முஸ்லிம்களின் தனித்துவ அரசியலும், பாராளுமன்றத்தில் நேரப் பிச்சை கேட்டலும்...!
(நவாஸ் சௌபி)
மக்களுக்குள்ள இறமையை அரச சபையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எனப்படுவர். இவ்வரைவிலக்கணத்திற்கு ஏற்றவகையில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் காணப்படுகின்றார்களா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி.
இக்கேள்வியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடந்த 2014 ஜூலை 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் சுயரூபம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திசாநாயக்க நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முன்வைத்த பிரேரணையின் போது முஸ்லிம் பிரதிநிதிகள் அளுத்கம, பேருவளை, தர்காநகர் வன்முறைகள் குறித்த எந்த வாதங்களையும் நியாயங்களையும் பாராளுமன்றில் குரல் பதிக்கவில்லை என்ற சமூக ஏமாற்றம் பலராலும் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பிரேரணை மீதான வாதப் பிரதிவாதங்கள் உண்மைக்குச் சமாதிகட்டுவதாக, முஸ்லிம் சமூகத்தை முழுமையாகக் குற்றம் சுமத்துவதாக இருந்த போதும், இவ்விவாதத்தின் போது சபையில் இருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் ஏன் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள்? என்றும், இன்னும் சிலர் இவ்விவாதத்தில் கலந்துகொள்ளாமல் ஏன் வெளிநடப்புச் செய்தார்கள்? என்றும் இதனை விமர்சிப்பவர்கள் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளமை ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இவ்வாறு முஸ்லிம் சமூகம் குறித்த முக்கிய விவாதம் ஒன்றில் முஸ்லிம் பிரதிநதிகள் கலந்துகொள்ளாது பேசாமடந்தையாக மௌனம் காத்தது வெட்ககேடான ஒரு விடயமாகும் இதனை மன்னிக்கவே முடியாது என்ற குரல்களும் விமர்சகர்கள் தரப்பிலிருந்து ஆவேசமாக எழுந்தன. இது தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் ஏன் பேசாதிருந்தீர்கள்? என்ற கேள்வியை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.அஸ்லம், எம்.ரி.ஹஸன் அலி மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர்களிடம் நேரடியாகக் கேட்டு அதற்கு அவர்கள் அளித்த பதில்களையும் ஊடகங்களில் வாசிக்க கிடைத்தது.
மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கிடைத்த பதில்களில் 'நேர ஒதுக்கீடு இல்லை' என்ற அடிப்படையான காரணம் முன்வைக்கப்பட்டிருந்தது. எனவே இதுதொடர்பாக கேள்விகளை எழுப்புகின்ற எழுத்தாளர்களும், விமர்சகர்களும் ஏன் பேசவில்லை? ஏன் கலந்தகொள்ளவில்லை? என்ற மேலோட்டமான கேள்விகளுக்கு விடைதேடுவதற்கு அப்பால், இந்நிலை எதனால் ஏற்பட்டது? என்ற பின்புலத்தை நோக்கி ஆராய்ந்து செல்வதில் முஸ்லிம் அரசியலுக்குள்ள தார்மீகப் பொறுப்புகளை இன்னும் ஆழமாக நோக்கலாம்.
ஏனெனில், பாராளுமன்ற விவாதம் ஒன்றில் நினைத்தபடியெல்லாம் எழுந்து, விரும்பியவர்களெல்லாம் பேசமுடியாது. பாராளுமன்ற நிலையியற் கட்டளை நியதிகளின்படி விவாதம் ஒன்றிற்கான நேரஒதுக்கீட்டில் பெயர் குறிப்பிட்டவர்களே விவாதத்தில் கலந்துகொள்ளவும் கருத்துச் சொல்லவும் முடியும்.
இதனடிப்படையில் முஸ்லிம் சமூகம் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவாதத்தில் முஸ்லிம் கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள நேர ஒதுக்கீடு பெற்றுக்கொள்ளாது இருந்தமைதான் அவர்களின் மிகப் பெரும் தவறாகவும் பொடுபோக்காகவும் தெரிகிறது. இவ்வாறான ஒரு பிரேரணை முன்வைக்கப்படுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் இதற்கான நேர ஒதுக்கீட்டை எடுக்காது இருந்ததில் உள்ள பின்னணி என்ன? என்பதே இங்கு ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
இதில் முஸ்லிம் சமூகத்தின் உரிமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் காங்கிரஸின் நிலை, பாராளுமன்றத்தில் அது தனது சொந்தக் காலில் நிற்கவில்லை என்பதுதான். ஐக்கிய தேசியக் கட்சியின் உடன்படிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டு அதன் பிரதிநிதிகளாகச் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்தின் கூட்டாக இப்பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது.
தனது சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்துடன் அதன் உரிமைக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதிலும் விவாதிப்பதிலும் ஒரு கட்சிக்குள்ள ஆகவும் ஆபத்தான விடயம் அது இன்னுமொரு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் இணைந்துகொள்வதுதான் என்பதை இப்பாராளுமன்றம் தக்க பாடம் புகட்டி முஸ்லிம் காங்கிரஸூக்கு உணத்தியிருக்கிறது.
அதன் ஒரு அம்சமாக, கடந்த 03.06.2014 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர் என்றவகையில் நிலையியற் கட்டளை 23(2) க்கு அமைய பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என கூறி தம்புள்ளை பள்ளிவாசல் பற்றி ஓர் அறிக்கையை விடுக்க ரஊப் ஹக்கீம் அனுமதி கோரிய போது, அதற்கு பிரதி சாபாநாயகர் மறுப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் நான்கு கட்சித் தலைவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காரணம் கூறி முஸ்லிம் காங்கிரஸின் தலைமைய பாராளுமன்றத்தில் புறக்கணித்த நிகழ்வைக் குறிப்பிடலாம்.
அப்போது, அதுகுறித்த கட்டுரை ஒன்றினை 2014 ஜூன் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜப்னா முஸ்லிமில் 'கட்சியின் தனித்துவம் பாராளுமன்ற அங்கீகாரம் பெறுவதா? அதிக ஆசனங்கள் பெறுவதா?' எனும் தலைப்பில் நான் எழுதியிருந்தேன். பாராளுமன்றத்தில் ஒரு கட்சி தனது தனித்துவத்தை இழக்கின்ற போது அதற்கான நேர ஒதுக்கீட்டினைப் பெறுவதிலும் அக்கட்சி பெருத்த ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என அக்கட்டுரை ஓரிடத்தில் எதிர்வு கூறியதை இங்கு மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
· 'இதில் இன்னுமொரு விடயம் பாராளுமன்ற நேர ஒதுக்கீட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் நேர ஓதுக்கீட்டினைத்தான் முஸ்லிம் காங்கிரஸூம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே இதன்படி நோக்கின் பாராளுமன்றத்தில் உரையாற்றும் நேரம் இன்னுமொரு கட்சியின் அங்கீகாரத்திற்கு உட்பட்டிருப்பது அபத்தமானதே. இது உடன்படிக்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மறுக்கப்படக் கூடியதாகவும் அமையலாம். இது நிலையியற்கட்டளை 23(2) ஐ விட ஆபத்தானது.'
இவ்வாறு எந்த ஆபத்து ஏற்படக் கூடும் என்று அன்று நாம் எதை எதிர்வுகூறியிருந்தோமோ அந்த ஆபத்து அடுத்த கணமே நடந்து, முஸ்லிம் காங்கிரஸூக்கு அது மற்றுமொரு பாடத்தையும் நன்கு புகட்டியிருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் சென்ற முஸ்லிம் காங்கிரஸினர் இன்று ஆளும் தரப்பில் கூட்டாக இணைந்து செயற்படுவதனால் தாங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேர ஒதுக்கீட்டினை அரசாங்கத் தரப்பிலிருந்து பெற்றுகொள்ள வேண்டி இருக்கிறது. அதுபோன்று அதாஉல்லா, றிசாட் போன்றவர்களும் அரசாங்கத்தின் நேரடியான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
இதனடிப்படையில் இன்று முஸ்லிம் கட்சிகள் யாவும் அரசாங்கத்தின் நேர ஒதுக்கீட்டுக்கே கட்டுப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கத்திடம் நேர ஒதுக்கீட்டினைப் பெற்று அரசாங்கத்துக்கு எதிராக எப்படிப் பேச முடியும்? அரசாங்கத்தை எப்படி விமர்சிக்க முடியும்? அரசாங்கத்திடம் பொல்லை வாங்கி அரசாங்கத்தையே எப்படி அடிக்க முடியும்? என்ற நெருக்குதலுக்குள் இன்று முஸ்லிம் அரசியல் சிக்குண்டிருக்கிறது.
இதனாலேதான், அன்றைய தினம் அரசாங்கம் தங்களது நேர ஒதுக்கீட்டை ஏ.எச்.எம்.அஸ்வருக்கு வழங்கி இருந்தது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி எம்.எச்.ஏ.ஹலீமுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருந்தது. இதுபோக ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகள் நேரஒதுக்கீடு இல்லை என்ற காரணத்தால் பாராளுமன்றத்தில் மையத்துகளாக மௌனித்துப் போயிருந்தார்கள்.
இதனை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸனலி கூறும் போது 'அன்றைய தினம் எங்களுக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. நாம் அளுத்கம சம்பவத்தில் மௌனமாக எப்போதும் இருக்கவே இல்லை. தொடர்ந்து பேசியிருக்கின்றோம். ஆனால் அன்றைய தினம் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை இதுதான் உண்மையாக நடந்தது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஹஸனலி அவர்களின் பதிலை நோக்கும் போது, நேர ஒதுக்கீடு முஸ்லிம்காங்கிரஸால் கேட்கப்பட்டு அது அரசாங்கத்தால் மறுக்கப்பட்டதா? அல்லது முஸ்லிம் காங்கிரஸ் இவ்விவாதத்திற்கான நேர ஒதுக்கீட்டை கேட்காமலே இருந்ததா? அல்லது தலைவர் ரஊப் ஹக்கீம் இதற்கான நேர ஒதுக்கீட்டைப் பெறாமல் நளுவிக்கொண்டாரா? ஜூலை 10 ஆம் திகதிய விவாதத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்து கொள்ளாது மௌனித்ததற்கு யார் பொறுப்புக் கூறுவது? தலைவர் இல்லாதவிடத்து பாராளுமன்ற நேர ஒதுக்கீட்டை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்ள தலைவருக்கு அடுத்தபடியாக யாருக்கு பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது? எனும் கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2014 ஜூலை 24 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் காஸா மீதான தாக்குதல் குறித்து போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமரைத் தண்டிக்க வேண்டும் என குரல் எழுப்ப முடிந்த ரஊப் ஹக்கீமுக்கு ஏன் அளுத்கம சம்பவத்திற்கு இதுவரை ஒரு பிரேரணையை கொண்டுவர முடியாதிருக்கின்றது.? அதற்கு முடியாதபோதும் அநுர குமார திசாநாயக்க முன்வைத்த பிரேரணை விவாதத்திலேனும் ஏன் தன்னாலும் தனது கட்சியாலும் கலந்துகொள்ள முடியாது போனது?
இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம், நேர ஒதுக்கீடு இல்லாமல் பாராளுமன்றம் எங்கும் முட்டிமோதி அலைந்து திரிந்த நீண்டதொரு கதையைக் குறிப்பிட்டிருந்தார். அன்றைய தினம் ஆளும் கட்சி கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை தேடியும் அவர் கிடைக்கவில்லை என்றும் பின்னர் செயலாளர் ஜகத்தை சந்தித்து முறையிட்டும் அவர் நேர ஒதுக்கீடு முடிந்ததாகக் கூறி மறுத்ததாகவும், அதன்பிறகு சபாநாயகரின் ஆசனத்துக்கு அருகில் சென்று நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டதாகவும், அடுத்ததாக ரங்கா அவர்கள் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நேரத்தை வேண்டியதாகவும், இப்படி தனது சமூகம் குறித்த விவாதத்தில் பேசுவதற்கு நேர ஒதுக்கீடு இல்லாமல் பாராளுமன்றத்தில் நேரப் பிச்சை கேட்டு அலைந்த ஒரு இழிநிலைய அஸ்லம் அவர்களின் பதில் நன்கு புலப்படுத்தியிருக்கிறது.
ஆனாலும் தலைவரே நேரம் எடுக்க விரும்பாத ஒரு விவாதத்தில் பேசுவதற்கு அஸ்லம் எம்.பி ஏன் இவ்வளவு சிரமத்துடன் ஒவ்வொருவராக சென்று நேரப் பிச்சை கேட்டு அலைய வேண்டும்? என்றும் கேட்கத் தோன்றுகிறது இதனை தலைவர்தான் அவரிடம் கேட்டறிய வேண்டும்.
அரசியலை எழுதும் கட்டுரையாளர்களும் விமர்சகர்களும் எமது அரசியல்வாதிகள் சமூகத்தை காட்டிக் கொடுப்பதாகவும் அடுகுவைப்பதாகவும் வழக்கமாக குறிப்பிட்டுக் கூறுவதுண்டு. அப்போதெல்லாம் அதற்கான உதாணங்களை நாம் காணாவிட்டாலும் கடந்த ஜூலை 10 ஆம் திகதிய விவாதத்தில் முஸ்லிம் தலைவர்களும் பிரதிநிதிகளும் நேர ஒதுக்கீடு பெற்றுக்கொள்ளாது ஒதுங்கியமை சமூகத்தை அடகு வைப்பதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும் மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். இதுவே உண்மையான அடகு வைப்பாகும்.

Post a Comment