Header Ads



அரசுக்குள்ளிருந்து கொண்டு நாம் போராடுகின்றோம் - றிஷாத் பதியுதீன்

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே அளுத்கம வர்த்தக நிலையத்தின் தீ வைப்புச் சம்பவமாகும். - இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

 நேற்று அதிகாலை அளுத்கமவில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக கண்டனம் வெளியிட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது-

குறித்த வர்த்தகர் அளுத்கமவில் சிறப்பாக தொழில் புரிந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் இவரது உயர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத வர்த்தகர்களே இனவாத கும்பலை துாண்டிவிட்டு இந்த செயலை செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

கடந்த இரு நாள்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் சில பௌத்த பிக்குகள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் வர்த்தக நிலையம் எரிந்துள்ளது என்றால் இது திட்டமிடப்பட்ட சதியாக இருப்பதற்கு பலமான சாத்தியக்கூறு இருக்கின்றது.

இலங்கையின் காவல் துறையினர் நாட்டில் நடைபெறுகின்ற பல்வேறு சிக்கலான குற்றச் செயல்களைக் கூட கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தமது திறமையை வெளிப்படுத்திய பல சந்தரப்பங்கள் உள்ளன.

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடாவடித்தனங்கள் அல்லது வன்செயல்கள் தொடர்பான குற்றவாளிகள் முழு நாட்டிற்கும் மட்டுமல்ல முழு உலகத்திற்குமே தெரிந்தாலும் இலங்கையின் காவல் துறையினருக்கு மாத்திரம் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.

எனது அமைச்சுக்குள் பொலிஸாரின் கண்களுக்கு முன்னாலே புகுந்து காட்டு தர்பார் நடத்திய, நாட்டின் தொலைக்காட்சி நிலையங்களுக்கூடாக, முழு நாட்டிற்குமே அடையாளப்படுத்தப்பட்டவர்களை, இன்னும் நமது காவல் துறையினரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.

அதுமட்டுமல்லாமல் எனது அமைச்சுக்குள் வைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளை திட்டியவர்களையே அவர்களால் அடையாளம் காணமுடியாமல் இருக்கின்றது.

தெமட்டக்கொடையில் வைத்து மாட்டிறைச்சி ஏற்றி வந்த லொறியை தீயிட்டுக் கொழுத்தியவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 250 ற்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்றுவரை அடையாளம் காணப்படவில்லை.

அதேபோன்று அளுத்கமவில் இடம்பெற்ற தீவைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள், பொலிஸாரால் இனங்காணப்படாத மற்றுமொரு சம்பவமாக இந்த வரிசையில் இடம்பிடிக்க அனுமதிக்க முடியாது.

பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு அரசு உரிய நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தம்புள்ள பள்ளிவாசல் மீது கைவைக்கப்பட மாட்டாது என்று அமைச்சு கலந்தாலோசனைக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியால் எமக்குத் தரப்பட்ட வாக்குறுதிக்கு மத்தியில் குறித்த ஒரு மதகுருவின் அழுத்தம் காரணமாக அந்த பள்ளிவாசலின் இருப்பு மீண்டும் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இவ்வாறான நிலைமைகள் தொடர அனுமதிக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும், நாளை தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசுக்குள்ளிருந்து கொண்டு நாம் போராடுகின்றோம்.

ஆனால் அரசு வாய் வீச்சில் பிரச்சினை இல்லை என்று சொல்லிக்கொண்டு நாளாந்தம் இனவாத சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை தொடர்ந்தும் கண்டும் காணாததுபோல் இருக்குமாயின், முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை ஜனநாயக சட்ட வரம்பிற்கு உட்பட்டு அரசுக்கு வெளியே நாங்கள் தேடவேண்டி ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


2 comments:

  1. இந்த காவி உடைக்காடையர்களுக்கும், இந்த அரசாங்கத்திற்கும் எதிராக நாம் அனைவரும் இறைவன் நாடி நிற்பதே சிறந்த வழி.. பிரச்சினைகள் அதிகரித்த காலங்களில் றஸூலுல்லாஹ் நமக்கு எந்த வழிகளில் பிரார்த்தனைகள் செய்யவேண்டும். எப்படி இறைவனிடம் கேட்கவேண்டும். என்பவைகளை பின்பற்றி. நாம் ஓவ்வொருவரும் அல்லாஹ்விடம் தொழுது குனூத் ஓதி பிரார்த்திப்போம். கண்டிப்பாக நாம் இதை செய்வதன் மூலம் அல்லாஹ் நம்மை காபிர்களின் தியசெயல்களில் இருந்து நிச்சயம் பாதுகாப்பான்.

    ReplyDelete
  2. appreciate but it is too late...

    ReplyDelete

Powered by Blogger.