விற்கப்படும் கல்வியும், விலைபோகும் பாடசாலைகளும்...!
(கத்தாரிலிருந்து கல்முனை தாஸீம்)
கல்வியியல் வரலாற்றில் கலங்கரை விளக்காய் பிரகாசிக்கின்ற கிழக்கு முஸ்லிம்களின் கல்விச் செயற்பாட்டில் எவ்வகையான மாற்றங்கள் தற்பொழுது வெளிக்கொணரப்படுகின்றன அக்கல்வி எந்த வகையில் களவாடப்பட்டு நயவஞ்சகத் தன்மையுடன் கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை வாசகர்களாகிய நீங்களும் மாணவர்களும் நன்கு அறிவீர்கள். அது பற்றிய எனது கருத்துக்களை உங்கள் முன் பதிவதற்கு விளைகின்றேன்.
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக எமது மாணவர்களின் கல்வி எமக்குத் தெரியாமலேயே எம்மிடமிருந்து பிரத்தியோக வகுப்புக்கள் என்ற போர்வையில் பணத்துடன் சேர்த்து சூறையாடப்படுகின்றது என்ற உண்மையை இன்னும் நாம் புரிந்துகொள்ளாமலே இருந்து வருகின்றோம். பாடசாலைகளில் கற்பிக்கப்பட வேண்டிய கல்வி வெறும் பாசாங்குக்காய் மாத்திரம் மாறி அனைவரும் பிரத்தியோக மேலதிக வகுப்பினில் தங்கியிருக்கும் ஓர் கட்டாயப்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதன் உண்மையான நிலை என்ன? கல்வியலாளர்களின் குறைபாடா அல்லது பணமோகம் கொண்ட ஆசிரியர்களின் அசமந்தப் போக்கா? இல்லை பெருமையை விரும்புகின்ற பெற்றோர்களின் கவனக்குறைவா?
இக்கால கட்டத்தில் கல்வி என்பது பணம் படைத்தவர்களின் சொத்தாக மாத்திரம் இருக்கக்கூடியதாக அமைந்துள்ளமை எம் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்க கூடிய ஒன்றாகவே உள்ளது. அது மட்டுமன்றி கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கல்வி கற்பிக்கின்ற அதிலும் குறிப்பாக விஞ்ஞானப்பிரிவுகளுக்கு பௌதீகவியல் இணைந்த கணிதம் மற்றும் உயிரியல் இரசாயனவியல் கற்பிக்கின்ற எமது கல்முனையில் பிலபலமான ஆசிரியர்கள் பாடசாலையில் கற்பிக்கின்ற வீதத்தினையும் அதே வேளை சுளை சுளையாக நோட்டுக்களை வாங்கி பிரத்தியோக வகுப்புக்களில் அல்லது மேலதிக வகுப்பு என்ற பெயரில் கற்பிக்கின்ற வீதத்தினையூம் ஒப்பிட்டு நோக்கினால் பத்தில் ஒரு பங்கு கூட பாடசாலையில் கற்பிப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
குறிப்பிட்ட ஓர் ஆசிரியர் பௌதீகவியலில் சுமார் 3 வருடங்களில் கற்பிக்கின்ற பாடங்களை இரண்டு அல்லது இரண்டரை வருடங்களில் மேலதிக வகுப்பில் முடித்துவிட்டு எஞ்சிய காலத்திற்கு மீட்டல் பயிற்சி என்ற பெயரில் காசினை கொள்ளையிடுகிறார். அதே ஆசிரியர் அதே பௌதீகவியல் பாடத்தினை பாடசாலையில் கற்பிக்கும் போது குறைந்தது 3 அலகுகள் அல்லது 5 அலகுகள் மாத்திரம் 3 வருடங்களில் முடித்துவிட்டு நேரம் போதாது என்ற ஓர் காரணத்தை முன்வைக்கிறார். இது எவ்வகையில் நியாயம் சுமார் 3000க்கு மேற்பட்ட மாதாந்த கட்டணத்தை கொடுத்து ஓர் ஏழை மாணவன் கல்வி கற்கக் கூடிய நிலையில் எம் மாணவர்கள் உள்ளனர். இலவசக் கல்வி என்று அரசாங்கம் மாதாந்தம் சம்பளம் கொடுத்து கற்பிக்கச் சொன்னது யாருக்காக ஏழை மாணவர்களுக்காகத்தானே! ஏன் இந்த அவலட்சணமான நிலை?
நான் உயர்தரத்தில் கல்வி கற்கும்போது என்னிடம் இணைந்த கணிதம் கற்பிக்கின்ற ஓர் ஆசிரியர் கூறிய வார்த்தை என்னவென்றால் வெளி டியூசன்களில் ஆசிரியர்கள் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு மரியாதை தெரியவில்லை பிள்ளைகளுக்கு கற்பிக்கத் தெரியவில்லை இவ்வாறு கற்பிப்பது நல்லமல்ல என்றெல்லாம் துhசித்திருந்தார். காசி கொடுத்து கற்பது தவறு என்றெல்லாம் வாதிட்டார். ஆனால் இன்று அவர் கல்முனையில் உள்ள டியூசன்களில் பிரபலமான வாத்தி. இதை என்னவென்று சொல்வது. தனக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் தூற்றுவது கிடைத்தால் போற்றுவது. இவர்களெல்லாம் சமூகத் துரோகிகள். ஏழை மாணவர்களின் கல்வியில் கைவைத்த எந்த ஒரு ஆசிரியரும் அல்லாஹ்வின் சமூகத்தில் பதில் சொல்லியாகவேண்டும் என்பது திண்ணம். எமது ஊர்களில் உயர்தரத்தை கற்க நாதியற்றவர்களாக எத்தனை மாணவர்கள் உள்ளனர் என்று இந்தப் பணப்பேய்களுக்கு தெரியுமா? அம் மாணவர்களின் உள்ளக் குமுறல்களை உள்ளார்த்தமாக அறிந்துள்ளார்களா? வெறும் பணத்திற்காக எமது சமூகத்தை அடகு வைக்கும் இந் கேவலம் கெட்ட நிலை இன்னும் வேண்டுமா?
ஆகவே என் மதிப்புக்குரிய ஆசிரியர்களே அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக எமது ஊரிலுள்ள ஏழை மாணவர்களின் நலனுக்காக குறைந்தது பாடசாலைகளிலாவது பாட அலகுகளை முடித்து எவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களில் வரிந்து கட்டிக் கற்பிக்கின்றீர்களோ அதே போன்று நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு துரோகம் செய்யாமல் எமது மாணவர்களில் நலனுக்காக உழைக்க முன்வரவேண்டும் பல அறிவாளிகள் சமூசேவகர்கள் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை இருந்தபோதும் நான் சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் இருக்கும். மாணவர்களே உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில் எனவே நீங்களும் சற்று இவ்விடயத்தில் கரிசனை எடுப்பதன்மூலம் எமது சமூகத்தை உன்னத நிலைக்கு இட்டுச்செல்வதில் நீங்களும் பங்காளர்களாவீர்கள் என்பது உண்மை.

பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் சமூகத்தின் புத்தி ஜீவிகளும் இந்த விடயத்தில் தங்களது கவனத்தை செலுத்துவது மிக மிக இன்றியமையாதது ஆகும்.
ReplyDeleteஒரு சமூகத்தின் முதுகெலும்பான கல்வி விடயத்தை கோடிட்டு காட்டுயதட்காக சமூக நலனில் அக்கறையுள்ள தாஸீம் அவர்களுக்கு நன்றிகள்.