கிண்ணியாவில் இஸ்ரேலுக்கு எதிராக தக்பீர் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(மூதூர் முறாசில்)
இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து திருகோணமலை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை ஓழுங்கு செய்த கண்டனப் பேரணி இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து கிண்ணியாவில் இடம்பெற்றது.
கிண்ணியா நகரத்தில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களிலிருந்து ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்த மக்கள் நகரசபை மைதானத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றடைந்தனர்.
அங்கு அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்தோடு இஸ்ரேலின் கொலைவெறியாட்டத்திற்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. கண்டன உரையும் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மனம் உருகி துஆப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரும் மகஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கென ஜம்மியதுல் உலமா சபை கிண்ணியா பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளது.
கிண்ணியாவில் இடம்பெற்ற கண்டனப் பேரணியில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் காஸா மக்களுக்கு ஆதரவாக இன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆப் பிரசங்கம் நடாத்தப்பட்டதோடு விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.




Post a Comment