Header Ads



நாற்றம் பொறுக்குதில்லை...!

ஒருவரது வீட்டின் கிணற்றுக்குள் பூனைக்குட்டி ஒன்று விழுந்துவிட்டது. முஸ்லிம்கள் பொதுவாக மிருகங்களினதும் குறிப்பாக நாய், பூனையினதும் அருகாமையைக் கூட வெறுப்பவர்கள். எனவே கிணற்றுக்குள் பூனை விழுந்துவிட்டால் முழுக் கிணற்று நீருமே அசுத்தமடைந்து விட்டதாக ஆகிவிடும். எனவே வீட்டுக்காரர் கிணற்றை சுத்தப்படுத்த நினைத்தார். 

அப்போது வீதியால் ஒரு மௌலவி (சமயம் படித்த போதகர்) வருவதை அவதானித்த வீட்டுக்காரர் ஓடோடிச் சென்று மௌலவியை நடுவீதியில் மறித்து நடந்ததை கூறி பரிகாரம் என்னவென்று கேட்டார். 'கிணற்றிலிருந்து 40 வாளி தண்ணீரை இறைத்துவிட்டு குறிப்பிட்ட சில குர்ஆன் வசனங்களை ஓதுமாறு' மௌலவி பரிந்துரை செய்தார். வீட்டுக்காரரும் அப்படிச் செய்தார். ஆனால் சரி வரவில்லை. மீண்டும் ஒரு தடவை மௌலவியை பள்ளிவாசலில் கண்டபோது 'கிணற்றில் தொடர்ந்தும் நாற்றம் வருகின்றது. நீரை அருந்த முடியாதுள்ளது' என்று வீட்டுக்காரர் சொன்னார். மௌலவி புருவங்களை உயர்த்தி யோசித்துவிட்டு '100 வாளி நீரை இறைத்துவிட்டு குறிப்பிட்ட ஒரு இறை வசனத்தை ஓதுமாறு' திரும்பவும் கூறிவிட்டுச் சென்றார். 

வீட்டுக்காரர் அதனையும் அப்படியே செய்தார். ஆனால் நாற்றம் அதிகரித்துக் கொண்டே போனது. மௌலவியை காண நேரிடும் போதெல்லாம் இதற்கான பரிகாரத்தை வீட்டுக்காரர் கேட்டுக்கொண்டே இருந்தார். ஆயினுமென்ன, நாற்றம் இன்னும் நின்றபாடில்லை. இது பெரிய தலையிடியாகவும் கவலையாகவும் மாறிவிட்டது. 

ஒருநாள் வீட்டுக்காரர் காலையிலேயே மௌலவியை பிரத்தியேகமாக சந்திப்பதற்கு போனார். நடந்தவற்றையெல்லாம் ஆரம்பம் முதல் விலாவாரியாக மௌலவி கேட்டறிந்து கொண்டார். அதன் பின்னர் வீட்டுக்காரரிடம் கேட்டார் - 'அது சரி கிணற்றில் விழுந்த பூனைக்குட்டியை வெளியில் எடுத்தீர்களா?' என்று. அதற்கு வீட்டுக்காரர் 'இல்லை' என்று தலையசைத்தாராம். 

கிணற்றுக்குள் விழுந்த அசிங்கத்தை எடுத்து வெளியில் எறியாமல், எத்தனை வாளி கிணற்று நீரை வாரி இறைத்தாலும் கிணறு சுத்தமாகிவிடப் போவதில்லை. இந்த தத்துவம் மேற்குறிப்பிட்ட சம்பவத்துக்கு மட்டுமே உரிய அறிவுரையல்ல. நமது நிகழ்கால நாட்டு நடப்புகளுக்கும் பொருந்தும். 

இனவாதத்தின் அறுவடை 

இந்த நாட்டை கடந்த இரண்டரை வருடங்களாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற இனவாத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியாமல் அதனை வளரவிட்டுவிட்டு, இப்போது மதப் பிணக்குகள் தொடர்பான விஷேட பொலிஸ் விசாரணை பிரிவொன்றை அமைப்பது பூனைக்குட்டி இன்னும் கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருக்க கிணற்றை வற்றவைத்த கதைபோல இருக்கின்றது என்றால் எந்தக் காரணத்தை முன்னிறுத்தி அதனை மறுக்கவியலும்....?
ஹலால் சான்றிதழை இல்லாது செய்யும் கோரிக்கையாக வெளிக்கிளம்பிய இனவாதம் இன்று ஒரு இனக் குழுமத்தின் மீள்குடியேற்றத்தையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு வயிறுபுடைக்க வளர்ந்திருக்கின்றது. இனவாதம் என்பது சில நாடுகளில் புத்திசாலித்தனமாகவும் தர்க்கவியல் ரீதியாக எதிர்கொள்வதற்கு சவால்மிக்கதாகவும் இருப்பதுண்டு. இனவாதிகளால் முன்வைக்கப்படுகின்ற வாதங்களும் கருத்துக்களும் பிழை என்று தெரிந்திருந்தால் கூட, அவை மிகவும் கனதியானவையாக இருப்பதுண்டு. 

ஆனால், இலங்கையில் போருக்குப் பின்னர் 'வெடத்தெரித்துள்ள' இனவாதிகளின் வார்த்தைகளில் இந்த இலட்சணங்களை இம்மியளவேனும் காணக் கிடைக்கவில்லை. அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது அதனைக் கேட்கின்றவர்களுக்கும் புரியாது. அந்தளவுக்கு மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாத வாதங்கள்தான் கடும்போக்கு சக்திகளால் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும், வீதியில் உலவித்திரிகின்ற பித்துப் பிடித்த சிலரைப்போல் இனவாதத்தை இந்த நாடு கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைபயனைத்தான் மூவின மக்களும் இப்போது அறுவடை செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பது சிலருக்கு கோபமூட்டலாம். 

இனவாதிகளையும் அவர்களுக்கு 'பீப்பி' ஊதுபவர்களையும் முளையிலேயே கிள்ளி எறிவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால், யாரும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்று தனியான பொலிஸ் பிரிவு அமைத்து விசாரணை செய்யுமளவுக்கு இந்த நாட்டில் மத ரீதியான பிணக்குகள் தீவிரமடைந்திருக்கின்றன. 

இரு வருடங்களுக்கு முன்னர் அனுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசலுக்குள் காவியுடை தரித்த சிலர் புகுந்து அட்டகாசம் புரிந்த வேளையில் சட்டம் நிலைநாட்டப்பட்டிருந்தால்... இன்னும் தெளிவாகச் சொன்னால் அங்கு சட்டம் ஒழுங்கை பொலிஸார் நடைமுறைப்படுத்தி இருப்பார்களேயானால், சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவதற்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிராது இருந்திருந்தால் இன்று இத்தனை  திண்டாட்டம் ஏற்பட்டிருக்காது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிவதற்கு இனவாத சக்திகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்காது. இத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பத்திரிகையாளர் மாநாடுகள் தேவைப்பட்டிருக்காது. இனவாத ஒடுக்குமுறை தொடர்பான சர்வதேசத்தின் கேள்விகளுக்கு அரசாங்கம் கவிழ்ந்த முகத்தோடு மறுத்துரைக்க வேண்டிய நிலையும் தவிர்க்கப்பட்டிருக்கும். ஒரு பிரத்தியேக பொலிஸ் பிரிவுக்கான செலவை மீதமாக்கி, கொழும்பில் பிச்சை எடுக்கின்ற சிறுவர்களுக்கு நன்கொடையாக வழங்கி புண்ணியம் தேடி இருக்கலாம். ஆயினும் இது எதுவும் இந்த நிமிடம் வரை நடக்கவில்லை. 

சும்மாவே இருந்தவர்கள்

இதற்கு பல தரப்பினர் காரணமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். தமக்கான வாகனங்களும் வரப்பிரசாதங்களும் கொந்தராத்துக்களும் கிடைத்தால் போதும், தேர்தல் வரும்போது மக்களை மசியச் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் காலம் முழுக்க வாழாவிருந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு பச்சைக்கொடி காட்டும் வரை காத்திருந்த பாதுகாப்பு தரப்பினர், எரிகின்ற இனவாத தீய்க்கு தள்ளியிருந்து தவணை முறையில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்த சிங்கள அரசியல்வாதிகள், பேரீச்சம் பழம் அனுப்புவதுடன் தமது கடமை முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சில முஸ்லிம் நாடுகள், உள்வீட்டுப் பிரச்சினை வெளிநாடுகளில் பேசப்படும் வரை பாம்புக்கும் நோகாமல் அடிக்கின்ற கம்புக்கும் நோகாமல் மெத்தனப்போக்கை கடைப்பிடித்த ஆட்சியாளர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் பின்வாங்கிவிட்ட உலமா சபையினர் என்று எல்லோரும் இந்நிலைமைக்கு பொறுப்பாளிகள். 

இவர்கள் எல்லோரையும் விட இதுவிடயத்தில் தவறிழைத்த பிரிவினராக முஸ்லிம் மக்களை நான் காண்கின்றேன். அவர்கள் செய்த தவறுகள்தான் மேலே சொல்லப்பட்ட தரப்பினர் தவறு செய்வதற்கான துணிச்சலை கொடுத்திருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற மத ரீதியான இயக்கங்கள், பெண் வீட்டார் தருகின்ற காரும் பணமுமே சமூக அந்தஸ்து என நினைத்துக் கொண்டிருக்கின்ற டாக்டர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், தொழில்வாண்மையாளர்கள், சமாதான நீதிவானுக்காகவும் பொன்னாடைகளுக்காகவும் செலவு செய்கின்ற பிரமுகர்கள், வங்கி மேலதிகப் பற்று நிதியைப் பயன்படுத்தி வியாபாரத்தை நடாத்திக் கொண்டு அதற்கான வட்டியையும் சேர்த்து பொது மக்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளும் வியாபாரிகள், தேனீர் கடைகளில் அமர்ந்திருந்து எல்லா அரசியல்வாதிகளையும் 'பைத்தியக்காரன'; என்று விமர்சித்தால் தமது சமூக கடமை முடிந்து விடுகின்றது என்று நினைத்துக்  கொண்டிருக்கின்ற சாதாரண மக்கள் எல்லோரும் இதற்கு மறைமுக காரணமாகி நிற்கின்றார்கள்.   

தமது அரசியல்வாதிகளை ஒன்றுபடச் சொல்கின்ற இந்த மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இனவாதத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியான பங்களிப்புக்களை செய்திருந்தால் இந்தக் கதை வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. மிகக் கிட்டிய காலத்தில் அது சாத்தியப்படக் கூடியதுமல்ல. வெட்கத்தைவிட்டு சொல்லப்போனால,; மதம்சார் இயக்கங்களின் அடிப்படையிலும் அரசியல் கட்சிகள் ரீதியாகவும் பிரதேச வாரியாகவும் அவர்கள் பிளவுபட்டு துண்டங்களாக ஆகியிருக்கின்றார்கள். எந்தவொரு சமூகப் பிரச்சினையை முன்னிறுத்தியும் ஒரே புள்ளிக்கு முஸ்லிம் சமூகத்தையோ அதன் மேய்ப்பர்களையோ கொண்டுவருதல் வெறுங்கனவு மாத்திரமே.

இப்படி தமக்குள்ளேயே பிரிந்திருக்கின்ற முஸ்லிம்கள் - சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் கோலோச்சுகின்ற சிங்கள ஆட்சியாளர்கள், வாழைப்பழத்தை உரித்து வாய்க்குள் வைப்பதுபோல தமது பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கண்டு தங்கத்தட்டில் நீட்டுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் ?! 'இனவாதத்திற்கு எதிராக போராடுதல்' என்று இதனை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, நமக்கும் கொஞ்சம் சுரணை இருக்க வேண்டும். அது எல்லா முஸ்லிம்களிடமிருந்தும் ஒரே நேரத்தில் வெளிப்படவும் வேண்டும். 
ஆனால், அப்படியொரு நிலை அச்சமூகத்திற்குள் இல்லாததால் இனவாதம் வேர்விட்டு, கிளை பரப்பி வளர்ந்து கொண்டிருக்கின்றது. முன்னமே சொன்னதுபோல் முளையிலேயே இதனை கிள்ளியெறிய தவறிய அரசாங்கம் இப்போது கடப்பாரையைப் பயன்படுத்தி அதனை தறிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. அதுதான் - சமயம் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் விஷேட பொலிஸ் பிரிவு !

அரசின் கடப்பாரை

இலங்கையில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கின்ற அளெகரியமான நிலைமைக்கு இந்தப் பொலிஸ் பிரிவு தீர்வாக அமையும் என்று அரசாங்கம் பெருமிதம் வெளியிட்டிருக்கின்றது. அதேநேரத்தில், 'இது தேவையற்ற ஒரு ஏற்பாடு' என்று பல தரப்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஆயினும், இதுகாலவரையும் இலங்கையில் மத ரீதியான மோதல்கள் எதுவும் கிடையாது என்று பரப்புரைகளை மேற்கொண்டுவந்த அரசாங்கம் இவ்வாறான விஷேட விசாரணை பிரிவு ஒன்றை அமைத்ததன் மூலம் மத ரீதியான பிணக்குகள் காணப்படுகின்றன என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளமை இதில் மிகவும் கவனிக்கத்தக்க விடயமாகும். இனவாத நெருக்குவாரங்களை பெரிதாக அலட்டிக் கொள்ளாதிருந்த அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பின்வாங்கிய அரசாங்கம் இப்படியான ஒரு பிரிவை அமைத்ததன் மூலம் இப்பிரச்சினையை விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளமை நல்லதொரு காலடியாகும். இதயசுத்தியுடனும் நடுநிலையாகவும் இப் பொலிஸ் பிரிவு செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் சிறுபான்மை மக்களும் இன ஒற்றுமை விரும்பிகளும் நன்றியுடையவர்களாக இருப்பர். 

எவ்வாறிருப்பினும், இப் பிரிவின் உருவாக்கம் தேசிய மட்டத்தில் பல்வேறு சலசலப்புகளை தோற்றுவித்திருக்கின்றது. இந்த நாட்டின் நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் உள்ளடங்கலாக வேறு சில அமைச்சர்களும் இதனை ஒரு தேவையற்ற பிரிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் சட்டவியல் கோவையில் அனைத்து விவகாரங்களையும் கையாண்டு கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு தனியாகவும் ஒரு பிரிவை அமைப்பது வீண்விரயம் என்பது அவர்களது வாதமாக இருக்கின்றது. இதுதவிர மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தேசிய சூரா சபை, அஸ்கிரிய பீடத்தின் உறுப்பினரான தர்மானந்த தேரர் போன்ற தரப்பினரும் இது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 

அதிலும் குறிப்பாக - இனவாதத்தை வழிநடாத்திச் செல்கின்ற பொதுபலசேனா அமைப்பும் ஒரு மாற்றுக் கருத்தை சொல்லியிருக்கின்றது. இவ்வாறான விஷேட விசாரணைப் பிரிவு ஒன்று அவசியமற்றது என்று குறிப்பிட்டுள்ள அவ்வமைப்பு இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் இப்பிரிவை கலைக்காவிட்டால் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் இவ்வாறான பிரிவுகளை திறக்க நேரிடலாம் என அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கின்றது.
இவ்வாறான ஒரு பின்புலத்தில் மேற்படி பொலிஸ் பிரிவின் ஊடாக மாத்திரம் இனவாத சக்திகளை கையாள்வதும் கட்டுப்படுத்துவதும் எந்தளவுக்கு சாத்தியமென்பதை வெறும் நிகழ்தகவுகளை வைத்துக் கொண்டு அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளது. 

இலங்கையில் மத ரீதியான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று வழக்கம்போல பஹ்ரைனில் ஜனாதிபதி கருத்துவெளியிட்ட ஏக காலப்பகுதியில் கொழும்பிலுள்ள பௌத்த சாசன அமைச்சில் மத அடிப்படையிலான முறைப்பாடுகளை விசாரிக்கும் விஷேட பொலிஸ் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளமை ஒருவகை முரண்நகையாக தெரிகின்றது. இவ்வாறான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டதன் மூலம் இலங்கையில் மத முரண்பாடுகளை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் உலகுக்கு காட்டுவதற்கு ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், இலங்கையில் இனவாத அடக்குமுறைகள் எதுவுமில்லை என்று கடந்தவாரம் வரைக்கும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த கற்பிதங்கள் யாவும் விரும்பியோ விரும்பாமலோ இதன்மூலம் பொய்யாகிப் போனதை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். 

பல்லின சமூகங்களும் இனக் குழுமங்களும் வாழ்கின்ற நாடாகிய இலங்கையின் அரசியலமைப்பிலும் அடிப்படைச் சட்டத்திலும் மத முரண்பாடுகளை கையாள்வதற்கான அதிகாரங்கள் முன்னமே பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை நீதிக்கான அமைச்சரே உறுதிப்படுத்தியுள்ளார். இப்படியிருக்கையில், திடுதிடுப்பென புதிதாக ஒரு பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளாமல் விட்டுவிட்டு இப்போது அதற்கென பெருமளவு பணத்தைக் செலவளித்து விஷேட பிரிவொன்றை திறந்திருக்கின்றமை புதிர் நிறைந்ததாக உள்ளது.

ஊர் பார்த்த புதினம்

இந்த பொலிஸ் பிரிவு திறக்கப்பட்ட உடனேயே சிஹல ராவய அமைப்பு முதலாவது முறைப்பாட்டை தௌஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பதிவு செய்திருக்கின்றது. அதன் பின்னர் அசாத் சாலி ஒரு முறைப்பாட்டை செய்திருக்கின்றார். இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட 284 சம்பவங்களை அவர் பட்டியலிட்டு இருக்கின்றார். இம் முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸ் பிரிவு இந்த ஒவ்வொரு சம்பவங்களினதும் ஆதாரத்தை கோரியுள்ளது. 
சட்டத்திற்கு தேவை ஆதாரங்களும் சாட்சியங்களும்தான். மனச்சாட்சியால் சட்டத்தின் முன் சாட்சியமளிக்க இயலாது. ஆகவே முஸ்லிம் தரப்பு தமது முறைப்பாடுகளை ஆதாரபூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் ஊர் பார்த்திருக்க நடந்த சம்பவங்களுக்கெல்லாம் ஆதாரங்களை கோரி காலத்தை இழுத்தடிப்பது நல்லதல்ல. ஒரு கண்துடைப்புக்காகவே இந்த இப் பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதோ என்ற சில அவதானிகளின் சந்தேகத்தை மத விவகார விசாரணைப் பிரிவே மெய்ப்பித்து விடக் கூடாது. 

கடந்த காலப்பகுதியில் எந்தவித அடிப்படையும் இன்றி பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு இலக்கான வேளைகளில் பொலிஸார் புதினம் பார்த்துக் கொண்டிருந்ததை காணொளிகளில் பார்த்து உலகமே வியந்தது. காவியுடை தரித்த சிலர் இனவாதத்தை தூண்டும் பிரசாரங்களை முன்னெடுத்த வேளையிலும் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை சீண்டிப் பார்த்த போதுகளிலும் சட்டம் தன்கடமையைச் செய்வதையிட்டும் ஏதோவொன்று தடுத்தது. இந்நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விஷேட பிரிவின் பொலிஸாரும் கைகட்டி அதுபேலவே வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. 

இலங்கையில் முஸ்லிம் கலாசார அமைச்சு இல்லாத ஒரு சூழ்நிலையில் பௌத்த சாசன அமைச்சிலேயே இப்புதிய பொலிஸ் பிரிவு திறக்கப்பட்டிருந்தாலும் அங்குள்ள பொலிஸ் அதிகாரிகள் மிகவும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் விடயங்களை அணுக வேண்டும். எல்லா சமயங்கள் சார்பான முறைப்பாடுகளும் வெளிப்படையாக பரிசீலிக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். தேவை ஏற்படும் பட்சத்தில் சிங்கள அமைப்புக்கள் மட்டுமன்றி முஸ்லிம், தமிழ் அமைப்புக்களும் தனிநபர்களும் விசாரிக்கப்படலாம். இது சிங்கள நாடு என்பதற்காக சிங்கள சமூகத்தின் முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படக் கூடாது. அப்படியொரு துரதிர்ஷ்டமான நிலைமை ஏற்பட்டால் தனிப் பொலிஸ் பிரிவு அமைத்து இனவாதத்தை ஊக்குவித்த நாடு என்ற அவப் பெயரை இலங்கை பெற்றுக் கொள்வது வரலாறாகி விடும். 

சிறுபான்மை இனங்கள் மீது குறிப்பாக முஸ்லிம்களின் இனத்துவ அடையாளங்கள் மீது தாக்குதல் நடாத்தியதும், ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதும், சண்டித்தனம் பேசியதும் பரவலாக 'கமெரா கண்களில்' பதிவாகியிருக்கின்றது. பெருமளவு சம்பவங்களுக்கு ஊடக நிறுவனங்களிலும் அதற்கு வெளியிலும் நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றுள் ஒரேயொரு சம்பவம் தொடர்பான ஒரேயொரு ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஒரேயொரு இனவாதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலேயே போதும். அதற்குப் பின்னர் 'பிலிம்' காட்டுகின்ற – 'பில்ட்அப்' கொடுக்கின்ற எந்த இனவாத சக்தியும் ஓடி ஒளித்துவிடும். 

மத விவகார பொலிஸார் தமது கடமையைச் செய்ய வேண்டும். வேறு மாதிரியாக கூறினால், பொலிஸார் தம் கடமையை கடமையாக செய்வதற்கு அரசியல் அதிகாரமுள்ளவர்கள் இடமளிக்க வேண்டும். அதைவிடுத்து, உப்புக்குச் சப்பாக இன்னுமொரு பொலிஸ் பிரிவை திறந்தவிட்டு வழமைபோல செயற்பட்டால் தலையிடிக்கு தலையணையை மாற்றிய கதையாகவே வந்து முடியும்.

இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டிக் கொண்டிருப்பவர்கள் யார் என்பதற்கு சாட்சியங்களும் தடயங்களும் தேவையில்லை. இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தண்டிக்க சட்டம் துணிந்துவிட்டால் முறைப்பாடுகள் கூட அவசியமில்லை. 

அதன் தொடக்கமாக - முதலில் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் 'அசிங்கத்தை' வெளியேற்றுங்கள். நாற்றம் பொறுக்குதில்லை.

No comments

Powered by Blogger.