தெற்காசியாவில் சர்வதேச பிராந்திய சக்திகளுக்கிடயிலான ஆதிக்கப் போட்டியும், ஜெனீவா விவகாரமும்..!
(கலாநிதி அஷ் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
முஸ்லிம் உலகை துண்டாடி திண்டாடுவதில் மேலைத்தேய உலகம் யூதர்களின் வேலைத்திட்டத்தை அமுல் படுத்தி வருகிறது.. பனிப்போரின் பின்னர் மேலைத்தேய முதலாளித்துவ உலகின் நிகழ்ச்சி நிரல்களையே ஐ நா மற்றும் அனைத்து சர்வதேச அமைப்புக்களும் அமுல்படுத்திவருகின்றன. தென் கிழக்கு ஆசியாவில் குறிப்பாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது அதிகாரப் போட்டா போட்டியை நலன்களை உறுதி செய்துகொள்ளும் இலக்கில் அமெரிக்காவும் நேச நாடுகளும் மேலைத்தேய உலகும் இலங்கையில் இனப்பிரச்சினையை மூலதனமாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் நம்பிய தமிழர்களும், மேலை நாடுகளில் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள போராடும் புலம் பெயர்ந்த தமிழர்களும் இருந்தவற்றையும் இழந்து நிற்கும் நிலைமையில் தொடர்ந்தும் பிராந்திய சர்வதேச சக்திகளிடம் ஏமாந்து கொண்டிருக்கின்றமையே உண்மையாகும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலத்திலும் சர்வதேச சமூகத்தை நாடவில்லை அதற்கு தென்னிலங்கை முஸ்லிம்களின் இருப்பும் பாதுகாப்பும் மாத்திரமன்றி முஸ்லிம்கள் ஒரு நடுநிலை சமுதாயமாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற பாரம்பரிய சிந்தனையுமாகும்.
இந்த நாட்டில் முஸ்லிம்களின் நடுநிலைமையான அரசியல் நடவடிக்கைகளும் நிலைப்பாடுகளும் முஸ்லிம்களை கடந்த மூன்று தசாப்தங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் இருதலைக் கொல்லி எறும்பாக சில சந்தர்ப்பங்களில் பலிக்கடாக்களாக வைத்திருந்த நிலையிலேயே முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அமைதிக்கும் சமாதான சக வாழ்விற்கும் பாரிய விலையினை செலுத்தியுமுள்ளனர்.
போருக்குப்பின்னரான இலங்கையில் முஸ்லிம் சரணாகதி அரசியல் சமூகத்திற்கு மாத்திரமன்றி தேசத்திற்கும் பாதகமான பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டமையும் பாராளுமன்றத்திலோ அமைச்சரவயிலோ அல்லது தேசிய ஊடகங்களிலோ அல்லது உள்நாட்டில் பேச வேண்டிய அரங்குகளிலோ வாய்மூடி மௌனமாக இருந்ததன் விளைவுகளையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
வெறுமனே தேர்தல் என்று வரும் பொழுதும் பதவிகள் பறிபோகும் என்ற நிலைமையிலும் எமது அரசியல் பலம் குறித்த வீம்புகள் பேசுவதும் ஆட்சியினை தூக்கி வீசுவோம் என அதிகப் பிரசங்கித் தனமாக அறிக்கை விடுவதும் ஆரோக்கியமான அரசியலாக எனக்குத் தெரியவில்லை.
தேசிய பிராந்திய பூகோல அரசியலில் இடம்பெறும் அதிகாரப் போட்டா போட்டியிற்குள் முஸ்லிம் சமூகத்தின் பரிமாணங்களும் பெறுமானங்களும் தெரியாது திக்கு முக்காடும் அரசியலை நாம் செய்வதும் தமிழ் தேசிய அரசியலுடன் கைகோர்ப்போம் சர்வதேச சமூகத்திடம் செல்வோம் என்றெல்லாம் கூக்குரலிடுவதும் அரசியல் மேடைகளில் வீராப்பு பேசுவதும் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் மாட்டிவிடும் சாணக்கியமற்ற தூர நோக்கற்ற
செயற்பாடுகளாகும்.
பேச வேண்டிய அரங்குகளில் பேசாது, பேரம்பேசும் சந்தர்ப்பங்களில் சோரம் போய்விட்டு அரசியல் வலுவை காட்டவேண்டிய தருணங்களில் காட்டாது ஜெனீவா என்றும் ஆட்சி மாற்றம் என்றும் இப்பொழுது நாம் பேசுவது பிழையான இடத்தில் பிழையான நேரத்தில் பிழையான அரங்குகளில் சரியானதை பிழையாகவே பேசுவது போன்ற ஒரு நிலைப்பாடாகும்.
சர்வதேச பிராந்திய சக்திகளுக்கிடயிலான போட்டா போட்டியில் ஆழ அகலம் தெரியாது மூக்கை நுழைத்து மீண்டும் ஒருமுறை மிகவும் பயங்கரமாக முஸ்லிம் சமூகத்தை படுபாதாளத்தில பலிக் கடாக்களாக தள்ளிவிடும் அரசியலைத் தானா முஸ்லிம் சமூகம் செய்து கொண்டிருக்கின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் காட்டிய காட்டுகின்ற பாரபட்சங்கள் குறித்த கவலையும் ஆத்திரமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக இந்த நாடும் ஜனாதிபதியும் இருக்க வேண்டும் என்றே எனது உள்மனம் சொல்கின்றது..
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேனா, ராவணா பலய ,சிஹல உறுமய ,சின்ஹல ராவய, ஜாதிக ஹெல உறுமய போன்ற சக்திகளை போஷிப்பவர்களும் மேற்படி மேலைத்தேய யூத மேலாதிக்க சக்திகளே என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
இன்ஷா அல்லாஹ் முதுகெலும்புள்ள முஸ்லிம் அரசியல் ஒன்றே இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்குமே ஒழிய அமெரிக்க யூதர்கள் தலைமையிலான சர்வதேச சமூகம் அல்ல என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்..என்றாலும் சர்வதேச சமூகத்தினையும் வெளியுறவுகளையும் சர்வதேச நிறுவனங்களையும் முஸ்லிம் சமூகம் முற்று முழுதாக மறந்துவிட வேண்டும் என நான் கூறவுமில்லை. ஜெனீவாவில் மார்ச் மாதம் இலங்கைக்கு அமெரிக்கா தலைமையில் எதிராக கொண்டுவரப் படவுள்ள போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் மீறல் பிரேரணை இன்று தேசத்தினதும் பிராந்தியத்தினதும் கவனத்தை கவ்வியுள்ளது.
சரவதேச மற்றும் பிராந்திய அரங்கில் மேலைத்தேய ஆசிய மற்றும் தென்னாசிய சக்திகளுக்கிடையிலான பனிப்போர் போன்றதொரு அதிகாரப் போட்டா போட்டியிற்கு இலங்கையின் கள நிலவரங்களை சாதகமாக்கிக் கொடுப்பதில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளதாகவே எனக்குத் தெரிகிறது. சரவதேச சமூகம் என அழைக்கப்படும் மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் காலடியில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழ் தேசிய அரசியலையும் கதியென்று கிடக்கச் செய்வதில் தற்போதைய அரசியல் தலைமை குறிப்பாக போருக்குப் பின்னர் செய்துவருகின்ற பாரிய அரசியல் தவறுகள் அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் குறிப்பாக அரசியல் ரீதியாக அரவணைத்துக் கொள்ளப் படவேண்டிய ஜனநாயக நீரோட்டத்தில் உள்ள தமிழ்த்தேசிய தலைமையினை குறிப்பாக வடமாகாண சபை நிர்வாகத்தினை இந்த அரசியல் தலைமை தமக்கு சாதகமாக வென்று கொள்ளாது பாரிய அரசியல் இராஜதந்திர பிழைகளை செய்து வருகிறது.
அதேபோன்று தமக்கு எதிராக சர்வதேசமே சுனாமிபோல் திரண்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில் தேசத்தின் சுதந்திரத்திற்கும் ஒருமைப் பாட்டிற்கும் சமாதான சகவாழ்விற்கும் பாரிய பங்களிப்பினைச் செய்த அதேபோன்று யுத்தத்திலும் சமாதானத்திலும் பாரிய விலையினைச் செலுத்தியுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ள காடைத் தனங்களை அரசினால் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் போனமை அல்லது அவ்வாறான தரப்புக்களை அரசில் பங்காளிகளாக கொண்டுள்ளமை தற்போதைய அரசியல் தலைமை தமக்குத் தாமே இழைத்துக் கொண்டுள்ள மிகப் பெரும் அரசியல் தவறாகும்.
சர்வதேச முஸ்லிம் உம்மத்தாயினும் சரி, இலங்கை முஸ்லிம் சமூகமாயினும் சரி சர்வதேச சமூகம் எனும் மேலைத்தேய யூத சியோனிச மேலாதிக்க சக்திகளின் மீது நம்பிக்கை வைக்காவிடினும், தேசிய அரசியலில் முஸ்லிம்களது நிலை சரணாகதியாகவும் அதேவேளை பெரும் அவநம்பிக்கையை தோற்றுவித்துள்ளமையும் கவலைக்கிடமான அம்சமாகும்.
அதிகாரத்தையும் அச்சுறுத்தலையும் அல்லது பேரின மேலாதிக்கத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ முஸ்லிம் அரசியல் சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகளின் மீது பிரயோகிப்பதன் மூலம் இலங்கையின் எந்தவொரு அரசியல் தலைமையும் தத்தமது சொந்த அரசியலையும் மொத்த தேசிய அரசியலையும் முகவர்களூடாக முன்கொண்டு செல்ல முயல்வதாயின் அது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாக மாறிவிடலாம்.
ஆட்சியில் உள்ள எந்த அரசாயினும் இதய சுத்தியுடன் சிறுபன்மயினரோடு குறிப்பாக முஸ்லிம்களோடும் சமாதன சகவாழ்விற்கான அடித் தளங்களை இடாவிடின் அதேவேளை சர்வதேச பிராந்திய சக்திகளின் கூலிப் படைகளாக தொழிற்படும் இன மத வெறியர்களை பூரண கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவராவிடின் மத்திய கிழக்கில் பதட்டத்திற்கு பாலஸ்தீன் மையமாக இருப்பதுபோல் பிராந்தியத்தில் பதட்டத்திற்கு இலங்கை மையமாக மாறிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை.
தற்போதைய அரச தலைமையை (இலங்கையை அல்ல) சர்வதேச அரங்கில் ஆட்சி மாற்றத்தினை இலக்காகக் கொண்டு தனிமைப் படுத்தவே இலங்கையில் கூலிப்படைகளைக் கொண்டு இனமத வெறி பிரச்சாரங்களை நோர்வே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் மேற்கொள்வதனை பல்வேறு தரப்புக்களும் உணர்த்தியுள்ள நிலையிலும் அரசியல் தலைமை முஸ்லிம் சமூகத்தின் உள்ளக மற்றும் சர்வதேச அரசியல் பரிமாணங்களை அவற்றின் சரியான கோணங்களில் உள்வாங்கத் தவறியுள்ள அதேவேளை அவற்றின் அரிச்சுவடிகளைக் கூட சரணாகதி முஸ்லிம் அரசியல் தலைமைகள் அறியவில்லை அல்லது அதற்கான அடிப்படைத் தகைமைகள் அவற்றிடம் இல்லை என்பதுவும் மிகவும் கவலைக் குரிய விடயமாகும்.
.jpg)
Post a Comment