Header Ads



வரலாறுகளை இருட்டடிப்பு செய்யக் கூடாது..!

(முஹம்மது ஜான்ஸின்) 

முழு உலகத்தையும் ஆட்சி செய்த நபிமார் இருவரில் நபி ஸுலைமான் (அலை) அவர்களைப் பற்றி அதிகமான விடயங்கள் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் சில ஆயத்துக்களின் நேரடிக் கருத்துகள் பின்வருமாறு.

21:77. இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

21:78. இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.

21:79. அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

21:81. இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது. இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.

21:82. இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்றி வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.

38:35. ''என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பொருங் கொடையாளியாவாய்'' எனக் கூறினார்.

38:36. ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
இவ்வாறு நபி ஸுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்தஆலா பல நற்பாக்கியங்களை விஷேட சக்திகளையும் வழங்கியிருந்தான். 

இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தில் பறக்கும் புத்தர் இலங்கைக்கு மூன்று தடவைகள் வந்ததாகவும் அதில் ஒரு தடவை நாகதீபத்துக்கு விஜயம் செய்து அங்கு நிகழவிருந்த ஒரு சண்டையை தடுத்ததுடன் அவர்களுக்கு நியாயமான தீர்ப்பொன்றை வழங்கி இருதரப்பாரையும் சமாதானப் படுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.  

அதே போன்று இந்திய வரலாற்று நூலான மணிமேகலையில் மணிபள்ளவத்துக்கு  புத்தர் பறந்து வந்ததாகவும் அவர் மாமா மருமகன் ஆகிய இருவருடைய படைகளுக்கிடையில் நடைபெறவிருந்த ஒரு யுத்தத்தை தமது தீர்ப்பின் மூலமாக நிருத்தியதாகவும் அதனைத் தொடர்ந்த அம்மக்கள் எல்லோரும் அவருடைய மார்க்கத்தை ஏற்றனர் என்றும் வருகின்றது. 
இங்கு குர்ஆனில் கூறப்பட்டுள்ள பறக்கும் சக்தி, தீர்ப்பு கூறுதல் என்பன மேற்படி வரலாற்று நூல்களிரண்டிலும் கூறப்பட்டுள்ள விடயங்களுடன் தொடர்பு பட்டுள்ளதாக விளங்குகின்றது. இதிலிருந்து ஸுலைமான் நபி இலங்கைக்கு விஜயம் செய்திருக்கலாம் எனக் கருதலாம். இறைவனே யாவற்றையும் அறிந்தவன். 
அல்லாஹ்தஆலா குர்ஆனில் வரலாறுகளைக் கூறுவது அதிலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டுமென்பதற்காகவே. மேலும் அல்குர்ஆன் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நுபுவத்துக்கு பிற்பட்ட அனைவருக்கும் அருளப்பட்டதாகும். இதனுடைய ஆயத்துக்கள் அதனுடைய விளக்கங்களை அறிந்தே உமர் (ரலி), யூஸுப் இஸ்லாம் போன்ற பலர் இஸ்லாத்துக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளனர். 

புனித குர்ஆனிலுள்ள வரலாறுகள் தான் எல்லா வரலாற்று நூல்களிலும் கூறப்பட்ட வரலாறுகளை விட உண்மையானவையாகும். ஏனெனினல் அவை எக்காலமும் அறிந்த எல்லாம் வல்ல இறைவனால் அருளப்பட்டதாகும். எனவே ஏனைய வரலாற்று நூல்களிலுள்ளவற்றை விட குர்ஆன் ஹதீஸீக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை சிலர் வரலாற்றை மிகைப்படுத்தி எழுதுவதாகவும் அதை திரிபு படுத்துவதாகவும் கூறி எழுதியிருந்தனர். அவர்களின் செயல் குர்ஆனை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கூறப்பட்டு;ள வரலாறுகளை எழுதினால் காபிர்கள் நம்பமாட்டார்கள் எனவே அவற்றை எழுதக்கூடாது என்ற விடயம் குப்ருடைய ஒரு பேச்சாகும் என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ளவேண்டும். 

மேலும் வரலாறுகள் எழுதப்படும் போது அது மேலதிக ஆய்வுகளுக்கு உட்பட்டவை என்பதை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக் கொண்ட விடயம். அதனால் தான் நூல் வெளியீட்டு விழாக்களில் நூலாய்வாளர் ஒருவரை நியமித்து அவர் மூலமாக புத்தகத்திலுள்ள சில குறை நிறைகள் சுட்டிக்காட்டப்படுவது வழக்கமாகும். யாருடைய வரலாற்றிலாவது தவறுகள் இருந்தால் அவை சரியான வரலாற்றுச் சான்றுகளுடன் சுட்டிக்காட்டப்பட வேண்டும். 

சஅத் பின் அபிவக்காஸ் (ரலி) அவர்கள் தமது சீனாவுக்கான பயணத்தின் போது மணிபால் என்ற துறைமுகத்தில் தங்கிச் சென்றுள்ளார்கள். இன்றும் கூட இலங்கை பொலிஸ் பிரிவு வைத்துள்ள இலங்கை வரைபடத்தில் நயினாதீவு மணிபால் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பொலிஸ் இன்ஸ்பெக்டராக கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏ.எப்.புவாத் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதேபோன்று மாலிக் பின் தீனார் (ரஹ்) அவர்கள் இந்தியா மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்து இந்நாடுகளின் துறைமுக பிரதேசங்களில் வாழ்ந்த அரபிகளை இஸ்லாத்தில் நுழைவித்துள்ளார். விகிபீடியா இணையத்தளத்தைப் பார்க்கவும். நாகதீப எவ்வாறு நயினார் தீவு என்றாகியது என்று ஆராய்ந்தால் அத்தீவு நயினார் சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் அப்பெயரைப் பெற்றது என்பதை கீழக்கரை இலங்கை அர்வித் தொடர்புகள் எனும் நூலை எழுதிய இந்திய வரலாற்றாசிரியர் சுபை; ஆலிம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்திய வரலாற்றாசிரியர்கள், ஒல்லாந்தர், போர்த்துக்கீஸர், ஆங்கிலேயர், அரபியர் எழுதிய வரலாற்று நூல்களையும் நாம் படிக்க வேண்டும். யாழ்ப்பாணத் தமிழ் வரலாற்றாசிரியர்கள் எழுதிய புத்தகங்களை மட்டும் படித்து அவையே வரலாறு என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு புரிய நியாயமில்லை. 1990 ஓக்ரோபரில் வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் கூட அதன் பிறகு வடபகுதியில்  எழுதப்பட்ட அத்தனை வரலாற்று நூல்களிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே நாம் எந்த வரலாற்று நூல்களை நம்புவது? 

அல்குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் அவற்றிலுள்ள வரலாற்றுக் குறிப்புகளையும் யாரைத் திருப்திப்படுத்தவும் மாற்றக் கூடாது என்பது எனது நிலைப்பாடாகும். 


No comments

Powered by Blogger.