மூவின சமூகத்தவர்களையும் அரவணைத்தவர்களாக...!!
(Abu Shakeek)
எமது நாட்டில் நாம் மூவின சமூகத்தவர்களையும் அரவணைத்துக் கொண்டு கௌரவமாகவும் அமைதியாகவும் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் எமது இளம் வாலிபர்கள் உட்பட இளம் யுவதிகள் அனைவரும் இஸ்லாத்துடன் அனைத்து பாடங்களையும் படிப்பதுடன் குறிப்பாக அரசியலையும் கற்றுக்கொண்டவர்களாக சமூகத்தில் மாறாவிட்டால் மாத்திரம் நாம் எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்க முடியாது. எமது சமூகம் அரசியல் அநாதையாக முடங்கிக்கிடக்க வேண்டிய காலம் வெகு தூரமில்லை. ஆகவே, எமது சமூகம் குறிப்பாக எதிர்காலத் தலைவர்களாக திகழக் கூடிய இளைஞர்கள் இஸ்லாமிய நல்லறிவுடன் இஸ்லாம் கூறிய அரசியல் விஞ்ஞானத்தைப் படித்தவர்களாக அரசியல் பலம் பெற்ற ஓர் நாளைய சமூகம் இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
இஸ்லாம் என்பது சாந்தி, சமாதானத்தை ஏற்படுத்தும். இந்நாட்டை பிரிக்க அல்லது ஆழ வேண்டும் என்ற ஆசை பகல் கனவில் கூட இல்லாத ஒரு சமூகம் இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் தான் என்பதை ஆணித்தரமாகவும் யதார்த்தமாகவும் தெளிவாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த நாட்டை அந்நிய ஆதிக்கம் முதல் இன்று வரை காட்டிக்கொடுத்த வரலாறு முஸ்லிம்களுக்குக் கிடையாது. எமது நாட்டுக்கு நன்கு விசுவாசமாகவும் நாட்டுப் பற்று மிக்க சமூகமாகவும் இருந்ததனாலேயே அன்றும் இன்றும் நாட்டுக்கு விசுவாசமுள்ள அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து முஸ்லிம் சமூகத்தை சிங்கள அரச தலைவர்கள் கௌரவித்தனர். இதுவே இந்நாட்டின் வரலாறுமாகும்.
முப்பது ஆண்டுகள் மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் கொடூர யுத்தத்துடன் முஸ்லிம் சமூகம் உடன்படவில்லை. விடுதலைப்புலிகளுடன் அன்று ஒன்றுசேர்ந்து அப்போராட்டத்தில் நாட்டுக்கெதிராக குரல் கொடுத்திருந்தால் இந்நாட்டின் தலைவிதி தலைகீழாக மாறியிருக்கும். எனினும் முஸ்லிம் சமூகம் அன்றும் இன்றும் என்றும் எந்தப் பிரிவினை வாதிகளுக்கும் இடமளிக்க மாட்டார்கள் என்பதனை இன்றைய தலைமைத்துவம் நன்கு தெரிந்தும் கூட சுயநல அரசியல் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக பௌத்த மத சகோதரர்களை இன ரீதியாகத் தூண்டி தாம் ஆதிக்கம் செலுத்த மேற்கொள்ளும் அரசியல் வியூகங்களை கைவிட்டு இந்நாட்டை உலகிலே ஒரு சிறந்த சிங்கள பௌத்த தர்ம நாடாக நடைமுறைப்படுத்த இதே சுத்தியுடன் செயல்படுவதே இத்தலைமைத்துவத்துக்கு அத்தியவசியமானதும் தன் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இன, மத வேறுபாடுகளுக்கப்பால் பௌத்த தர்மத்தை பேணிப் பாதுகாத்த ஒரு தலை சிறந்த தலைவராகாத் திகழவும் வரலாறு படைக்கவும் இன்றைய தலைமைத்துவம் கவனத்தில் எடுக்க வேண்டும். மாறாக கண்மூடித்தனமான அரசியல் செயல்களைக் கட்டவிழ்த்து அநாகரிகமான முறையில் மேற்கொள்ள முற்பட்டால் நிச்சயம் ஆட்சி செய்கின்ற ஆட்சியாளரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான் என்பது திண்ணம். அநீதம் விளைவிக்கப்பட்ட சமூகத்துக்கு இறைவனின் உதவி நிச்சயம் உண்டு.
ஆகவே, இந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகத்தவர்களாகிய இந்து, முஸ்லிம் சமூகத்தை அரவணைத்தவர்களாக அன்புக்கரம் நீட்டி அரசியல் அதிகாரங்களையும் உரிமைகளையும் சலுகைகளையும் கொடுக்கத் தவறுவார்களேயானால் நிச்சயம் மீண்டுமொரு அபாயகரமான நிலைக்கு நமது நாடு தள்ளப்படலாம் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த நாட்டை ஆண்ட பௌத்த தலைவர்களுள் ஒருவரும் முஸ்லிம் சமூகத்தை நன்கு மதித்தவர்களுள் ஒருவருமான மறைந்த ஜனாதிபதி J.R. அவர்கள் அன்று மாடு அறுப்பதற்கான எதிர்ப்பை பௌத்த பிக்குகள்.அமைதியான வழியில் தெரிவித்த சந்தர்ப்பத்தில் அதற்கான சரியான பதிலை முன்வைத்து பௌத்த மதத்தை பாதுகாத்தார். J.R. அவர்களிடமிருந்த பௌத்த தர்மத்துடனான தொடர்பையும் தன்னிடமிருந்த நிறைவேற்று அதிகாரத்தையும் சரியான நேரத்தில் முறையாகப் பாவித்து நாட்டில் நிலவிய அந்த மாடு அறுப்புத் தடையை பிக்குகளுக்கு தெளிவுபடுத்தி மாடு அறுப்பதற்கான அனுமதியையும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கினார்.
ஆனால், இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை தம் கைவசம் வைத்திருக்கும் தற்போதைய ஜனாதிபதி சுயநல அரசியல் இலாபத்துக்காக பொதுபலசேனா என்ற அமைப்பை செயலிழக்கச் செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. இன்று J.R. இருந்திருந்தால் இதற்கு ஒரு சுமுகமான வழி பிறந்திருக்கும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் கௌரவமாகவும் நன்னடத்தை கொண்டவர்களாகவும் தூரநோக்குடன் சிந்தித்து செயல்படுபவர்களாகவும் நல்ல ராஜ தந்திரிகளாகவும் சமூகங்களுக்கிடையில் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆனால், இன்றுள்ளவர்களின் நிலை அதற்கு முற்றிலும் முரணாகக் காணப்படுகிறது. இன்று ஜனநாயக வாக்கெடுப்பு முறை இல்லாமையே அதற்கான மூல காரணம் எனலாம். அரசியல் தலைவர்கள் ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக இந்த நாட்டில் நடாத்தப்படுகின்ற தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும். இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்ற வாக்களிப்பு முறையை இலங்கையிலும் அமுல்படுத்த வேண்டும். எமது அண்டை நாடான இந்தியாவில் செயல்படுகின்ற அரசியல் நடைமுறைகளை எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்த முடியுமானால் ஜனநாயகம் இந்நாட்டிலும் நிலைக்கும் ; மக்கள் நிம்மதியாக வாழக்கூடியதாகவும் இருக்கும்.
இன்று இந்நாட்டை ஆட்சி செய்கின்ற தலைவர்கள் பௌத்த மதத்தைப் போதிக்கின்ற, வழி நடாத்துகின்ற தலைவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு இருப்பதை அறிய முடிகின்றது. வெறும் பௌத்த மதத்தை மட்டும் வைத்து அரசியல் அதிகாரம் பெற்று ஆதிக்கம் செலுத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்பவர்களாக மட்டுமே இவர்கள் இருப்பதை நாம் காண முடிகின்றது.
இன்று உலகில் அனைத்து மூலை முடுக்குகளிலும் இஸ்லாம் பரவிக்கொண்டிருப்பதை இணையதளங்களினூடாக நாம் அனைவரும் அறிவோம். அதனைக் கண்டு அந்நிய மதங்கள் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தினால் சில பௌத்த பிக்குகள் உட்பட இன்னும்பலர் வியந்து போயிருப்பது அறியாத புரியாத விடயமல்ல. ‘உண்மை என்றும் நிலைக்கும்’ என்பது போன்று உண்மையைச் சொல்ல, போதிக்க மறுப்பதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் இலங்கையைப் பொறுத்தவரையில் அதிகம் உண்டு.
. எம்மை இந்த நாட்டில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் கௌரவமாகவும் வாழ விடுங்கள். எமது சமூகத்தால் பௌத்த மதத்துக்கோ அல்லது வேறு எந்த மதத்துக்கோ எந்தத் தீங்கும் விளையவில்லை. இஸ்லாம் என்பது இறுதியாக வந்த ஒரு மார்க்கமாகும். இஸ்லாத்துக்கு முன் தோன்றிய ஏனைய மதங்களை நேர்வழிப்படுத்தவே அனைத்து சமூகங்களுக்குமான இறுதித் தூதராக முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டார்கள். நபியவர்கள் அனைத்து சமூகங்களுக்கும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு தூதரேயன்றி முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்ல என்பதை ஏனைய சமூகங்கள் உணரவேண்டும். இஸ்லாம் சொல்கின்றபடி முஸ்லிம்கள் நடக்க கடமைப்பட்டவர்கள். இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கக் கிடைத்தாலும் ஒருநாள் மரணம் வந்தே தீரும்என்ற உண்மையும் அதன் பின் உலகில் தான் செய்த நல்ல விடயங்கள் மாத்திரம்தான் நிலைத்திருக்கும் என்பதை உறுதியாக நம்புகின்ற சமூகமே முஸ்லிம் சமூகம்.
.jpg)
Post a Comment