இலங்கை முஸ்லிம்களின் லண்டன் போராட்டம் உணர்வுபூர்வமானதா..? அறிவுபூர்வமானதா..??
(நவாஸ் சௌபி)
இலங்கை முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற பௌத்த தீவிரவாதத்தின் போக்குகளை எதிர்கொள்வதிலும் அதனை முற்றாக நிறுத்திவிடுவதிலும் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பாக இலங்கை முஸ்லிம்களிடம் இதுவரை ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்துக்களோ, ஒன்றுபட்ட அமைப்புகளோ இல்லாத நிலையே காணப்படுகிறது. இதனால் மேற்படி பௌத்த தீவிரவாதம் எம்மை நோக்கி ஆபத்தான முகங்களையே தொடர்ந்தும் காட்டிக் கொண்டு போகிறது.
இந்நிலையில் புலம் பெயர் முஸ்லிம்கள் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் வாழ் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் வெகுஜனப் போராட்டப் பேரணி ஏற்படுத்தும் விளைவுகளின் தாக்கங்கள் எமக்கு வெற்றியளிக்குமோ இல்லையோ பௌத்த தீவிரவாத அமைப்புக்களால் இதுதொடர்பாக பல கட்டுக் கதைகளும் குற்றம் சுமத்தி பழிவாங்கும் விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். என்ற எதிர்பார்ப்பும் இதில் இருக்கிறது இதற்கு நாங்கள் என்ன பதில் கூறுவது? என்ற கேள்வியும் அதனோடு எழுகிறது.
அதாவது மேற்படி வெகுஜனஆர்ப்பாட்டப் பேரணி லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இலங்கையில் ஞானசாரத் தேரர் ஒரு ஊடக மாநாட்டை ஏற்பாடு செய்து பின்வரும் கருத்துக்களை இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக உடனுக்குடன் வெளியிடலாம்.
01. இலங்கை முஸ்லிம்களுக்கு சர்வதேச தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு இருக்கிறது.
02. கடல் கடந்த தீவிரவாத அமைப்பு முஸ்லிம்களிடம் உண்டு
03. இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளைப் புரிவதற்கு கடல் கடந்த முஸ்லிம் அமைப்புகள் நிதிஉதவிகைளை வழங்குகிறது.
04. இவ்வாறான அமைப்புக்களைத் தடை செய்ய வேண்டும்
என்பது போன்ற அர்த்தமற்ற பழிகளை இலங்கை முஸ்லிம்களை நோக்கிச் சுட்டிக்காட்டுவார். இதுபோன்ற பல கருத்துக்களை ஞானசாரத் தேரர் ஆதாரமற்றவகையில் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றார்.
ஒருதீவிரவாதமும் இல்லாத முஸ்லிம்களிடத்தில் எல்லாம் இருப்பதாக காண்பித்து முஸ்லிம்களை தீவிரவாத சமூகமாக அடையாளப்படுத்தி அவர்களை அடக்கவும் அழிக்கவும் சதிசெய்து கொண்டிருக்கும் பொதுபல சேனா போன்ற கதைகட்டும் அமைப்புகளுக்கு இந்த லண்டன் பேரணி கரும்பாகியும் போகலாம். பேசுவதற்கு எதுவுமில்லாது பட்டிணி கிடந்தவனுக்கு பிரியாணி கிடைத்தது போன்று இப்பேரணியை பொதுபல சேனா பார்க்கலாம்.
ஏனெனில் ஞானசாரத் தேரரின் இறுதியான அறிக்கை 'பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம் அமைப்புகள் தொடர்புகளை வைத்திருப்பது உறுதியாகிவிட்டாதக' இன்று வெளியிடப்பட்டிருக் கின்றது.
அதேபோன்று சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹன் குணரட்ன 'வெளிநாட்டு இஸ்லாமியத் தீவிரவாதிகள் இலங்கையில் இருப்பதாக இன்று கருத்து தெரிவித்துள்ளார்' இலங்கை இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாத பொறிக்குள் சிக்கிவிடாது தடுப்பதற்கு நாட்டின் முஸ்லிம் தலைவர்கள் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என்ற ஆலோசனையினையும் அவர் வழங்கியுள்ளார்.
இதுவரை முஸ்லிம் சமூகத்தை நாட்டுக்குள் பழிசுமத்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது கடல் கடந்த முஸ்லிம் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள் இதற்கு மேற்குறிய இரு கருத்துக்களும் உதாரணமாகும்.
இந்த விமர்சனங்களை நாம் காதில் கேட்கவும் தேவையில்லை அதற்கு பதில் கூறும் அவசியமும் எமக்கு இல்லை என்ற ஒரு வார்த்தையால் அதை நாம் தட்டிக்கழிக்கவும் முடியும். பௌத்த தீவிரவாதிகளின் விமர்சனங்களுக்கும் பழிச்சொல்லுக்கும் பயந்து நாங்கள் எங்களது எதிர்ப்புகளை காட்டாமல் இருக்க முடியாது என்ற உணர்வின் வெளிப்பாட்டை எப்படி அடக்கி வைப்பது என்ற குரலும் மேலெழுகிறது.
எனவே இந்தப் பேரணியில் முன்நிற்கும் அமைப்புகள் இத்தகைய விமர்சனங்களால் வருகின்ற பாதகமான விளைவுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடமளிக்காதவாறு இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாட்டினை கையாள வேண்டும்.
பேரணியை ஏற்பாடு செய்து நடத்துவது பெரும் போராட்டம் என்பதைவிடவும் அதன் பின் ஏற்படுகின்ற எதிர்வினைகளை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் பெரும் போராட்டமாக இன்றைய சூழலில் மாறலாம். அதற்கு ஒன்றுபட்டு குரல்கொடுக்கவும் ஒத்துழைக்கவும் முஸ்லிம் சமூகமும் அமைப்புக்களும் இருந்தாலும் வெளிநாட்டிலிருப்பவர்களுக்கும் உள்நாட்டிலிருப்பவர்களுக்குமான செயற்பாட்டு இடைவெளிகளை எப்படி தொடர்புபடுத்துவது என்பது பல சவால்கள் நிறைந்ததாகவே அமையும்.
அதாவது எங்களது சிவில் சமூக அமைப்புகள் அரசியல் உரையாடல்களை உணர்வு பூர்வமாகவே பேசிக் கொள்ளும் வழக்கத்தினைக் கொண்டிருக்கிறது. மாறாக சில நேரங்களில் அறிவுபூர்வமான உரையாடல்களின் அவசியத்தை உருவாக்குவதில் நாம் பலமில்லாதவாகளாவே இருக்கின்றோம். இதில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக தமிழீழ புலிகளின் தீவிரம் உச்சமடைந்திருந்த காலத்தில் நாங்கள் தனித்துவக் குரலுடன் எங்களது அரசியலையும் உரிமைகளையும் அவர்களுக்குச் சமமாக உணர்வு பூர்வமாகப் பேச முற்பட்ட போது அதற்கான உடன் விளைவாக என்ன நடந்தது? எமது மக்களின் பூர்வீகத்தை அழித்து யாழ் மண்ணை விட்டு எங்களை வெளியேற்றினார்கள்.
அன்று வெளியேற்றப்பட்ட எமது மக்களை முழுமையாக மீளக் குடி அமர்த்த முடியாதபடி இன்றும் அகதி வாழ்க்கை வாழந்துகொண்டிருக்கும் அவலத்தையும் பெருத்த காயத்தையும் எமது மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். இன்றுவரை அந்த வெளியேற்றத்தின் அவலத்தை எங்களால் முழுமையாகப் போக்க முடிந்துள்ளதா? வில்பத்துவ குடியேற்ற பிரச்சினை யாருடையது அன்று வெளியேற்றப்பட்ட மக்களுடையதுதானே அன்று புலிகள் வெளியேற்றியது போன்ற அதே அடக்கு முறையைத்தான் இன்று பிக்குகளும் செய்கின்றார்கள்.
அது மாத்திரமல்ல இன்று இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளும் அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளும் எமக்கு நல்ல முன்மாதிரியினைத் தந்திருக்கிறது. அதாவது புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலும், மீண்டு;ம் புலிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக 3 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 60 மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக் கின்றார்கள், 16 தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட சிலர் இலங்கை வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு நிதிகள் இலங்கை தமிழ் மக்களுக்கு வருவதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இப்படி பல நிலைப்பாடுகளும் தமிழ் சமூகம் குறித்து எழுவதற்கு இன்று அடிப்படையாக அமைந்தது எது? கடல் கடந்த தமிழர்களின் சர்வதேச செயற்பாடுகளின் விளைவுகள்தான் எனக் காரணம் கூறப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் அதற்கான தீர்வுகளுக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் கடல்கடந்த தமிழர் அமைப்புக்கள் பல்வேறு வழிகழில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இதன் வெளிப்படையான தன்மைகளை அவர்கள் எடுத்துக் கூறி நியாயம் பேசினாலும் தீர்வுகிட்டாதவர்களாக தமிழர் சமூகம் இருக்கின்றது.
இந்நிலையில் லண்டன் வெகுஜனப் போராட்டம் இலங்கை முஸ்லிம்கள் குறித்த கடல் கடந்த சர்வதேச செயற்பாடாக பார்க்கப்படும் போது அதனை எதிர்கொள்வதற்கும் அதற்கு பதில் அளித்து வாதாடுவதற்கும் பலநூறு சக்திகள் அறிவுபூர்வமான உரையாடலோடு கைகோர்த்து நிற்க வேண்டும் அதற்கான வழிகளை நாம் தேட வேண்டும். ஏனென்றால் தமிழர் சமூகத்தின் புலம் பெயர் பலத்தினைவிடவும் முஸ்லிம்களின் புலம் பெயர் பலம் என்பது எந்த இடத்திலிருக்கிறது என்பதனையும் நாம் இதன்பிறகுதான் அளவிட வேண்டியும் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் உயர்வானதொரு சர்வதேச கவனயீர்ப்பை இப்பேரணி ஏற்படுத்துவது உணர்புபூர்வமாக இல்லாமல் அறிவுபூர்வமாக அமைய நாம் எல்லோரும் கரம் கொடுப்போம்.

Post a Comment