இஹ்வானுல் முஸ்லிமீன்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது - சிசி கர்ஜிப்பு
எகிப்தில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்கிய முகமது மோர்சி கடந்த 2012ல் அங்கு ஆட்சியைப் பிடித்தார். இதில் அவருக்குப் பக்கபலமாக நின்றது இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற இயக்கமாகும்.
ஆனால் பொதுமக்களின் போராட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அப்போதைய ராணுவத் தளபதி அப்டெல் பட்டா அல் சிசி அவரைப் பதவியிறக்கி சிறையிலும் அடைத்தார். இவருக்குத் துணையாக நின்ற சகோதரத்துவ இயக்கமும் தீவிரவாத இயக்கமாகத் தடை செய்யப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டும், பழி வாங்கப்பட்டும் வருகின்றனர்.
இந்த மாத இறுதியில் அங்கு நடைபெறும் அதிபர் தேர்தலில் பங்குபெறுவதை முன்னிட்டு சிசி ராணுவத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இவர் நேற்று பங்கு கொண்ட தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட தங்களின் நீண்டகால மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தன்னைக் கொலை செய்யவும் அவர்கள் இரண்டு முயற்சிகளை மேற்கொண்டதாக கூறியுள்ள சிசி இந்த இயக்கத்தினை முடிவுக்குக் கொண்டுவந்தது எகிப்திய மக்களே என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் சிசி எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் வன்முறைகள் மற்றும் போராட்டங்களால் சீரழிந்துள்ள எகிப்தின் நிலைமையை சிசியால் மட்டுமே சீரமைக்கமுடியும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
எனவே வரவிருக்கும் அவரது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய இயக்கம் நீடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கப்பட்டது. அமைதி நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருவதாகக் கூறி இவரது குற்றச்சாட்டுகளை அந்த இயக்கம் மறுத்துவருகின்றது.
மேலும்,எகிப்து நாட்டில் முதன்முறையாக் பொதுத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மோர்சியை திட்டமிட்ட சதி மூலம் பதவியிலிருந்து விலக்கியதாகவும் இஸ்லாமிய இயக்கம் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

Post a Comment