Header Ads



பொதுபல சேனா அமைப்பு என்பது அரச புலனாய்வுப் பிரிவினரால் வழிநடத்தப்படும் அமைப்பாகும் - மங்கள சமரவீர

தேசப்பற்று என்ற விடயத்தை முன்னிறுத்தி சிங்கள இனவாத வாக்குகளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கவரும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே வேலை தெரியாத அரசாங்கத்தின் ஒரே தந்திரோபாயம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்காக தர்மத்தை போதிப்பதற்கு பதிலாக பகையை தூண்டும் காவியுடை அணிந்த பொறுக்கிகளை பயன்படுத்தி அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுபல சேனா என்ற அமைப்பு அரச பாதுகாப்பின் கீழ், அளுத்கம மற்றும் பேருவளை நகரங்களில் மூன்று பேரை கொலை செய்து, பாடசாலைக்கு செல்லும் சிறுவனின் காலை உடைத்து, கடைகள் மற்றும் வீடுகளை தீயிட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு என்பது அரச புலனாய்வுப் பிரிவினரால் வழிநடத்தப்படும் அமைப்பாகும். அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்பவர் பௌத்த பிக்குவா என்பது சந்தேகத்திற்குரியது.

அரச புலனாய்வுப் பிரிவினரால் வழிநடத்தப்படும் நபர்களின் பெயர் பட்டியல்களை எதிர்வரும் நாட்களில் ஊடகங்களுக்கு தரப்படும். புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களும் பொதுபல சேனா அமைப்பில் இருக்கின்றனர்.

அளுத்கமவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனவாத யுத்தம் பதுளை வரை பரவியுள்ளது. பதுளை நகரில் இதுவரை மூன்று கடைகள் தீயிடப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு அங்கு சென்ற பாதுகாப்பு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கினர். அவர்கள் அதனை தடுக்க முயற்சிக்கவில்லை.

பொதுபல சேனா அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தை போல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமோ ஐக்கிய தேசியக்கட்சியோ நடத்தியிருந்தால், அதனை அடக்கி ஒடுக்கியிருப்பார்கள்.

இதனால், இது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக அதிரடிப்படையினரின் உதவியுடன் அரசாங்கம் நடத்திய இனவாதம் யுத்தம் என்பது தெளிவாகியுள்ளது என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

1 comment:

  1. பெரும்பான்மையான பெளத்தர்களே முடிவெடுக்க வேண்டிய விடயம் சிறுபானமையினர் எப்போதும் நல்லவற்றிற்கு ஆதரவளிக்க மறுத்துள்ளார்களா என்ன?????

    ReplyDelete

Powered by Blogger.