பிறைப் பிரச்சினை ஒரு சாபமா..?
(வைத்தியர் என். ஆரிப்
மாவட்ட வைத்திய அதிகாரி
மாவட்ட வைத்தியசாலை, சாய்ந்தமருது)
இன்னும் சில வாரங்களில் அரசியல்வாதிகள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை மீண்டுமொரு முறை தலையைப் பிய்த்துக் கொள்ளப் போகின்றார்கள். ஆம். நமது மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமழான் மீண்டுமொரு தடவை நம்மை அரவணைக்க வருகிறது. சிறியவர்கள், பெரியவர்கள், ஏழைகள், செல்வந்தர்கள், படித்தவர்கள், படியாதவர்கள் என்ற எந்த வேறுபாடுகளுமின்றி நோன்பு மாதத்தை வரவேற்கப் போகின்றோம்.
ரமழான் மாதம் வந்து விட்டால் தங்களை அறியாமலேயே எல்லோருடைய மனங்களிலும் ஒரு வகையான பரவசம் வந்துவிடும். தற்காலிகமாகவேனும் மார்க்கத்தின் பால் அதீத பற்றுதல் ஏற்பட்டு விடும். அது சரியா தவறா என்பது வேறு விடயம். எது எப்படியிருப்பினும், அந்த ரமழான் மாதத்தை சந்தோசமாக கழித்த வண்ணம் இருக்கையில் . . . இருபத்தொன்பதாவது நோன்பை அடைந்து விட்டால், புயல் அடிக்கத் தொடங்குவது போல, ஈகைத்திருநாளாம் புனித நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்கும் சர்ச்சை தொடங்கி விடும். அதுவரை இருந்த உவகை, மகிழ்ச்சி, சந்தோசமெல்லாம் தொலைந்து ஒருவிதமான கவலை எல்லோரையும் ஆட்கொள்ளத் தொடங்கி விடும்.
புனித ரமழான் நம்மை விட்டுப் பிரியப் போகின்றதே என்ற கவலையல்ல அது. மீண்டுமொரு முறை மாற்று சமூகத்தவர் எம்மை எள்ளி நகையாடக் கூடியவாறு, ஷவ்வால் பிறையைத் தீர்மானிக்கும் படலம் அல்லது நாடகம் அரங்கேற்றப்படப் போகின்றதே என்கின்ற கவலை தான் அது. இது எம்மைத் தொற்றிக் கொண்ட சாபமா என்கின்ற அளவிற்கு ஒவ்வொரு வருடமும் நோன்புப் பெருநாளைத் தீர்மானிப்பதில் சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வருடங்கள் பல கடந்தாலும் இந்த சர்ச்சைக்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இது தொடர் கதையாகவே இருக்கின்றது.
இந்த வருடமும் இந்த நிலை ஏற்படத் தான் வேண்டுமா என்று யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இறுதி நேரம் வரை காத்திருக்காமல், இந்தப் பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று இப்போதே சம்மந்தப்பட்ட சகலரும் கலந்துரையாடி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும். எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவாறானதொரு முறை கண்டறியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. மக்கள் மத்தியிலே குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் குறிப்பாக மாற்று சமூகத்தினர் நம்மைப் பற்றித் தவறான கண்ணோட்டத்தைத் தொடர்ந்தும் தந்துவிடாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது இதனோடு சம்மந்தப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பாகும். நிச்சயமாக, இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
நோன்புப் பெருநாள் தினத்தைத் தீர்மானிக்கும் பிறையைக் காண்பதில் குழப்பம் வருவதற்கான காரணம் என்ன என்பதை முதலில் ஆராய வேண்டும். எமது இனிய மார்க்கமான இஸ்லாமிய மார்க்கம் எளிதானதும், இலகுவானதுமான எக்காலத்துக்கும் பொருத்தமானதுமான மார்க்கம் என நாங்கள் எல்லோரும் ஏற்றிருக்கின்றோம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது என நம்புகின்றேன்.
இவ்வாறானதொரு மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற நாங்கள் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரிந்து நிற்பதன் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளுக்கும், அதனை அழிக்க நினைப்பவர்களுக்கும் உரமிட்டுக் கொண்டிருக்கின்றோம்.
சங்கைமிக்க புனித ரமழான் மாதத்தின் நோன்புகளை நோற்று மகிழ்வுறுகின்ற நாங்கள், பெருநாளை களிப்புடன் கொண்டாடி மகிழ முடியாமல் திணறுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன? சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுள்ள ஒரே மார்க்கம் எங்களுடைய இஸ்லாம் மார்க்கம் தான் என்ற பெருமைப்படுகின்ற நாங்கள், இந்த விடயத்தில் தீர்வில்லாமல் ( நிச்சயமாகத் தீர்விருக்கும் ) அல்லது ஒன்றுபட முடியாமல் அல்லல்படுவதற்கான காரணம் என்ன?
பிறை கண்டு நோன்பை ஆரம்பியுங்கள், பிறை கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள். பிறை தென்படாவிட்டால் மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தியாக்குங்கள் என்று படியாத பாமர மக்களுக்குக் கூட விளங்கக் கூடியவாறு மிகவும் இலகுவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டிருக்கும் போது நாங்கள் இன்னும் ஏன் திணறிக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் பூகோள ரீதியாக பிறை தென்படக்கூடிய ஒரு அமைவிடத்திலே இருப்பதன் காரணமாக, வேறொரு நாட்டையோ அல்லது தேசத்தையோ பின்பற்றுவதற்கு அவசியம் ஏற்படாது. பிறை தென்படாத நாடுகளில் வாழ்பவர்களுக்கு அது அவசியமாகலாம். எனவே, இந்த விடயத்திலே முரண்பட இடமிருக்காது. அப்படி முரண்பாடு வருமாக இருந்தால், அது அடிப்படையை விளங்கிக் கொள்ளாத தன்மையாகவே இருக்கும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் பிறை கண்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற பிரச்சினை தான் ஏற்படுகின்றது. கடந்த வருடம் கூட இந்தப் பிரச்சினையினால் தான் பெரும் அமளிதுமளியே ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வே இல்லையா? உண்மையில் இதற்கான பிரதான காரணம், பிறைக்குழுவானது கொழும்பை மட்டும் மையப்படுத்திக் கொண்டு எதுவித திட்டமிடலும் இல்லாமல் பிறரில் ஏதோவொரு வகையில் எழுந்தமானமாக தங்கியிருப்பதாகும். கொழும்பைத் தவிர நமது நாட்டின் எந்தப்பகுதியிலாவது, ஒரு குறித்த அமைப்பை மட்டும் சாராமல், சகல தரப்பினரையும் உள்ளடக்கியவாறு பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றதா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். வெறுமனே சந்தர்ப்ப சூழ்நிலையினால் தற்செயலாக ஒருவர் காணுகின்றதாகவே அமைகிறது. மாறாக, ஒரு திட்டமிட்ட அடிப்படையில் பிறை பார்ப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் எங்கேயும் இல்லை.
நான் கடந்த வருடமும் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்த பின்னர், ஒரு ஆலோசனையை முன்வைத்திருந்தேன். புனித ரமழானுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்ற காரணத்தினால், சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வருவதே எனது இந்த முயற்சியாகும்.
· குறைந்தபட்சம் கரையோரத்தைச் சேர்ந்த பிரதான ஊர்கள் அனைத்திலும் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
· இதிலே ஏட்டிக்குப் போட்டியாக இல்லாமல் குறித்த ஊரைச் சேர்ந்த சகல தரப்பினரும் பங்காளர்களாக முன்வர வேண்டும். இவ்வாறு ஒன்று சேர்ந்து செயற்படுபவர்கள் தங்களுடைய விபரங்களை தலைமைப் பிறைக்குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மூலமாகவே தலைமைப் பிறைக்குழு தொடர்பு கொள்ளப்பட வேண்டும். இது தேவையற்ற சிக்கல்கள் வராமலிருக்க உதவும்.
· முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட இடத்திலே பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
· இது இருபத்தியெட்டாவது நோன்பிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.
· மஹ்ரிப் தொழுகையின் போது, ஒரு பிரிவினர் தொழ மற்றப்பிரிவினர் பிறை பார்ப்பதிலே தொடர்ந்தும் ஈடுபட வேண்டும். பின்னர், தொழுதவர்கள் தொடர்ந்தும் பிறை பார்க்க மற்றையவர்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
· இப்தார் நடாத்த விருப்பப்படுகின்றவர்கள் இந்த இடத்திலே அதனை போட்டி போட்டுக் கொண்டு நடாத்த முன்வர வேண்டும். வெறுமனே புகழுக்காக இப்தார் நடத்துவதை விட இதிலே நன்மைகள் அதிகம் கிடைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
· இவ்வாறான அமைப்பிலே பிறை பார்க்கப்பட்டு, அது தென்படுமிடத்து அந்தத் தகவல் கொழும்பு தலைமைப் பிறைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதற்கும் அறிவிப்புச் செய்யப்பட வேண்டும். இந்த முறையிலே பிறை கண்டு கொழும்பு தலைமைப் பிறைக்குழுவிற்கு அறிவிக்கப்படுகின்ற போது, பிறையைக் கண்டவர் யார், அவரின் நம்பகத் தன்மை எப்படி, சாட்சிகள் யார் என்பன போன்ற கேள்விகளைத் தொடுத்து காலத்தை வீணடிப்பதற்கும், தேவையற்ற சந்தேகங்களை உண்டுபண்ணி குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் இடம் இருக்காது.
· ஒரு குறிப்பட்ட நேரத்திற்குள் மேற்படி குழுக்களிடமிருந்து தகவல்கள் எதுவும் வராவிடில், பிறை தென்படவில்லை என அறிவித்து சகலரும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
· இங்கே முக்கியமாக விளங்கிக் கொள்ளவேண்டிய விடயமொன்றிருக்கிறது. விதண்டாவாதம் புரிகின்றவர்கள் இங்கேயும், ஊருக்கொரு பிறைக்குழுவா என்று சர்ச்சையை ஏற்படுத்தலாம். அவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். பிறைக்குழு ஒன்று தான். பிறையைப் பார்ப்பதற்காக திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பிரதான ஊர்களில் அந்தந்த ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து செயற்படுவார்கள்.
இன்று அமைப்புக்கள் பல காணப்பட்டாலும், இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்து, ஈகோ எனப்படும் தாழ்வுச்சிக்கலை முன்னிலைப்படுத்தாமல் எமது முஸ்லிம் சமுதாயம் இந்த நாட்டில் மாற்று சமூகங்களின் முன்னால் தலைநிமிர்ந்து நடக்கக்கூடியவாறு சம்மந்தப்பட்ட சகல தரப்பினரும் முன் வரவேண்டும்.
யா அல்லாஹ், ஒற்றுமை எனும் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடிக்கக் கூடிய மக்களாக எங்களை மாற்றி விடுவாயாக! ஆமீன்!

ஆகபூர்வமான ஒரு விடயம் உங்களால் சொல்ல பட்டுள்ளது
ReplyDeleteஇப்படியான விடயங்களை சம்பந்த பட்டவர்கள் செவிமடுபார்கல....???//
Masha Allah - Good Thoughts
ReplyDeleteMay Allah guide you the right path, we all are expecting and pray for the same mission. In shaa Allah we need to work hard to achieve this vision.
Alhamdhu lillah.this is good idea to make a good dicission.
ReplyDeleteI don't think ACJU will agree with this proposal, they known for their ego, with ignorant members.
ReplyDelete