சர்வதேசத்தின் தாளத்திற்கு ஆடுவது தேசத்துரோகம் - ஜனாதிபதி
நாட்டுக்கு எதிராகச் செயற்படுவோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செயற்படுவதும் சர்வதேசத்தின் தாளத்திற்கு ஆடுவதும் தேசத்துரோகமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிவித்த அவர், வரப்பிரசாதங்களை வழங்கும் அரசாங்கத்தை வீழ்த்திவிட்டு வேறு வகையில் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள முனைவது உசிதமானதல்ல எனவும் எவ்வாறெனினும் மக்களைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் போராட்டங்களை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
உலக குடும்ப சுகாதார உத்தியோகத்தர் தினத்தையொட்டி நேற்று பெந்தர ‘ஈகல் லேக் சைட்’ ஹோட்டலில் நடைபெற்ற தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் : உலக குடும்ப சுகாதார உத்தியோகத்தர் தின தேசிய நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சர்வதேச ரீதியில் நாட்டுக்குக் கிடைத்த கெளரவங்களில் இந்த உத்தியோகத்தர்களின் சேவையும் ஒன்று. ஆசியாவைப் பொறுத்தவரை இலங்கை சிசு மரண எண்ணிக்கையில் மிகக் குறைந்த நாடாகவும் மகப்பேற்று மரணம் குறைந்த நாடாகவும் உள்ளமையே அந்த கெளரவமாகும். நான் பல நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த போது அந்நாடுகளில் எமது இந்த சேவை தொடர்பில் ஆய்வுசெய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்தமையைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
குடும்ப சுகாதார சேவை என்பது எதற்கும் நிகரான சேவையல்ல. அது ஒரு உன்னதமான சேவை. தாயை மட்டுமன்றி தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் நலனையும் கவனிக்கும் அரிய சேவை. கருணைச் சேவையுமாகும். இந்த சேவைத் துறைக்கு இலங்கையில் 90 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது என்பதை பெருமிதத்துடன் கூறமுடியும்.
சுகாதாரத் துறை மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் இலங்கையர் உலகளாவிய ரீதியில் திறமையானவர்களாகத் திகழ்கின்றனர். அதேபோன்று சுகாதாரத் துறையிலும் பிரகாசிப்பவர்கள் உள்ளனர்.
இவர்கள் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதனை மனதில் இருத்தி செயற்படுவது முக்கியம். சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை அரசாங்கம் சகல தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது. வருடா வருடம் அத்துறைக்கான நிதியையும் அரசாங்கம் அதிகரித்து வருகிறது. நாம் இத்துறையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினையை நோக்கும் போது இது தொழிற்சங்கத்துக்கும் தொழிற்சங்கத்துக்குமிடையிலான பிரச்சினை. இதில் தலையிட்டு சுமுகமாக இதற்குத் தீர்வு காண்பதற்கு சுகாதார அமைச்சர் தயாராகவே உள்ளார். இதனை அந்த சங்கங்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதனை விடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் என்ற பெயரில் மனித உயிர்களைப் பணயம் வைத்துச் செயற்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அப்பாவி மக்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் என பெருமளவிலானோர் இதனால் பாதிக்கப்படுவதை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் கவனத்திற்கொள்வது முக்கியம். இந்த சேவையின் உன்னதத்தையும் கெளரவத்தையும் பாதுகாப்பது முக்கியம்.
நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தொழிற்சங்கவாதிகள். அரசியல்வாதிகள் என பல தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அபிவிருத்தி, பொருளாதார நடவடிக்கைகளிலும் நாம் இவ்வாறே செயற்படுகிறோம்.
இந்த யுகம் அரச சேவையின் பொற்காலமாகும். இக்காலத்தில் அதன் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவது தவறு.
போராட்டம் வேலை நிறுத்தம் என்றில்லாது அனைத்துப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் பொறுப்பான அரசாங்கம் இது. இவ்வாறு செயற்படுவோர் அதனைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது முக்கியமாகும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைக்கவும். அரசாங்கத்தை வீழ்த்தவும் சர்வதேச நாடுகளில் இருந்து சில சக்திகள் செயற்படுகின்றன. இது தொடர்பில் அனைவரும் கவனத்துடன் செயற்படுவது முக்கியம்.
அரச வளங்களை விற்று நாட்டை வீழ்ச்சியுறச் செய்த அரசாங்கங்கள் போலன்றி விற்றதை மீட்டு பாதுகாத்த அரசாங்கம் இது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது அவசியமாகும். வரப்பிரசாதங்கள் வழங்கும் அரசை வீழ்த்திவிட்டு வேறு வழியில் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள நினைப்பது நல்லதல்ல எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Post a Comment