முஸ்லீம்களிடமிருந்து பாடங்களை கற்றுள்ளேன் - வத்துகாமம் பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி
(JM.HAFEEZ)
பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனங்கள் எப்பொழுதும் எமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் எனக் கருதினால் அது மாபெரும் தவறு என்பதை பெரும்பான்மை மக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்று வத்துகாமம் பொலீஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி பொலீஸ் பரிசோதகர் சமன் குமாரசிரி தெரிவித்தார்.
(31.7.2014) மடவளை மக்கள் அமைப்பு (எம்.பி.எப்.) மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். மடவளையுடன் தொழில் ரீதியாக தொடர்புடைய முஸ்லிம் அல்லாத சகல மக்களையும் ஒன்றிணைத்து றம்சான் பெருநாள் ஒன்று கூடலும் பகற் போசமும் வழங்கப்பட்ட இவ்வைபவத்தில் மடவளையில் பல்வேறு வகையான தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 600 சிங்கள தமிழ் மக்கள் இதில் பங்கு கொண்டனர். இக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது-
இலங்கையில் பிரதான மதங்களாக பௌத்தம், இந்து, கிருஷ்தவம், இஸ்லாம் என்பன உள்ளன. இவற்றின் அடிப்படைகளை நோக்கும் போது அவற்றின் ஒற்றுமைகளைக் காண முடிகிறது. இச்சமயங்கள் சகலவற்றிலும் இறுதியாக வந்த சமயம் இஸ்லாம் சமயமாகும். அதனை எடுக்கூறிய இறைதூதர் அல்லது நபி முஹம்மத் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். அதே நேரம் முஹம்;மத் நபிக்கு முன்னர் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் நபிகள் வந்ததாகவும் அவர்கள் நம்பு கின்றனர். அதில் 25 நபிமார்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஆறு பேர் சிரேஷ்டமானவர்கள் என்றும் அதில் இறுதி நபி முஹம்மத் என்றும் நம்பு கின்றனர்.
பௌத்த சமயத்தை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஒரு இலட்சத்து இருபத்திரண்டாயிரம் தூதர்கள் போதனை செய்ததாகக் கருதப் படுகிறது. அதில் ஐவர் சிரேஷ்ட மானவர்கள் எனக் மூறப் படுகிறது. பௌத்தர்கள் பஞ்ச சீலத்தைக் கடைப்பிடிக்கின்றனர். சிலர் தசசில் (தச சீலம்) என்ற பத்துக் கோட்பாட்டை கடைப்படிக்கின்றன். இஸ்லாமியர்கள் குறிப்பிடும் முசா நபியும், ஏனையவர்கள் குறிப்பிடும் மோசஸ் உம் பத்துக் கட்டளைகளை முன்வைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ஒவ்வொன்றாக ஆராயுமிடத்து சமயங்களுக்கிடையிலான ஒற்றுமைகள் பலவற்றைக் காண முடிகிறது. எனவே சமயங்களுக்கு மத்தியில் உள்ள ஒற்றுமைதான் எமது தினசரி வாழ்க்கை.
ஒரு பொலீஸ் அதிகாரி என்ற அடிப்படையில் நான் முஸ்லீம்களிடம் இருந்து சில பாடங்களை கற்றுள்ளேன். 19984ம் ஆண்டு நாட்டில் அசாதாரண சூழ்நிலை காணப்பட்ட போது நான் கல்முனையில் கடமையாற்றினேன். இடைப்பட்டசில காலம் தவிற அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்கள் வத்துகாமத்திற்கு வந்தேன். எனது முழுச்சேவை காலத்திலும் மேற்சொன்ன இரு இடங்களிலும் நான் பெற்ற அனுபவம் மற்றறைய இடங்களில் கண்ட அனுபவங்களில் இருந்து வித்தியாசமானது. அதுதான் முஸ்லிம்கள் எமது கடமைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்னர். அவர்கள் இடையூறுகளை ஏற்படுத்தியது கிடையாது. ஒருவர் முஸ்லீமானாலும் சரி, தமிழரானாலும் சரி, சிங்களவரானாலும் சரி அவர் மனிதன் என்ற நிலையில்தான் ஒவ்வொருவரையும் முஸ்லிம்கள் கணிக்கின்றனர்.
சிங்கள கலாச்சாரத்தில் ஒன்றுதான் பெருநாட்காலங்களில் 'நேகமன்' செல்வது. அதாவது புத்தாண்டு காலத்தில் உறவுகளை சந்தித்து அன்பளிப்புக்களைப் பறிமாறி சந்தோசமாக வாழ்த்தி விடை பெறுவது. இதை நான் மடவளையிலும் கண்டேன். கல்முனையிலும் கண்டேன். இது எமது கலாசசாரத்தில் இருக்க வேண்டியது என்றாலும் எமது பொலீஸ் நிலையங்களுக்கு எம்மவர்கள் 'நேகமன்' வருவதில்லை. ஆனால் காலத்திற்குக் காலம் முஸ்லீம்கள் அதனைச் செய்கின்றனர். சில தினங்களுக்கு முன்பும் மடவளை பள்ளியை பிரதான மாகக் கொண்ட பலர் எம்முடன் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இன்று நடப்பதும் அதில் ஒன்றாகும்.
அண்மித்த காலங்களில் நாட்டில் இன மோதல்கள் பல பதிவாகியுள்ளன. ஆனால் வத்துகாமம் பொலீஸ் பிரிவில் உள்ள எந்த ஒரு கிராம அதிகாரி பிரிவிலிருந்தும் இன மோதல் தொடர்பான முறைப்பாடுகளும் பதிவாக வில்லை. அதே நேரம் வத்துகாமம் பொலீஸ் பிரிவில் உள்ள சகல கிராம அதிகாரிகள் பிரிவிலும் குறைந்தது ஒருவராவது மூவினத்திலும் வசிக்கின்றனர். அதாவது எல்லா இடங்களிலும் எல்லா இனத்தவர்களும இருந்த போதும் எங்கு மோதல் ஏற்படவில்லை என்றால் சிறுபான்மையான தமிழ்-முஸ்லீம்களின் நல்ல பண்புகளாக அதனை நோக்கலாம். எனவே பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனங்கள் எப்பொழுதும் எமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் எனக் கருதினால் அது மாபெரும் தவறு என்பதை பெரும்பான்மை மக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
ஓன்றைச் செய்ய முன் அது பற்றிச் சந்திக்க வேண்டும். இதனை சிங்களத்தில் (பாயும் முன் சிந்தி) 'பனின்னட பெற சிதா பலன்ன' என்பார்கள். எனவே வெளிநாட்டுக் குழுக்களின் சதியில் வீழ்ந்து இனங்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்கி 1505ம் ஆண்டு காலத்திற்குறிய யுகத்தை ஏற்படுத்துவதா? சகவாழ்வு புரிந்துணர்வு என்பவற்றின் அடிப்படையில் ஒற்றுமையாகி 1948ம் ஆண்டு யுகத்திற்கு செல்வதா என்பதை பற்றி பாயும் முன் சிந்தியுங்கள் என்றார்.
இவ்வைபவத்தில் உரையாற்றிய முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் வக்பு சபை அங்கத்தவர் மௌலவி பஸ்லுல் (மஹ்லரி) தெரிவித்ததாவது-
சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு இல்லாத காரணத்தாலே சிறு சிறு சம்பவங்கள் ஏற்பட்டு அது சில வேளை விபரீதமாகிறது. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையைப் பொருத்தவரை 1948ம் ஆண்டு சுதந்திரக் கொடி பறக்கும் போதே இதனை டாக்டர் டி.பி.ஜாயா தெளிவாகத் தெரிவித்து விட்டார்.
மற்றவருக்கு தனது சொல்லால் அல்லது செயலால் தீங்கு பயக்காதவனே உண்மை முஸ்லீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே நாம் முஸ்லீமாக இருக்கும் வரை சொல்லால் அல்லது செயலால் மற்றவருக்கு தீங்கு ஏற்படுத்த முடியாது. அப்படி என்றால் நாம் நிச்சயம் மற்றவர்களுடன் இணங்கியே வாழவேண்டும். இதனையே பிற மதங்களும் தெரிவிக்கின்றன என்றார். பாத்ததும்பறை பிரதே சபையின் தலைவர் சுதர்மா வெலகெதர தெரிவித்ததாவது,
பாத்ததும்பறை பிரதேச சபையின் அங்கத்தவர்கள் எக்கட்சியானாலும் சபைக்கு உள்ளேயும் சபைக்கு வெளியேயும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாகவே இயங்கு கின்றனர். இந்த வைபவத்திலும் அவர்கள் ஓரணியில் இங்கு சமூகமளித்துள்ளனர். இது பொது மக்கள் மட்டத்திலும் முன் மாதரியாகப் பின் பற்றப்பட வேண்டும். கட்சி, மதம், இனம் என்ற வேறுபாடுகள் எமக்கு அவசிய மில்லை என்றார்.
இந்த வைபவத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கு முதற் கண் நன்றி. திரு. சமன் குமாரசிறி போன்ற நல்ல போலீஸ் உத்தியோகத்தவர்கள் இந்த நாட்டுக்கு தேவை.
ReplyDelete