உமக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம்..! (வீடியோ இணைப்பு)
(ரியாதிலிருந்து அபூ ஸஃத்)
“சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனெனில் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று அல்லாஹ் கூறுவான்). (35:37)
“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான். நிச்சயமாக அதில் சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.” (39:42)
“அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.” (63:11)
“இன்னும் எவர்கள் பாவச் செயல்களைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.” (04:18)
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!” (04:78)
“உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!” (15:99)
“இன்னும்: அவன் தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.” (22:66)
“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான்.” (23:99)
“நீங்கள் எதை விட்டும் விரண்டோடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்தித்தே தீரும் பிறகு, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்த (அல்லாஹ்) விடம் நீங்கள் மீட்டிக் கொண்டு செல்லப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்' (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.” (62:08)
இதோ ஓர் காணொளி. உன் வாழ்வை அது திருத்தக் கூடும்.
* கால் பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருக்கும் ஓர் விளையாட்டு வீரன், அவனது முடிவு நேரம் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே வந்துவிடுகிறது. அப்படியே சாய்ந்து விட அவனது உயிர் இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
* குத்துச் சண்டையில் ஈடுபடும் இருவர், இருவரும் சரமாரியாகத் தாக்க ஒருவரின் முடிவு நேரம் குத்துச் சண்டை மேடையில் இருக்கும்போதே வந்து விடுகிறது. அப்படியே சாய்ந்து விட அவனது உயிர் இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
* வாலிபர்கள் சிலர் அதி வேகமாகக் காரை ஓட்டிச்சென்று திடீர் என்று ''பிரேக் பன்னி'' சாகசம் புரிகின்றனர். அது உயிரோடு விளையாடும் ஓர் ஆபத்தான விளையாட்டு என்பதை அவர்கள் அறியாமலில்லை. கார் வெடித்துச் சிதறி வாலிபர்கள் தூக்கி வீசப்படுகின்றனர். கைகளும், கால்களும் களன்று தெறிக்கின்றன. அத்தனை வாலிபர்களின் உயிர்களும் இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றன. (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
* இன்னொருவர் தொழுதுகொண்டிருக்கிறார். ஸுஜூத் செய்தவர் தலையைத் தூக்க முன்பு அவரது முடிவு நேரம் வந்துவிடுகிறது. அவரது உயிர் இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
* மற்றொருவர், மக்களுக்கு நல்லுபதேசம் செய்கின்றார். சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போதே அவரது முடிவு நேரம் வர, அவர் அப்படியே சாய்ந்து விடுகிறார். அவரது உயிர் இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
* வேறொருவர் ஓர் அவையில் உரை நிகழ்த்துகிறார். அவரது முடிவு நேரம் வர, அவர் அப்படியே சாய்ந்து விடுகிறார். அவரது உயிர் இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
சகோதரனே! உனக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கு மேலாக ஒரு செக்கன் கூட இவ்வுலகில் இருக்க முடியாது. எனவே, உன் மறு வாழ்வு பற்றி சிந்தித்து உன்னைத் திருத்திக்கொள்.
1. ''அல்லாஹு அக்பர்'' என அதான் கேட்ட மாத்திரத்தில், உன் தொழிலை, உன் குடும்பத்தை, உனது உறக்கத்தை, உனது விளையாட்டை வைத்துவிட்டு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகிறாயா? ஸஹாபாக்களின் காலத்தில் முனாபிக்களையும், நோயாளிகளையும் தவிர வேறு எவரும் ஜமாஅத் தொழுகைக்கு சமுகமளிக்காமல் இருப்பதில்லை என்பதை உணர்ந்துகொள்.
2. ஊர் மக்கள் செய்வதை எல்லாம் இஸ்லாம் என்று கருதி உனக்கே நீ அநீதியிழைக்க முற்படாதே. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாத்தை தூய வடிவில் கற்று செயலாற்ற முயற்சி செய்.
3. நம்பிக்கை சார்ந்த விடயங்களான ''அகீதாவை'' நபி (ஸல்) அவர்கள் கூறியபடியே உள்ளதா? என சரிபார்த்துக்கொள். அது பழுதடைந்தால், உனது வணக்கங்களால் நீ எந்தப் பயனையும் பெறப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்.
4. பாவங்களை முழுமையாகத் தவிர்ந்து நட. அல்லாஹ் உன்னை எப்பொழுதும் அவதானித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை மறந்துவிடாதே.
5. நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஸுன்னத்தான வணக்கங்களை அதிகப்படுத்தி இறைவனின் உகப்பைப் பெற்றுக் கொள்.
6. இஸ்லாமிய ஒழுக்கங்களையும், நற்குணத்தையும் எப்பொழுதும் கடைபிடிப்பாயாக.
நேர்வழியில் வாழ்ந்து, ஈமானோடு மரணிக்கும் நற்பாக்கியத்தை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.
.jpg)
You Tube இல் காணொளி Open ஆகாவிட்டால் இதனை Open செய்து பார்க்கலாம்.
ReplyDeletehttp://safeshare.tv/w/NzxjVcqppC
thankssss my dear
ReplyDelete