்க வேண்டிய எந்தக் கடப்பாடும் சவூதிக்கு கிடையாது. ஆகையால், முன்னமே ஹஜ் குழுவினால் தயாரித்து அனுப்பப்பட்ட பட்டியலை அந்நாட்டு அரசாங்கம் அங்கீகரித்துவிட்டதாக அறிய முடிகின்றது. இதனால் முன்பு வழக்குத் தொடுத்த முகவர் நிறுவனங்கள் குழம்பிப்போயின. இந்நிலையிலேயே பொது பலசேனா அமைப்பின் பிரதிநிதிகளை குறிப்பிட்ட ஹஜ் முகவர்கள் சிலர் சந்தித்துள்ளமை பெரிய சர்ச்சையாக உருவெடுத்திருக்கின்றது. கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். தமக்கு நீதி வேண்டுமென்று கோருவதில் எவ்வித தவறும் இல்லை என்றாலும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றை நாடுவது முஸ்லிம் சமூகத்தின் உள்வீட்டுப் பிரச்சினையை வெளியுலகுக்கு பெருப்பித்துக் காட்டும் என்பதை அந்தப் புத்தி சொல்லிக் கொடுக்க வேண்டும். தமக்குள் இருக்கின்ற மாற்றுக் கருத்துக்களினால் முஸ்லிம்கள் இழந்து கொண்டிருப்பவைகள் ஏராளம். பல உரிமைகளை முஸ்லிம்களை இழந்ததற்கு காரணம் அவர்களது உள்வீட்டுச் சண்டையே அன்றி வேறெந்த சக்தியும் கிடையாது. 

சில வருடங்களுக்கு முன்னர் வெலிகமவில் ஒரு பள்ளிவாசலில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது தமக்கு இடைஞ்சலாக இருப்பதாக முஸ்லிம்களே முறைப்பாடு செய்தனர். கடைசியில் என்ன நடந்தது? எந்தப் பள்ளிவாசலிலும் இரவு வேளைகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த முறையில்தான் பிறை மற்றும் ஹஜ் விவகாரங்களுக்கும் அரசாங்கம் தீர்வு காணும் சாத்தியம் தொடர்;ந்து அதிகமாகிக் கொண்டே போகின்றது.  அப்படியான ஒரு நிலைமையில்,  கோட்டா பகிர்வுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தமை கூட தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. இப்பினும் ஹஜ் குழுவின் பக்கமும் தவறிழைக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதாலும் அந்த நடவடிக்கையில் தவறு காண இயலாது. ஆனால் பொது பலசேனாவுடனான சந்திப்பு இந்த வகையறாவுக்கு அப்பாற்பட்டது. 

திட்டமிட்ட சந்திப்பு

ஹஜ் முகவர்கள் குழுவொன்று கடந்த 20ஆம் திகதி ராஜகிரியவில் வைத்து பொது பல சேனா பிரதிநிதிகள் ஒரு சிலரை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் யார் யார் சந்தித்தார்கள் என்ற விபரம் உடனடியாக வெளியாகவில்லை. இருப்பினும் 'தொப்பி' தனக்கே அளவானது என்பதை உணர்ந்து கொண்ட செரண்டிப் ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் முஹம்மத் என்பவர் உடனடியாக 'திட்டமிட்ட சந்திப்பு எதுவும் இடம்பெறவில்லை' என்று மறுப்பறிக்கை விட்டார். தான் ராஜகிரியவில் வாகனத்தை நிறுத்திவிட்டு நிற்கும்போது தற்செயலாக அவ்வழியாக வந்த பொது பலசேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே, ஹஜ் விவகாரம் தொடர்பில் தன்னிடம் வினவியதாகவும் அவரது கேள்விகளுக்கு மட்டுமே தான் பதிலளித்ததாகவும் அவர் கூறி, தன்னை ஒரு குற்றமற்றவனாக காட்ட முயன்றார்.  வெறும்வாயையே மென்று கொண்டிருக்கும் பொதுபலசேனா, கைநிறைய அவல் கிடைத்தால் சும்மா விடுமா? அடுத்த நாள் முதல் வேலையாக ஊடக மாநாட்டை கூட்டி முகவர்களுடனான சந்திப்பு பற்றி விலாவாரியாக அறிவித்தது. 

இங்கு உரையாற்றிய டிலந்த விதானகே, 'முன்கூட்டியே நேரம் ஒதுக்கிக் கொண்டே முகவர்கள் சார்பில் 10பேர் எம்மை சந்திக்க ராஜகிரியவுக்கு வந்திருந்தனர். ஆரம்பத்தில் ராஜகிரியவில் சந்திப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. கடைசிநேரத்தில் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க வேறு ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டது. அக்குழுவுக்கு முஹம்மத் என்பவர் தலைமை தாங்கி வந்தார். ஹஜ் விவகாரத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுபலசேனா தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டுமென்றும் எம்மைக் கோரினர்' என்று எல்லாவற்றையும் விலாவாரியாக அறிவித்தார்.  அதுமட்டுமல்லாமல் மத விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியவற்றிடம் இருந்து ஹஜ் கோட்டா ஒதுக்கீடு தொடர்பான விபர ங்களை பெறும் முயற்சியிலும் இவ்வியக்கம் ஈடுபட்டுள்ளது என்பது பிந்திய செய்தி. மேற்படி சந்திப்பு பற்றி பொது பலசேனா வெளியிட்ட இத்தகவல் பொய் என்று முஹம்மத்தும் அவரது கூட்டாளிகளும் அறிக்கைவிடவும் இல்லை, இதனால் தமக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக வழக்குத்தாக்கல் செய்யவும் இல்லை. உண்மையாகவே திட்டமிட்டு சந்திக்கவில்லை என்றால் அவர்கள் கொதித்து எழுந்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக மீண்டும் தாம் சந்தித்ததற்கு நியாயம் கற்பிக்க முனைந்தார் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர். சாராயத்தை குடிக்கின்றவர்கள் 'இது சிறுநீரகத்தின் செயற்பாட்டுக்கு நல்லது' என்று கூறுவது போல் மிகவும் வேடிக்கையாக இருந்தது அவரது பேச்சு. 

வேடிக்கையான வாய்ப்பேச்சு

அவர் சொன்னார் - 'பொது பலசேனாவுடன் எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தொடர்பு உலமாக்களுக்கோ புத்திஜீவிகளுக்கோ கிடைக்காது. ஏனக்கு இது கிடைத்துள்ளது. இதன்மூலம் இச்சமூகத்திற்கு நல்லது நடக்கும்' என்று ஒரு உலகமகா கற்பனையை கூறியுள்ளார். கேட்கிறவன் கேணயன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்பார்கள் என்பது போலல்லவா இக்கதை இருக்கின்றது! மேற்படி முகவர்கள் திட்டமிட்டு சந்திக்கவில்லை என்று முன்னர் சொன்னதையும், பின்னர் எங்களுக்கிடையிலான உறவு முஸ்லிம்களுக்கு நன்மைகளை கொண்டு வரும் என்று இப்போது சொல்வதையும் நம்புவதற்கு இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் காதில் பூவைத்த படுமுட்டாள்களாக இருக்க வேண்டும்.  கடும்போக்கு சிங்கள சக்திகள் அதிலும் குறிப்பாக பொது பலசேனாவுடனான உறவை ஏற்படுத்துவது மிகச் சுலபம். ஒரு தொலைபேசி அழைப்பில் அதனை செய்யலாம். ஆனால் முஸ்லிம்கள் அதனை விரும்பவில்லை. முஹம்மத் மறைமுகமாக ஒத்துக்கொண்டது போல் புத்திஜீவிகள் இவ்வாறான உறவை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை. இவ்விடயத்தில் முஸ்லிம்களும் புத்திஜீவிகள் போலவே பொது பலசேனாவை கண்டால் விலகி நடக்கின்றனர். அவ்வியக்கத்துடனான உறவு எக்காலத்திலும் நன்மையைக் கொண்டு வராது என்பது இச்சமூகத்தின் கடைநிலை மூடனுக்கும் தெரிந்திருக்கின்றது. 

ஒருவேளை தற்செயலாக இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ஒரு புன்னகையுடன் அல்லது கைலாகுடன் விடைபெற்றிருக்க வேண்டும். டிலந்த இது பற்றிக் கேட்டால் 'அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். உங்கள் அக்கறைக்கு நன்றி' என்று கூறி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களை பிளவுபடுத்துவதற்கும் குழப்புவதற்கும் ஏதாவது கருப்பொருள் கிடைக்காதா என அலைந்து கொண்டிருக்கும் ஒரு இயக்கத்திடம் போய் உள்வீட்டு பிரச்சினைகளை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாக விளங்கப்படுத்தியமை, தனது பொண்டாட்டியின் நடத்தை சரியில்லை என்று அவளை அடைவதற்காக அலையும் ஒரு தெருப்பொறுக்கியிடம் கூறுவது போன்றது என்று வயதில் முதிர்ந்த ஒரு விமர்சகர் சொன்னார். என்னால் மறுதலிக்க முடியவில்லை.  செய்யத் தவறியது. ஹஜ் முகவர்களும் ஹஜ் குழுவும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். அத்தீர்;ப்பு மீறப்பட்டால் முகவர்கள் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு முஸ்லிம் சமூகத்தை வேரறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள, அநியாயத்திற்கும அட்டூழியத்திற்கும் பெயர்போன ஒரு கடும்போக்கு இயக்கத்தின் உதவியை நாடியது எதற்காக? இது மிகப் பெரிய வெட்கமும் சமூகத் துரோகமும் என்பதில் ஒரு அணுவளவேனும் மாற்றுக் கருத்தில்லை. 

ஹஜ் என்பது புனித கடமை. சமயத்தின் பெயரைக் கூறிக்கூறி அதில் இலாபம் உழைப்பதற்காக அக்கடமையை வியாபாரமாக்கியது கணிசமான ஹஜ் முகவர்களே. பொதுமக்கள் ஹஜ்ஜூக்கு செல்வதால்தான் முகவர்களின் வங்கிக் கணக்குகள் நிறைந்து கொண்டிருக்கின்றன. அவர்களது வியாபாரமும் வாழ்க்கையும் ஓடுகின்றது. ஆனால், தமக்கு எதிர்பார்த்த கோட்டா கிடைக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் டிலந்த விதானகேயிடம் காட்டிக் கொடுத்தது கலப்பற்ற வியாபார புத்தியாகும். ஒரு மூன்றாம்தர வியாபாரியை தவிர - சமூக அக்கறையுள்ளவனோ முஸ்லிம்களின் மானம் போய்விடக்கூடாது என நினைப்பவனோ சில இலட்சங்களுக்காக இப்படியொரு வரலாற்றுத் தவறை இழைத்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒன்று, முஸ்லிம்களே எம்மிடம் வந்து முறையிடுகின்றார்கள் என்று இத்தனை காலமும் பொதுபலசேனா சொல்லிக் கொண்டிருந்தது உண்மையோ என்ற எண்ணம் இப்போது எழத்தொடங்கியுள்ளது.  இது ஒரு திட்டமிட்ட சந்திப்பு. ஆனால் செரண்டிப் முகவர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் எல்லா முகவரகங்களும் இதில் பங்குபற்றவில்லை. அத்துடன் கிட்டத்தட்ட 80 முகவர் நிறுவனங்கள் தமக்கு கிடைத்த கோட்டாவை இந்த சமூகத்தின் நலனுக்காக பெரும் மனதுடன் ஏற்றுக் கொண்டு மௌனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது இங்கு கவனிப்பிற்குரியது. இவ்வாறான சந்திப்பு இடம்பெற்றதை எண்ணி கணிசமான முகவர்கள் மனம் வருந்துவதாகவும் தெரியவந்துள்ளது. 

எது எப்படியிருப்பினும், ஹஜ் விடயத்தில் முஸ்லிம்களுக்குள் முரண்பாடு இருக்கின்றது என்பது பிற தரப்பினருக்கு சொல்லப்பட்டுவிட்டது. பொது பலசேனா இதனை தமது நாளாந்த குறிப்பேடுகளில் இதனை குறித்து வைத்துக் கொள்ளும். ஹலால், அபாயா, அடிப்படைவாத குழுக்கள், பள்ளிவாசல்கள்.... என்ற பேசுபொருள்களின் பட்டியலில் அநேகமாக இனி ஹஜ்ஜையும் இவ்வியக்கம் இணைத்துக் கொள்ளும்.  ஹஜ் குழு  மற்றும் முகவர்களுக்கு இடையிலான முறுகல் காரணமாக ஏற்கனவே ஹஜ் குழுவின் பலம் குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில், ஹஜ் தொடர்பில் ஹஜ் குழுவும் முகவர்களும் இனிமேலும் ஆளுக்காள் வசைபாடிக் கொண்டிருப்பார்களாயின், எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற அடிப்படையில் இவ்விடயத்தை பொதுபலசேனா நன்றாக ஊதிப் பெருப்பித்துவிடும். இதன் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும். அதற்கான பெருமை (?) பொது பலசேனாவை சந்தித்தத முகவர்களை சாரும். 

கூட்டுக் கடமை

இந்நிலை தொடர்ந்தால் 'ஹஜ் விடயத்தில் நீங்கள் உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றீர்கள். இது ஒருபிரச்சினையாக இருக்கின்றது. எனவே இனிவரும் காலங்களில் அரசாங்க அதிகாரி ஒருவரே கோட்டாவை பகிர்ந்தளிப்பார்' என்று அரசாங்கம் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதன்படி பௌத்த சாசன அமைச்சின் செயலாளரிடம் அல்லது வேறு ஒரு சிங்கள அதிகாரியிடம் இதற்கான அதிகாரம் ஒப்படைக்கப்படலாம். இப்போது சமூக நலன்பேசும் முஹம்மத் போன்ற முகவர்கள் மட்டுமன்றி மொத்த முஸ்லிம் சமூகத்தின் ஹஜ் தொடர்பான பௌதீக தலைவிதியையும் சிங்கள ஆட்சிச் சூழலே தீர்மானிக்கும். இதற்கான சமிக்கையை பிரதியமைச்சர் காதரின் உரையில் காணலாம். 'இனிவரும் காலங்களில் ஹஜ் விடயத்தை அரசாங்கமே கையாளும்' என்று அவர் சொல்லியுள்ளார். 

எனவே இதனை இப்படியே விட முடியாது. இந்த கோட்டா பகிர்வை ஒரு சூத்திரத்திற்குள் கொண்டு வந்து ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். ஹலால் விவகாரம் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட பிறகு ஒதுங்கியிருக்கும் அல்லது அவ்வாறு காட்சிதரும் ஜம்மியத்துல் உலமா சபை இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பொது பலசேனாவை சந்தித்த முகவர்களை கண்டித்து அறிக்கை விட்டாச்சு. இனி நமது பணி முடிந்தது என்று இருந்துவிட முடியாது. 

இதுதவிர, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் போன்ற ஒரிரு சமூக அமைப்புக்களே எல்லாவற்றுக்கும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றது. ஊருக்கு நூறு சமூக, சமய அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடாத்த கூப்பிட்டால் தொப்பி, நீளச்சட்டை போட்ட நூற்றுக்கணக்கானோருடன் பல அமைப்புக்கள் களத்தில் குதிக்கின்றன. ஆனால் சமூகத்திற்கு அநியாயம் இழைக்கப்படுகின்றது என்ற நிலைமை வருகின்ற போது அவர்களது மார்க்கப்பற்றும் சமூக அக்கறையும் புறமுதுகு காட்டி ஓட ஆரம்பிக்கின்றது. 

ஆக, ஹஜ் என்ற முஸ்லிம்களின் புனித சொத்தை அரசியல்வாதிகளிடமோ அல்லது கடும்போக்கு சக்திகளிடம் அதனை அடகுவைக்க துணிந்துவிட்ட அற்ப வியாபாரிகளின் கைகளிலோ கொடுத்துவிட்டு வாழாவிருக்கும் சமூகமாக முஸ்லிம்கள் இருந்துவிடக் கூடாது. முதலில் கறுப்பு ஆடுகளும், களைகளும் கட்டுப்படுத்தட வேண்டும். 

நேருக்கு நேர் நின்று தாக்கும் எதிரிகள் பரவாயில்லை. 
கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகிகள் கவனம்.

1 comment:

  1. Iwarkalthan original munafiq kal aneethi nadanthu irunthal intha nattil intha ulakaththi neethi kidaikka wittal allahwin meethu poruppu saattivittu porumayaaka irukka wendum athuthan mumin ,muslimuku adayaalam bbs idam murappaadu saiwathakku bbs anna uyar neethimantrama allathu srilanka muslimkalin thalaima peedama? Panam panam entru walarnthawanukkallaam samuthayam thuchchsmaaka poiwittathu kanketta kurudanum bbs ta pohamaattan kadantha kaalankalil LTTE GOVERNTMENT SAMAATHANA KAALATHTHILUM KILAKKU MAAHAANATHTHIL MUSLIMKA SILARVIWWAARAAKA THALIPPATTA SILA KODUKKAL WAANKAL PIRACHCHINAIKALAI LTTE DAM MURAI IDDU NIYAAYAM KATPITHTHA WARALAARUM UNDU .IPPADIPPATTA SAMUKA THUROKIKALAI ULAMASAPAI ACJU ALATHTHU WISATANAI SAITHU KADUMAIYAANA THANDANAI KODUKKA WENDUM ALLATHU MURTHATH ENTRU ISLATHTHIL IRUNTHU VILAKKI WAIKKA WENDUM.PERUKKU MUN ORU PATTAM ALHAJ.KALLA THUROKIKALUKKU PANAMOKATHTHIL HAJJAJIKALAI EAMATTRIP PULAKKUM SAMUHA THUROKIKALAI POTHU MAKKALUKKU INAM KATTA WENDUM .IWARKALUKKU ENNATHAN ANEETHI NADANTHU IRUNTHAALUM IWARKAL BBS DAM PONATHAI MUSLIMKALUM BBS THARINTHU WAITHTHUKKUM EWARUM MANNIKKA MUDIYAATHU.SAMUHA THUROKIKAL IWARKALTHAAN.

    ReplyDelete

Powered by Blogger.