தௌஹீத்வாதிகளுக்கு மார்க்கப் பிரச்சாரத்தின்போது கோபம் ஏற்படக்கூடாது...!
(அல்தாபி)
அத்வைதக் கொள்கை அழிக்கப்பட வேண்டியதே. ஆனால் அதனை வன்முறைகள் மூலம் அழித்தொழிப்பது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமல்ல என தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் இஸ்லாமிய அழைப்பு பிரச்சாரகர் பக்கீர் முஹம்மது அல்தாபி இலங்கையில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் காத்தான்குடி கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் இஸ்லாமிய அழைப்புப் பிரச்சாரக்கூட்டம் கடந்த 02ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்த கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். 'அழிக்கப்பட வேண்டிய அத்வைதம்' என்னும் தலைப்பில் உரையாற்றிய அவர் அங்கு மேலும் கூறியதாவது,
உலகில் ஒவ்வாக் கருத்துடையவர்களைக் கூண்டோடு அழித்தொழிப்பதற்காகக் கங்கணம் கட்டிச் செயற்பட்டவர்களில் இன்று வரை முன்னிலை வகிப்பவர் சர்வாதிகாரி ஹிட்லராகும். அவர் யூத சமுதாயத்தினரை வேரோடு அழித்தொழிப்பதற்காக மேற்கொண்ட கொடூரத்தனமான நடவடிக்கைகள், ஊக்குவிப்புக்கள் பற்றியெல்லாம் வரலாறுகள் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவரால் யூத சமூகத்தினரை அவ்வாறு அழித்தொழிக்க முடிந்ததா?
சொந்த நாடின்றி நாடோடிகளாகத் திரிந்த யூத மக்கள் ஹிட்லரின் தாக்குதலுக்குப் பின்னால் தமது நடவடிக்கைகளை திட்டமிட்டமுறையில் மேற்கொண்டு தமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டதுடன் இன்று தமக்கென சொந்தமான நாடொன்றினையும் கொண்டுள்ளனர். உலகில் மக்கள் பயன்படுத்துகின்ற விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளிலும் அவர்கள் கொடிகட்டிப் பிரகாசிக்கின்றனர். சர்வாதிகாரி ஹிட்லர் மறைந்து 50 – 100 ஆண்டுகளுக்குள்ளாகவே அவர்கள் இத்தகைய பெரு வளர்ச்சியை அடைந்துள்ளனர் என்பது வரலாற்றில் மாற்றுக்கருத்தாளர்களை வன்முறைகள் மூலம் ஒடுக்க முற்படுகின்ற அனைவருக்கும் ஒரு பாடமாகும்.
இதுபோலவேதான் இந்தியாவிலும் சாதிப் பாகுபாட்டின் காரணமாக மேல் சாதியினரால் கொடுமைப்படுத்தப்பட்டு அடக்கியொடுக்கப்பட்டு வந்த கீழ் சாதியினர் இன்று ஒற்றுமைப்பட்டு பெரும் சக்தியாக வளர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகாரத்தினாலும், ஆயுத பலத்தினாலும், வன்முறைகளாலும் மாற்றுக் கருத்துடையவர்களை அடக்கியொடுக்கி அழித்தொழித்து விடலாம் எனக் கருதுவது தவறாகும். மாற்றுக் கருத்தினை சரியான கருத்தினால்தான் எதிர்கொண்டு வெல்ல முடியுமேயன்றி, வன்முறைகளால் ஒரு போதும் அதனை வெற்றி கொள்ளவோ, அழித்தொழிக்கவோ முடியாது.
இதற்கு முன்னரும் இவ்வாறான மாற்றுக் கருத்துடையவர்களுக்கு எதிரான மாபெரும் எழுச்சிப் போராட்டங்களும், தாக்குதல்களும் நடாத்தப்பட்டன. அவற்றின் மூலம் அவர்களை அழித்தொழிக்க முடிந்ததா? முன்னரை விடவும் இப்போது அவர்கள் தமது இருப்புக்களை ஸ்திரப்படுத்தி இருப்பதை கண்ணெதிரே காண முடிகின்றது. இவ்வாறு வன்முறைகள் மூலம் மாற்றுக் கருத்துடையவர்களை அழித்தொழிக்க முற்படுவதை, அவர்களின் வீடு வாசல்களைத் தாக்குவதை, அவர்களின் பள்ளிவாசல்கள் தர்ஹாக்களை இடித்தழிப்பதை எல்லாம் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
அத்வைதம் என்கிற இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக்கருத்துக்கள் அழிக்கப்பட வேண்டியதேயாகும். அதில் எமக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதற்கான கருத்துக்களங்களும், பிரச்சார நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இஸ்லாத்திற்கு எதிராகவும், தூய இறைவனுக்கு மாசு கற்பிக்கும் வகையிலும் அவர்கள் தெரிவித்து வருகின்ற நிந்தனைக் கருத்துக்களுக்கு எதிராக நாம் நமது மக்களுக்குச் சரியான கருத்துக்களை சடைவடையாமல் தெரிவிக்க வேண்டும். இந்த வழியில் நாம் முயற்சி செய்துதான் இறைவனின் அருளுடன் அவர்களின் அத்வைதக் கருத்துக்களைத் அழிக்க முடியுமேயன்றி, வன்முறைகளால் அல்ல என்பதே ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.
இங்கேயும் சில தௌஹீத் ஜமாஅத்துக்கள் இருக்கின்றன. அவை அத்வைதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதால் தங்களையும் தௌஹீத்வாதிகள் என அடையாளப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளன. அத்வைதத்தை எதிர்ப்பது மட்டும்தான் தௌஹீத்வாதிகளின் கடமையா? மார்க்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏனைய வழிகேடுகளையும், இஸ்லாத்திற்கு முரணான காரியங்களையும் கண்டித்து அவர்கள் எதிர்க்க வேண்டாமா?
சீதனம் வாங்குவது இஸ்லாத்தில் விலக்கப்பட்டது. மஹர் கொடுப்பதையே நமது மார்க்கம் வலியுறுத்துகின்றது. சீதனத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்பவர்கள் அத்தகைய திருமணங்களுக்குச் சென்று கை நனைப்பதைக் கை விட்டு தமது எதிர்ப்புக்களைத் தெரிவிப்பார்களா? இவ்வாறு சமூகத்தில் காணப்படும் மார்க்கத்திற்கு முரணான அத்தனை விடயங்களிலும் தமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தைரியமாகத் தெரிவிப்பவர்கள்தான் உண்மையான தௌஹீத்வாதிகளாக இருக்க முடியும்.
நாங்கள் பேசுவதை முதலில் நாங்களே கடைப்பிடிக்க வேண்டும். எங்களால் கடைப்பிடிக்க முடியாதவற்றைப் பற்றி நாங்கள் பிறருக்கு உபதேசம் செய்யக்கூடாது. அதனை சமூகமும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளாது.
இந்த மண்ணில் நீண்ட காலமாக அத்வைதம் வாழ்ந்து வருவதற்கு, செயற்பாடுகளில்லாத வாயளவுப் பிரச்சாரங்களும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே தௌஹீத்வாதிகள் இஸ்லாம் வலியுறுத்தும் காரியங்களை முழு அளவில் கடைப் பிடித்து வாழ்வதற்கு முன்வர வேண்டும். நமது பின்புறத்தையே சுத்தமாகக் கழுவிக்கொள்ள முடியாதவர்கள் எல்லாம் ஊரைக் கழுவிச் சுத்தப்படுத்துவதற்கு முன்வரக்கூடாது.
தௌஹீத்வாதிகளுக்கு மார்க்கப் பிரச்சாரத்தின்போது கோபம் ஏற்படக்கூடாது. பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நிராகரிப்பாளர்கள் எத்தனை துன்பங்களை விளைவித்தனர். அவர் கோபப்பட்டாரா? வன்முறைகளில் ஈடுபட்டாரா? மாறாக தமக்கு அநீதி செய்த மக்களுக்காக அவர் அனுதாபப்பட்டார். அவர்களின் அறியாமையை நினைத்து அவர் வேதனைப்பட்டார். அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுமாறு பிரார்த்தித்தார். இதுதான் ஏகத்துவப் பிரச்சாரத்தில் இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழியாகும். இதனால்தான் இஸ்லாம் வளர்ந்தது. இவ்வாறுதான் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தும் தனது ஏகத்துவ மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடும்.
நபி இப்ராஹீம் (அலை) எதிரியான மன்னனிடம் தனது மனைவியை அனுப்பி வைத்தபோது அவர்கள் இருவரைத் தவிர வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அப்படிப்பட்ட அடிமட்ட நிலையில் இருந்த இஸ்லாம் இன்று கோடிக்கணக்கான முஸ்லிம்களைக் கண்டு வளர்ந்துள்ளது என்றால் அது எதனால்? அன்பு, கருணை, பிரார்த்தனை, நேர்மையான பிரச்சாரம் போன்றவை தௌஹீத் பிரச்சாரப் பணியில் ஈடுபடுபவர்களிடம் இருக்க வேண்டும். பேரும், புகழும் பெற வேண்டும் என்கிற தமது சுயநலன்களுக்காகவோ அல்லது அரசியல் ரீதியான நலன்களை எதிர்பார்த்தோ ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.
20 -30 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் விரல்விட்டெண்ணக்கூடிய அளவில் இருந்த எமது தௌஹீத் ஜமாஅத் இன்று இலட்சக்கணக்கில் உறுப்புரிமை பெற்ற பாரிய அமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன் ஆதரவாளர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் கோடிக்கணக் கில் எமது ஜமாஅத் ஒரு பலமிக்க கட்டமைப்பாக எழுச்சி பெற்றுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரும் அண்மையில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன? எமது மூத்த பிரச்சாரத் தலைவர்களின் அர்ப்பணிப்பான, அழ்ழாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்த மிகக் கடுமையான உழைப்பாகும்.
இன்று பல பள்ளிவாசல்களை, ஆனாதை இல்லங்களை, முதியோர் பராமரிப்பு நிலையங் களை, மார்க்கக் கல்வி நிலையங்களை நாம் நடாத்தி வருகின்றோம். இவற்றின் பராமரிப்புச் செலவினங்களுக்காக பல கோடி ரூபாய்கள் எமது ஜமாஅத்தினரின் கைகளில் புரள்வடைந்து வருகின்றது. ஆனாலும் எமது மூத்த தஃவாப் பிரச்சாரத் தலைவர்கள் பலர் இன்றும் தமது வறுமைக்கோட்டைத் தாண்ட முடியாதவர்களாகவே மிகவும் ஏழ்மையாளர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் மனைவிமார் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே தமது வாழ்க்கையைக் கடத்தி வருகின்றார்கள்.
காரணம் என்ன? பெருமானார் (ஸல்) அவர்கள் ஏழையாகவே வாழ்ந்து இந்த ஏகத்துவ மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தார். அவர் ஏழையாக வாழ்வதையே விரும்பினார். ஏழை களோடு சுவனம் செல்வதை விரும்பினார். இதிலிருந்து ஏகத்துவத்தின் மூல வேர் ஏழ்மையி லும், பொறுமையிலும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் புரிந்து கொள்ள வேண்டும். அத்வைதத்தை எதிர்ப்பது மாத்திரம் ஏகத்துவமாகாது. இறைவனின் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்து மக்களை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்க வேண்டியது இஸ்லாமிய அழைப்பாளர்களின் கடமையாகும். இதனைச் செய்வதற்கு பொறுமையும், நம்பிக்கையும், இறை திருப்தியை மாத்திரம் அடையும் தூய எண்ணமும் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மையும் அறியாமல் நமது முயற்சிக்கான வெற்றி கடைக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அத்வைதிகளால் பொதுமக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வரும் அவர்களின் தவறான அர்த்தப்படுத்தல்களையுடைய பல்வேறு குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்hன யதார்த்தமான விளக்கங்களையும் அங்கு தெரிவித்தார். கூட்டத்தின் இறுதியில், 'இன்னொரு ஈமானியப் புரட்சி' இம்மண்ணில் ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் அத்வைதிகள் பலரும் அங்கிருந்து சென்றதையும், ஏராளமான பெண்களும் தமது குடும்பத் தாருடன் இறுதி வரை அமர்ந்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்து. vaarauraikal

Post a Comment