Header Ads



இலங்கையில் 'கௌரவ கலாநிதிப் பட்டம்' - 3 இலட்சம் ரூபா..?

"எனது சமூகப் பணிக்காக கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நான் 3,500 டொலர்களை (ரூபா 2.14 இலட்சம்) நான் செலுத்த வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" 

இவ்வாறு THE NEW INDIAN EXPRESS ஊடகத்தின் செய்தியாளர் Bharath Joshi எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

கடந்த வாரம் வாசுதேவ சர்மாவின் அலுவலகத்திற்கு வருகை தந்த இரண்டு பேர் கூறிய விடயம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிலங்காப் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து வாசுதேவ சர்மா கௌரவ கலாநிதிப் பட்டம் [honorary doctorate] ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பப் படிவம் ஒன்றை அவர்கள் இருவரும் அவரது மேசையில் வைத்தார்கள். "எனது சமூகப் பணிக்காக கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நான் 3,500 டொலர்களை (ரூபா 2.14 இலட்சம்) நான் செலுத்த வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என சிறுவர் உரிமைகள் நிதியத்தின் நிறைவேற்று இயக்குனர் சர்மா குறிப்பிட்டார். 

சுரேஸ் மற்றும் ஆனந்த் எனத் தம்மை அடையாளங் காண்பித்த குறித்த இருவரும் தாம் கொழும்பிலுள்ள நிறைவான மருத்துவக் கற்கைகக்கான அனைத்துலக திறந்த பல்கலைக்கழகத்தைப் [Open International University of Complementary Medicines - OIUCM] பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் குறிப்பிட்டனர். இப்பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள் கௌரவ கலாநிதிப் பட்டத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாது, ஹோமியோபதி, அக்குப்பஞ்சர், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்று மருத்துவம் செய்ய முடியும். 

மாற்று மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துவதே தமது நோக்காகும் என OIUCM இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்பல்கலைக்கழகமானது நம்பகமற்ற 11 நிறுவகங்களின் ஊடாகத் தனது கற்றல் செயற்பாட்டை வழங்குகிறது. இவற்றுள் ஒரு நிறுவகம் பங்களுரிலும், பிறிதொன்று மும்பையிலும் ஏனையவை தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் அமைந்துள்ளன. இப்பல்கலைக்கழத்தின் அனைத்துலக கற்கைநெறிகள் அமெரிக்கா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளில் வழங்கப்படுகின்றன. 

"கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றுக்காக எனது பெயர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். எனது பெயருக்கு முன்னால் 'கலாநிதி' என்கின்ற பட்டத்தைச் சேர்ப்பதன் மூலம் பல்வேறு நலன்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார்கள். இது என்னை அவர்களது கருத்தின் பால் ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும்" என சர்மா குறிப்பிட்டார். இவர் மட்டுமல்ல இன்னும் பலர் இவ்வாறு அணுகப்பட்டுள்ளனர். 

"OIUCM பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்னை அணுகி மூன்று இலட்சம் ரூபா தந்தால் கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றை வழங்கலாம் என என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் இதற்கு மறுத்ததுடன் அவர்களை எனது பணியகத்தை விட்டு விரட்டினேன். இது ஒரு மோசடிச் சம்பவம் என்பது எனக்குத் தெரியும்" என மனித உரிமைகள் கல்வி மற்றும் கண்காணிப்புக்கான தென்னிந்திய மையத்தின் நிறைவேற்று இயக்குனர் மத்தியூஸ் பிலிப் தெரிவித்தார். 

இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஒருவர் போல் 'எக்ஸ்பிரஸ்' ஊடக செய்தியாளர் சிவாஜிநகரிலுள்ள மாற்று மருத்துவ முறைகளுக்கான தேசிய நிறுவகத்தை அணுகினார். இந்த நிறுவகமானது OIUCM இன் கீழ் செயற்பட்டுவருகிறது. "கற்கைநெறிக் கட்டணம் ரூ50,000. இதனை பகுதி பகுதியாகச் செலுத்த முடியும். இளநிலைப் பட்டச் சான்றிதழை ஒரு மாதத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் முழுமையாகச் செலுத்தாது காலந்தாழ்த்தி கட்டணத்தைச் செலுத்தினால் இரண்டு மாதத்தில் பட்டச் சான்றிதழைப் பெறமுடியும். இச்சான்றிதழில் OIUCM இன் இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும்" என தேசிய நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ஏ ஆர் சமியுல்லா அறிவித்தார். இந்த நிறுவகமானது கர்நாடக மாநில திறந்த பல்கலைக்கழகத்திலிருந்து கற்கைநெறிகளை வழங்குகின்றது என்பது மிகவும் சுவாரசியமான விடயமாகும். 

சிறிலங்கா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் OIUCM பதிவுசெய்யப்படவில்லை என டில்லியிலுள்ள சிறிலங்கா உயர் ஆணையகம் 'எக்ஸ்பிரஸ்' ஊடகத்திற்கு அறிவித்தது. இத்திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இதன் பட்டங்கள் போன்றன அங்கீகரிக்கப்படவில்லை என சிறிலங்கா மருத்துவ சபையின் பதிவாளர் கலாநிதி என்.ஜே.நொநிஸ் தெரிவித்தார். 

இப்பல்கலைக்கழகம் தொடர்பாகவும் இந்தியாவில் இதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் தான் அறிந்துள்ளதாக இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கற்கைக்கான கல்லூரியின் அதிபர் கலாநிதி பிராசாந்த் செற்றி தெரிவித்தார். "இது ஒரு போலியான பல்கலைக்கழகமாகும். இவர்கள் மூன்று தொடக்கம் ஆறு நாட்களில் இயற்கை மருத்துவம் மற்றும் அக்குப்பஞ்சர் மருத்துவ முறைமைகளுக்கான முதுநிலைப் பட்டங்களை வழங்குகிறார்கள். இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நான் நம்புகிறேன்" என பிரசாத் செற்றி குறிப்பிட்டார். 

"இந்தியாவில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகாப் பயிற்சிநெறிகளை சட்டபூர்வமாக 16 நிறுவகங்கள் வழங்குகின்றன. ராஜீவ் காந்தி சுகாதார விஞ்ஞானப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புபட்ட இந்த நிறுவகமானது கர்நாடகாவில் உள்ளது" என பிரசாத் செற்றி மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.