Header Ads



ஊவா மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி


விரைவில் நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அதன் 2 ஆவது கட்ட களப் பயணத்தினை கடந்த 18.05.2017  ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

இக்களப் பயணத்தின்போது பதுளை மாவட்டத்திலுள்ள சில்மியாபுரம், குருத்தலாவ, வெலிமடை மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பிரமுகர்களுடனான பல்வேறு சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இச்சந்திப்புக்களின்போது, ஊவா மாகாண சபையில் பதுளை மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவம் எவ்வாறாயினும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பிரதேச பிரமுகர்களினால் முன்வைக்கப்பட்டன.

மேற்படி பிரதேசப் பிரமுகர்களின் உணர்வுபூர்வமான அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை பிரதிநிதிகள், பிரதேச பிரமுகர்கள் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் பதுளை மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தனர்.

மேலும், இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் முஸ்லிம் பிரதிநிதித்துவமானது, மக்களுக்கு விசுவாசமான ஒன்றாக இறுதிவரை பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

குறிப்பாக, மாகாண சபை அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையில் மக்களின் நலன்களை முன்னெடுக்கின்ற, பதவிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் மக்களை விட்டும் தூரமாகாத, மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தை எந்த வகையிலும் துஷ்பிரயோகம் செய்யாத, நல்லாட்சிப் பண்புகளுக்குத் துரோகமிழைக்காத, தலைமைத்துவ சபையின் சூறா முடிவுகளுக்கு முழுவதும் கட்டுப்படுகின்ற, அரசியல் அதிகாரம் எனும் அமானிதத்தைப் பேணுகின்ற, சூழ வாழும் ஏனைய சமூக மக்களுடனான நல்லிணக்க சக வாழ்வுக்குப் பாடுபடக்கூடிய பிரதிநிதித்துவமாகவே அப்பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் எனவும் இப்பிரமுகர்களிடம் NFGG தலைமைத்துவ சபையினர் வலியுறுத்தினர்.

அத்துடன், பதுளை மாவட்டத்தில் கிடைக்கப் பெறும் இம்முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை சுழற்சி முறையில் இம்மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்வது பற்றியும் இச்சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்டது.

NFGG தலைமைத்துவ சபையினரின் நல்லாட்சி விழுமியங்கள் நிறைந்த முன்மாதிரி அரசியல் முறைமைகளையும், மக்களுக்கு விசுவாசமான அரசியல் பங்களிப்பு மற்றும் அதில் மக்களின் பங்கேற்பு பற்றிய விளக்கங்களையும் அறிந்து கொண்ட இப்பிரதேச பிரமுகர்கள் தமது அதீத உடன்பாடுகளைத் தெரிவித்ததுடன், இவ்வாறானதொரு முன்மாதிரிமிக்க முன்மாதிரி அரசியல் முறையே தாங்கள் எதிர்கொண்டுள்ள சமகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தனர்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்பது பற்றிய தீர்மானம் மிக விரைவில் NFGGயின் தலைமைத்துவ சபைக் கூட்டத்தில் மேலும் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் இச்சந்திப்புக்களின் இறுதியில் தெரிவிக்கப்பட்டது.

இக்களப் பயணத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான எம்.எம். அப்துர் றஹ்மான், அஷ்ஷெய்க் எம்.ஆர். நஜா முஹமட் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி), சகோதரர் எம். ஹனான், வட மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி), மௌலவி எம். றிஸ்மி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

No comments

Powered by Blogger.