கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்தின் செயற்பாட்டை விமர்சிக்கிறார் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணசபையைச் சேர்ந்தவர்கள் கிழக்குடன் சேர்ந்து இயங்குவது பொருத்தமானதல்ல என்ற நிலைப்பாட்டிலேயே கிழக்கு முதலமைச்சர் உள்ளார் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு குறித்து நேற்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏதுக்கள், கருத்துக்கள் கிழக்கு முதலமைச்சரிடம் இல்லை. அவர் வடக்கு தலைவர்களைப் புலிகள் என்றே கருதுகிறார். இவ்வாறானவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமக்கு நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்துடனேயே அவர் பதிலளித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனவே இரு மாகாணங்களும் இணைந்து செயற்படுவதே சிறந்தது என நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.
ஆனால் இந்த கருத்தை அவர் ஏற்றுக்கொண்டவராகத் தெரியவில்லை. சங்கடத்துடனேயே பதிலளித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்த போதும், அவர் மத்திய அரசிடம் பேசவேண்டும் என்று சர்வசாதாரணமாகப் பதிலளித்தார் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment