முஸ்லிம் காங்கிரஸூக்காகத் தலைவரா..? தலைவருக்காக முஸ்லிம் காங்கிரஸா..?
(நவாஸ் சௌபி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எப்போதும் முஸ்லிம் சமூகத்திற்குப் பாதுகாப்புடைய ஒரு உரிமைத்துவ அரசியலை முன்னெடுக்கும் தார்மீகப் பொறுப்புடன் தோற்றம் பெற்ற ஒரு கட்சியாகும். இது தலைவர் எடுக்கின்ற சரியான முடிவுகளிலும் தங்கியிருக்கின்ற ஒரு விடயமாகவும் பார்க்கப்படுகிறது. இதன்படி அக்கட்சி அப்பொறுப்பிலிருந்து எச்சந்தர்ப்பத்திலும் தவறாது இருக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலுள்ள நோக்கிலிருந்து விலகிச்செல்வதாக முஸ்லிம் காங்கிரஸின் செயற்டுகளும் அதன் தலைமை எடுக்கின்ற பொறுப்பற்ற முடிவுகளும் காணப்படுவது குறித்து அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்களும் மாற்றுக் கருத்துக்களும் எழுவதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத வகையிலும், சமூகத்தின் இருப்புக்கு ஒரு உத்தரவாதமில்லாத போக்கிலும் அரசியலை முன்னெடுக்கின்ற சமூக அக்கறையற்ற முடிவுகளை முஸ்லிம் காங்கிரஸூம் அதன் தலைமையும் எடுத்துவருவதனை தொடர்ச்சியாக காணமுடிகிறது.
எனவே, கட்சியின் செயற்பாடுகள் மற்றும் அதன் நம்பிக்கையற்ற முடிவுகள் குறித்து அவதானம் கொள்கின்ற ஒரு காலகட்டமாக இதனை நாம் கருத வேண்டியிருக்கிறது. இதில் சமூக நலனை மாத்திரம் முதன்மைப்படுத்துகின்ற அரசியலை முன்னெடுக்கின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இயங்க வேண்டிய அவசியத்தை அதன் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிந்திக்க வேண்டிய தேவையும் மிகைத்திருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் அதன் நோக்கத்தின் அடிப்படையில் சமூகக் கட்சியாக இயங்குவதில் தடையாகவுள்ள காரணிகளை நாம் அடையாளம் காணுகின்றபோது அதில் மிக முக்கியமாக சமகாலத்தில் தலைவரினால் எடுக்கப்பட்ட தான்தோன்றித் தனமான பல முடிவுளையும் நாம் குறிப்பிடலாம்.
ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் ஆரம்பத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டு பல பிரிவுகள் அதனுள் உருவானதற்கும் இத்தகைய தான்தோன்றித்தனமான தலைவரின் முடிவுகளும் பிரதான காரணமாக இருந்திருக்கிறது. தலைவரின் பொறுப்பற்ற முடிவுகளை மாற்ற முடியாமலும் தலைவரை மாற்ற முடியாமலும் கட்சியிலிருந்து வெளியேறுகின்ற முடிவுகளை எடுத்தவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் அதிகம் இருக்கின்றார்கள். (அவ்வாறானவர்களை நியாயப்படுத்தும் அர்த்தம் இதற்குள் இல்லை).
தற்போதுள்ள தலைவரினால் எடுக்கப்பட்ட நன்மையற்ற பல முடிவுகள் சமூகங்களினாலும் அரசியல் அவதானிகளாகும் இன்னும் ஏன் கட்சியின் உயர்பீடத்தினாலும் விமசிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணமாக தற்போதுள்ள அரசாங்கத்தின் ஆட்சியில் இணைவதற்கு 18வது திருத்தச் சட்டத்தினை ஆதரித்தனைக் குறிப்பிடலாம். இதனை தலைவர் ரவூப் ஹக்கீம் பல பகிரங்க மேடைகளில் தானே ஏற்றுக்கொண்டு தன் நாவாலேயே ஆதாரப்படுத்திப் பேசிப் புலம்பியுமிருக்கிறார்.
ஒரு கட்சியின் சமூகப் பொறுப்பு தலைவரின் முடிவில் தங்கி இருப்பது ஒரு வரலாற்றுத் தவறான முடிவை எடுப்பதற்கல்ல. மாறாக அதிலிருந்து கட்சியையும் சமூகத்தையும் காப்பாற்றுவதற்கான பயனுள்ள பல முடிவுகளையும் எடுப்பதற்கே ஆகும்.
ஆனால் இன்று பார்க்கின்ற போது பல சந்தர்ப்பங்களில் தலைவரின் முடிவு பிழையானது என்ற தோற்றத்தையை அளிக்கிறது. இதற்கும் ஒரு உதாரணமாக இறுதியாக எடுக்கப்பட்டிருக்கின்ற ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் முடிவினைக் கூறலாம். இத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டதில் இன்று உயர் பீடத்திலும் கட்சியின் முக்கிய தரப்பினர்களுக்கிடையிலும் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் தலைமையை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய இறுதி முடிவுகளின் பின்னால் கூறப்படுகின்ற தலைவரின் நியாயங்களும் சிலசமயங்களில் ஒரு நொண்டிச் சாட்டாகவே தெரிகிறது. 18வது திருத்தத்திற்கு ஆதரவளித்து அரசுடன் இணைந்ததற்கு காரணமாகத் தலைவர் கூறிக் கொண்டிருக்கும் நியாயம் கட்சியையும் கட்சியில் மிகுதமாக இருப்பவர்களையும் காப்பாற்றுவதற்காகத்தான் என்பதாகும். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து முக்கிய சிலர் அரசுடன் இணைந்துகொள்ளப் போகிறார்கள் என்ற ஆபத்தை நிறுத்துவதற்காக கட்சியை அரசுடன் இணையவைத்ததுதான் இதில் தலைவர் கூறும் வெளிப்படையான காரணம்.
இக்காரணம் எந்தவகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்? இதற்குமுன் கட்சியிலிருந்து இதைவிட முக்கியமானவர்கள் என்று கூறக்கூடியவர்கள் யாரும் பிரிந்துசெல்லவில்லையா? பேரியல்அஷரப், அதாஉல்லா, றிசாட்பதியுத்தீன், அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் பிரிந்துசென்று அமைச்சர்கள் ஆகவில்லையா? தனிக் கட்சி உருவாக்கி கட்சி வளர்க்கவில்லையா? அப்போதெல்லாம் அழிந்துபோகாத முஸ்லிம் காங்கிரஸ் இப்போது உள்ளவர்கள் பிரிந்து செல்வதனால் மட்டும் எப்படி அழிந்துபோகும் என்று ஹக்கீம் பயந்துகொள்ள முடியும்?
முஸ்லிம் காங்கிரஸில் இருந்தால் மட்டுமே தங்களால் அரசியலில் நிலைக்க முடியும் என்று நினைக்கின்றவர்கள் மட்டுமே இன்று முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்றார்கள். அந்த எண்ணம் மட்டும் அவர்களிடம் இல்லாதிருந்தால் சமகாலத்தில் இன்னும் எத்தனையோ பேர் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பார்கள். எனவே தற்போதைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து யார் பிரிந்து சென்றாலும் அது கட்சிக்கு இழப்பு அல்ல. பிரிந்து செல்கின்றவருக்கே அது பேரிழப்பாகும். என்ற அடிப்படையில் யார் பிரிந்து சென்றாலும் என்ன அமைச்சுப் பதவியைப் பெற்றாலும் கட்சியோடு மக்கள் இருக்கின்றார்கள் என்ற காரணத்தை முதன்மைப்படுத்தி தலைவர் ஹக்கீம் சமூகத்தை நிலைநிறுத்தும் வகையில் தனது முடிவை நியாயப்படுத்தி அரசுடன் இணையாது இருந்திருக்கலாம்.
ஆனால் தலைவர் இதற்கு மாற்றமாகச் சிந்தித்து கட்சியைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு அரசுடன் இணைந்ததால் இன்று முஸ்லிம் சமூகம் பெற்றுள்ள பயன் பெரும் அழிவுகளும் இழப்புகளும்தான். இன்று இதனை அறிந்து அரசுடன் இணைந்த முடிவு பிழையானது உடனே அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று அதன் உயர்பீடம் உட்பட சமூகமும் வலியுறுத்தும் இச்சந்தர்ப்பங்களிலும் அதனைச் செய்யாது அதற்கு தலைவர் கூறும் காரணம். இது அரசிலிருந்து விலகுவதற்கு உகந்த காலமல்ல அடுத்த வருட ஆரம்ப காலப் பகுதியில் எதிர்நோக்கவிருக்கின்ற தேர்தலுக்கிடையிலான 6 மாத காலத்தினுள் எதுவும் நடக்கலாம், அரசியலில் 6 மாதம் என்பது சாதாரண காலமல்ல என்றவாறு அமைந்திருக்கிறது.
இதனை ஒருவகையில் ஏற்றுக்கொண்டாலும், அண்மையில் அரசிலிருந்து விலகுவது தொடர்பாகக் கூறும் போது, அரசிலிருந்து வெளியேறினால் ஆசாத் சாலிக்கு நடந்த கதிதான் எனக்கும் நடக்கும் என்ற ஒரு புதுமையான கருத்தையும் இது தொடர்பாக ரவுப் ஹக்கீம் வெளியிட்டிருந்தார். ஒரு தலைவர் பேசுகிற பேச்சா இது? தற்போது ஹக்கீம் தலைவராக இருக்கும் இடம் எத்தகையது என்பதை யார் மறந்தாலும் அவர் மறக்கலாமா?
போராளிகளே புறப்படுங்கள் என்ற கவிதையில்
போராளிகளே புறப்படுங்கள்!
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இரைச்சல் அடைங்கிவிட்டதற்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பி விடக் கூடாது!
......
உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை
என்பதனை நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒருபோதும்
மரணிப்பதில்லை என்பதை
நான் சொல்லித் தரவில்லையா?
......
இந்தப் போராட்டத்தில்
சூடுபட்டாலும் வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றுதான்
நமது போராளிகள்
யாருமே மரணிக்கப் போவதில்லை
போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வெடுக்க நேரமில்லை!
இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்!
இப்படி ஒரு கவிதையை தன் கையாலேயே எழுதி அதன்படியே இந்த சமூகத்திற்காகவும் கட்சிக்காகவும் சகிதான பெரும் தலைவர் மர்ஹூம். எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இருந்த தலைமைத்துவத்தில் இருந்துகொண்டு, அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் ஆசாத்சாலியின் நிலைதான் எனக்கும் ஏற்படும் என்று ஹக்கீம் கூறும்போது அவரது நாவு கூசவில்லையா? அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் அதனை இந்த சமூகத்திற்காகவும் அதன் தலைமைக்காவும் அவர் தாங்கிக்கொள்வதுதானே தர்மமாகும். மாறாக அப்படி ஒரு நிலை ஏற்படக் கூடாது என்று அதற்காக சமூகத்தை அடகுவைப்பது எந்த வகையில் நியாயமாகும். இப்படி ஒரு தலைவராக இருப்பதானால் முஸ்லிம் காங்கிரஸூக்கு யார் வேண்டுமானாலும் ஒரு தலைவராக இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் இங்கு தேவை பொருத்தமான ஒரு தலைவராக இருப்பதுதான். அதற்கான ஒருவராக ரவூப் ஹக்கீம் இருக்கவில்லை என்று தெரிந்தும் கட்சி அழிந்துவிடக் கூடாது என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதனால் அவர் அந்தக் கதிரையில் தொடர்ந்தும் இருக்கிறார் என்றே கூற வேண்டி இருக்கிறது.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட அதன் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை முஸ்லிம் காங்கிரஸினால்தான் அரசியலில் நிலைக்கிறார்கள் தவிர அவர்களால் முஸ்லிம் காங்கிரஸ் நிலைக்கவில்லை என்பதே உண்மை. முஸ்லிம் காங்கிரஸை ஒரு சமூகக் கட்சியாக மக்கள் வாழ வைக்க வேண்டும் என்று எடுக்கின்ற உறுதியான முடிவினால்தான் அதிலுள்ள அரசியல்வாதிகள் அரசியலில் இருக்கிறார்கள்.
இதனால் தலைவருக்காக கட்சியா? கட்சிக்காகத் தலைவரா? என்ற குழப்பத்தில் இன்று முஸ்லிம் அரசியல் தடுமாறும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தலைவருக்காகக் கட்சி இல்லாமல் கட்சிக்காகவே தலைவர் இருக்க வேண்டும் என்பதே சமூக அரசியலின் அடிப்படையாகும். சுமூகக் கட்சி ஒன்றின் தலைவர் அவ்வாறுதான் இருந்தாக வேண்டும். மாறாக தனக்காக கட்சியை இழுத்துக்கொண்டு செல்லக் கூடாது.
இதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்கான சரியான முடிவினை எடுக்காத நிலையில் அதனை விமர்சிக்கின்றவர்களும் அதில் அதிருப்தியடைகின்றவர்களும் சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதாகவும், அடகுவைப்பதாகவும் குற்றம் சுமத்திவிட்டு அப்படியே இருந்துவிடுகிறார்கள் இதுஒருபோதும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகா மாறாது. இத்தவறுகள் எதனால் நடக்கிறது என்று அந்த இடத்திற்குச் சென்று அதனைத் திருத்த வேண்டிய அவசியங்களையும் நாம் உருவாக்க வேண்டும்.
அந்தவகையில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவுகளின் பின்னால் இன்று காணப்படுகின்ற பிரச்சினை மஹிந்தவுடன் இருப்பதா? ரணிலுடன் இருப்பதா? என்பதைச் சுற்றியே நகர்கிறது மாறாக அது முஸ்லிம்களின் உரிமைத்துவ அரசியலை அடையாளப்படுத்துகின்ற ஒரு தனித்துவக் கட்சியாக இருப்பது பற்றி மறந்துபோனதாகவே தெரிகிறது. முஸ்லிம் காங்கிரஸ் உருவான நோக்கத்தை நோக்கி அதனை அழைத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இன்றுள்ள தேசிய அரசியல் சூழமைவில் முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பான்மைக் கட்சிகளின் கூட்டுத் தொடர்பாகத்தான் சிந்திக்க வேண்டுமா? அதைவிடுத்து மாற்றமாக தனித்துவமாக இருப்பது பற்றி சிந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது? எதற்காக இன்னுமொருவரின் அடுப்பினுள் நமது மரம் விறகாக எரிய வேண்டும்?
.jpg)
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ அல்லது அவர் சார்ந்தவரோ இதற்கு பதில் கூரட்டம்.
ReplyDeleteஒரு ஆரோக்கியமான, பக்குவமான, உரிமைக்கு போராடும் குணமுள்ள கருத்தை தாங்கி நிற்கும் இந்த கட்டுரையை தந்த நவாஸ் செளபிக்கு மிக்க நன்றிகள்.
The present Muslim Congress is fraud and it leadersip is a way of deception.
ReplyDeleteOK boose.neenga yean katce ein leader poruppai eadukka kudathu?
ReplyDelete