தம்பியை பிரசவிக்க கர்ப்பிணித் தாய்க்கு உதவிய 8 வயது சிறுமி
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பா நகரில் வசிக்கும் க்ரிஸ்டில் கர்சியா தனது இரண்டாவது குழந்தையை பிரசவிக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 2 வாரங்கள் முன்னதாகவே வீட்டில் தனியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குளியல் அறைக்குள் இருந்தபோது அவரது கருப்பையின் பனிக்குடம் உடைந்து, பிரசவ வலி வாட்டி, வதைக்கத் தொடங்கியது.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மகளான ஜாஸ்மின் மெக்எனானியை அழைத்த க்ரிஸ்டில் கர்சியா, ‘911’க்கு போன் செய்து, ’எனது தாய் பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்’ என்று தெரிவிக்கும்படி கூறினார்.
அந்த சிறுமியும் அவ்வாறே செய்தாள்.
அவசர உதவி வாகனம் வந்து சேர்வதற்குள் குழந்தையின் தலை வெளியே எட்டிப்பார்க்க தொடங்கி விட்டது. உடனடியாக ஜாஸ்மினை அழைத்து, குழந்தையின் தலையை பத்திரமாக பிடித்துக் கொள்ளும்படி தாய் கூற, அந்த சிறுமியும் அவ்வாறே செய்து, தனது தம்பி இந்த பூமியில் பிறக்க உறுதுணையாக இருந்தாள்.
பின்னர், அங்கு வந்து சேர்ந்த டாக்டர்கள் உடனடியாக குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் சேயையும் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மகளின் புத்தி சாதுர்யத்தை புகழ்ந்து பாராட்டும் க்ரிஸ்டில் கர்சியா, ’ஜாஸ்மின் எனக்கு மிகப் பெரிய ஒத்தாசையாக இருந்தாள். நிலமையை புரிந்துக் கொண்டு, பதற்றப்படாமல் நான் சொன்னபடி கேட்டு, அவள் நிதானமாக செயல்பட்டாள்’ என்று பெருமைப்பட குறிப்பிடுகிறார்.

Post a Comment