Header Ads



'நரேந்திர மோடியை இன்னொரு ராஜபக்ஷ என்று சொல்லி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்'

நரேந்திர மோடியை அலரி மாளிகைக்கு அழைத்து, எல்லோருக்கும் கொடுப்பது போல், அவருக்கும் கோப்பி குடிக்க கொடுத்து, அரசியல் பாடம் நடத்தலாம் என இந்த நாட்டில் இன்று சிலர் முட்டாள்தனமாக கனவு காண்கிறார்கள். அது மட்டுமல்ல, நரேந்திர மோடிக்கு தமிழ் நாட்டு ஜெயலலிதா லேடி தேவையில்லை என்று இவர்களே முடிவுக்கு வந்து, இவர்களே குருட்டு சந்தோசமடைகிறார்கள். இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி, ஒடுக்கி தங்கள் இனவாத அரசியலை முன்னெடுக்க மோடி உதவிடுவார் என இவர்கள் நினைக்கின்றார்கள்.

நரேந்திர மோடி மூன்று முறை குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்து, அந்த மாநிலத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றினார், இன்று இந்தியாவின் தேசிய தலைவராக போகும் இரும்பு மனிதன். முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 37 வாக்குகளை பெற்று  மிகப்பெரும் சாதனை செய்துள்ளார், தமிழ்நாட்டு இரும்பு பெண். தென்னிந்தியாவில் தனது செல்வாக்கை வளர்க்கும் முனைப்பில், இன்று மோடி ஜெயலலிதாவை அழைத்து பேசி, அவருடன் இணைந்து செயற்படும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே இந்த நாட்டில் சிலர் காணும் இனவாத கனவுகள், சிறு கோப்பையில் பெரும் முதலைகளை காணும் முட்டாள்களின் கனவுகள் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின்  ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாமல் டெல்லியில் ஆட்சி நடத்த, மோடிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பது இன்று இங்கு அரசு தரப்பில் பெரும் சந்தோஷ சமாசாரமாக பேசிக்கொள்கிறார்கள். அரசு ஊடகங்களில் எல்லாம் இதை மீண்டும் எழுதி, சொல்லி இவர்களே மகிழ்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒரேயொரு தொகுதியில் மாத்திரமே மோடியின் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தனி பெரும்பான்மை இருந்தாலும், தென்னிந்தியாவில் தன் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளவேண்டும் என திட்டம் போட்டுள்ள மோடிக்கு ஜெயலலிதா ஒரு நம்பகமான அரசியல் பங்காளியாக இருப்பாரென இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  

இன்று இந்திய பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சுமார் 40 ஆசனங்களையே பெற்றுள்ளது. அதிமுக 37 ஆசனங்களை பெற்றுள்ளது. இன்னொரு பிராந்திய கட்சியான மம்தா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரஸ் மேற்கு வங்காளத்தில் 32 ஆசனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் அதிமுக, திரினாமுல் காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து 69 ஆசனங்களை வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறுவோம் என மம்தா பானர்ஜி, ஜெயலலிதாவுக்கு யோசனை கூறியுள்ளார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் செல்வாக்கு இருகின்றது. இந்நிலையில் ஜெயலலிதாவை  மட்டம் தட்டி இலங்கை அரசின் அதிகாரபூர்வ பேச்சாளர் அமைச்சர் கேஹேலிய ரம்புக்வெல பேசுகிறார். அதன்மூலம் இவர்கள் குருட்டு சந்தோசமடைகிறார்கள்.

மோடி நேற்று பிறந்து இன்று காலையில் இந்திய அரசியலுக்கு வரவில்லை. அவருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அதைவிட இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும், இந்திய பாதுகாப்பு தொடர்பிலும், இந்திய நாட்டுக்கு இலங்கை அரசு கொடுத்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற மகிந்த ராஜபக்ஷ அரசு தயாராக வேண்டும். இன்று இலங்கையில் தமிழர்கள் ஒரே நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு கேட்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவதில்தான் இந்நாட்டில் அமைதி நிலவுவதற்கான உத்தரவாதம் இருக்கிறது. அந்த அமைதிதான் இந்திய நலனுக்கும் உகந்தது. இலங்கை நலனுக்கும் உகந்தது. இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் நலன்களுக்கும் உகந்தது. இதைவிடுத்து குறுக்கு வழியில் சென்று, நரேந்திர மோடியை அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எல்லோருக்கும் கொடுப்பதுபோல், அவருக்கும் கோப்பி குடிக்க கொடுத்து, அரசியல் பாடம் நடத்தலாம் என முட்டாள்தனமாக கனவு காண வேண்டாம் என இந்த அரசாங்கத்துக்கு கூறுகிறேன். மோடியை இன்னொரு ராஜபக்ஷ என்றும் அவரை, ராஜபக்ஷவின் இந்திய பதிப்பு என்றும் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் நான் கேட்டுகொள்கின்றேன். 

No comments

Powered by Blogger.