Header Ads



முஸ்லீம் காங்கிரஸின் முகவெத்திலைக்குள் ஏற்பட்டுள்ள குத்துவெட்டு..!

(தந்திமகன்)

இலங்கைவாழ்த் திருநாட்டில் பல்லினக் கட்சிகள் தோற்றம் பெறத் தொடங்கிய காலத்தில் இலங்கை முஸ்லீம்களிடையே அதிகளவு செல்வாக்குப் பெற்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  தோற்றம் பெற்றது. இக்கட்சி இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாக தன்னை பதிவிடுவதற்கு முன்னர், ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி நகரில் 1981 ஆம் ஆண்டில் எம். எச். எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண உள்ளூர்த் தலைவர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநித்துவப் படுத்துவதற்காக இக்கட்சி உருவாக்கப்பட்டது. இவ்வாறாக வளர்ச்சியடைந்து 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 2மூ வாக்குகளைப் பெற்று 225 இடங்களில் 5 இடங்களைக் கைப்பற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்சித்தாவல் என்பது ஸ்ரீலமுகா கட்சிக்கு புதியவிடயமல்ல. ஒருகாலகட்டத்தில் தற்போதையை பிரதியமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா ஓட்டமாவடியைச்சேர்ந்த காலஞ்சென்ற முன்னாள் பிரதியமைச்சர் காதர் முகையதீனுக்கும் இடையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பங்குபோடும் சண்டையில் அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் தோல்வி கண்டார். அப்போது தனது பிரதிநிதித்துவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ஹிஸ்புல்லாஹ் கட்சியிலிருந்து தூக்கிவீசப்பட்டார். இதுபோன்று இக்கட்சிக்குள் தொடராக ஒப்பந்தங்கள் மீறப்படுவதும் மீறுபவர்கள் கட்சியிலிருந்து விலகுவதும், அவர்கள் கட்சி ஆரம்பிப்பதும் நடைமுறையில் இருந்துவருகின்ற ஒருவிடயமாகும். அந்த வடிவில் வந்ததுதான் இன்று கல்முனையில் நடைபெறும் மேயர்பதவிக்கான போட்டியாகும்.

பொதுவாக இலங்கையைப் பொறுத்தளவில் அரசியல் அதிகாரம் என்பது அதுவும் ஆளுங்கட்சியில் அங்கத்துவம் பெறுகின்றவர்கள் நாட்டின் அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தனது இருப்பினை உறுதிப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழமையான விடயமாகும். அதிலும் முஸ்லீம்களைப் பொறுத்தளவில் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தனது கட்சிக்குள், தான் விரும்புகின்ற இடம் கிடைக்காதபோது சந்தர்ப்பம் பார்த்து ஆளும் கட்சியில் தாவுகின்ற ஒரு போக்கு உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் பலர் உண்டு. ஆனால் இந்த விடயமும் சிலவேளைகளில் இன்றைய கல்முனை மேயர் ஸ்ரீலமுகா கட்சியின் ஆதிக்கத்தின் காரணமாக பதவி விலகுமாறு அழுத்தம் அதிகரிக்கின்றபோது உடனடியாக ஆளும் கட்சிக்குத்தாவி தனது இருப்பினை தக்கவைத்துக் கொள்ள ஏதுவாக சட்டத்தில் எங்காவது ஓட்டை இருக்கின்றதா என்று பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விடயத்திற்கு வருவோம். கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலின்போது ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி, தேர்தலில் முதன்மை வேட்பாளராக கட்சியின் துணைச் செயலாளர் நிசாம் காரியப்பர் நிறுத்தப்பட்ட நிலையில் அவரே தேர்தலின் பின்னர் மேயராக தெரிவு செய்யப்படுவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்டபோதிலும், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த மீராசாஹிபு சிராஸ் முதலாவது இடத்தை பிடித்து மேயராகவும், நிசாம் காரியப்பர் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு பிரதி மேயராகவும் இருத்தப்பட்டார்கள்.

இத்தேர்தலின்போது விருப்பு வாக்குகள் எப்படி இருந்தாலும் நிசாம் காரியப்பரை அந்தப் பதவிக்கு நியமிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை விருப்பம் கொண்டிருந்தத போதிலும், கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்ற மீராசாஹிபு சிராஸுக்கே பதவி வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சாரர் கட்சிக்குள் உள்ளேயும் ஆதரவாளர்கள் மத்தியிலும் கோரிக்கை வைத்தனர். அதன் காரணமாக அப்போது இழுபறி நிலை தோன்றியிருந்தது. கட்சித் தலைமைப்பீடம் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் 4 வருட பதவிக்காலத்தில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை குறித்த இருவருக்கும் தலா இரண்டு வருடங்கள் என சுழற்சி அடிப்படையில் வழங்க முடிவு செய்து பிரச்சினைக்கு முற்றுப் புள்ளிவைத்தது கட்சி.

இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் கல்முனை மாநகர மேயரை அழைத்து பதவி விலகுமாறு கேட்க மாநகர மேயரோ தன்னால் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என பதிலளித்திருந்தமையினால்தான் இந்த அமளிதுமளி ஏற்பட வழிவகுத்திருந்தது. மேலும், அவர்; கூறிய பதிலும் சற்று வித்தியாசமானதாகவே இருந்தது. அதாவது, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தன்னை தெரிவு செய்த தனது பிரதேச வாக்காளர்களுடன் பேசியே முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது விடயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைப் பற்றி ஆராய கட்சியின் சகல மாநகர சபை உறுப்பினர்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அழைத்து கூட்டமொன்றை கொழும்பில் நடாத்தியிருந்தார். 11 உறுப்பினர்களில் மாநகர மேயர் உட்பட 3பேர் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலமுகாங்கிரஸ் சார்பில் கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எச். எம். ஹாரிஸும் அங்கு சமூகமளித்திருக்கவில்லை என தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. இதேவேளை துணை மேயர் நிஸாம் காரியப்பருக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டு இரண்டு ஊர்களுக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்துவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் இரண்டு வருட ஒப்பந்தம் என்பது வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறதா? என்கிற கேள்விகளும் நிசாம் காரியப்பருக்கு ஆதரவான தொண்டர்கள் மத்தியில் எழவே செய்கின்றன. ஏனெனில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது என்கிற இரண்டு ஊர்களும் அதிக சனத்தொகை கொண்ட பிரதேசமாகும். எப்போதுமே இரண்டு ஊர்களுக்குமிடையில் பல்வேறு விடயங்களில் பகைமை உணர்வுடன் செயற்படுகின்ற ஒருபோக்கும் காணப்படுகின்றது. கல்முனையா? சாய்ந்தமருதா? என்கிற வாதங்கள் எழுப்பப்படுகின்ற நிலையில் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினரான எச்எம்எம். ஹரீஸ் பலமான ஒரு நபராகவே பார்க்கப்படுகின்றார். அவரது பக்கத்து நியாயங்கள் என்னவென்று தெரியாமல் அவரும் மூடு மந்திரமாகவே இருக்கின்றார்.

இவர் கடந்த உள்ளுராட்சித் தேர்தலின்போதுகூட தற்போதைய மேயருக்கே பச்சைக் கொடியைக் காண்பித்தாக பரவலாக பேசப்பட்டது. இருந்தாலும் கல்முனையையும், சாய்ந்;தமருதினையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதில் சிலர் பலே கில்லாடிகளாகவே இருக்கின்றனர். பிரசேதவாதத்தை ஒழித்துக்கட்டுவோம் என்று தன்னைப் புடம்போட்டுக் கொண்ட ஸ்ரீலமுகாகட்சி அதன் அங்கத்தவர்களிடையே அதுவும் முக்கிய பதவிகளிலுள்ளவர்கள் ஒப்பந்தத்தை செய்துவிட்டு பின்னர் அதன்படி நடக்க முடியாது என்று கூறுகின்ற ஒரு நிலையில் தலைமைத்துவத்தின் நடவடிக்கைகளின் பின்னணியில் கட்சிக்குள் ஆதரவாகவும், எதிராகவும் விவாதிக்கின்றவர்களும் இருப்பார்களானால் கட்சிக்குள் மீண்டும் மீண்டும் பிளவுகளும், வெட்டுக் குத்துக்களுமே ஏற்பட வழிவகுக்கும்.
இதற்கிடையில் மேயராகவுள்ள சிராஸ்மீராசாகிபின் பதவி அக்கட்சியினால் பறிக்கப்படுமாக இருந்தால் சாய்ந்தமருது பிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகலாம் என செய்திகள் கூறுகின்றன. குறிப்பாக இப்பிரதேச மக்கள் இனிமேல் ஸ்ரீலமுகா கட்சியை தூக்கி வீசுவார்கள். இது எதிர்காலத்தில் இக்கட்சிக்கு பாரியதோர் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது. மேயர் சிராஸ் இளம் அரசியல்வாதி. அவருக்கு மக்கள் ஆதரவுண்டு. அதேவேளை அவர் எக்கட்சிக்குள் சென்றாலும் சாய்ந்தமருது மக்கள் அவர்பக்கம் சாய்வார்கள். ஆனால் நிசாம் காரியப்பரைப் பொறுத்தளவில் இன்றைய ஸ்ரீலமுகா கட்சிக்குள் இருக்கின்ற மூத்தபோராளி. கட்சியை விட்டு விலகாத நிரந்தரமான கட்சித் தொண்டன். முன்னாள் தலைவரின் உறவினர். கட்சியை வழிநடாத்துகின்ற முக்கியஸ்தருள் ஒருவர். இவருக்கு இரண்டு வருடங்கள் மேயர்பதவியை வழங்குவதற்கு ஏன் விரும்புகின்றார்கள் இல்லை என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் அப்பகுதிய இளைஞர் அமைப்பொன்று பின்வரும் அறிக்கையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளமை பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது பதவியை கல்முனை மாநகர சபைத் தேர்தல் கூட்ட மேடைகளில் ஸ்ரீலமுகாகட்சி முக்கியஸ்தர்கள் அனைவரும் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெறுபவரே கல்முனை மாநகர சபை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தபடியினால்தான் அன்று சாய்ந்தமருதுக்கான தனிப் பிரதேச சபை கோரும் போராட்டத்தைக் கைவிட்டு சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிபுக்கு கூடுதலான வாக்குகளை  சாய்ந்தமருது மக்களாகிய நாம் அள்ளி வழங்கி, மேயராக அழகுபார்த்தோம்.
இன்று என்ன நடைபெறுகின்றது? மக்களின் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டவரை பதவி விலகும்படி கட்சி வேண்டுகின்றது. இதில் என்னதான் நியாயம் உள்ளது. சாய்ந்தமருது மக்களின் விருப்பம் இங்கு நிராகரிக்கப்படுகின்றது. எனவே சாய்ந்தமருது மக்களின் விருப்பம் நிறைவேற தனியான பிரதேச சபைக் கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இளைஞர்களாகிய எமக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது. எனவும்  இளைஞர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். இப்போராட்டம் வெடிக்குமாக இருந்தால் ஸ்ரீலமுகா கட்சிக்கு அதுபலத்த சாட்டையாகவே இருக்கும்.

இவ்விடயம் தொடர்பான அறிக்கை ஒன்றை கல்முனை சமாதான செயற்பாட்டுக் குழுவின் தலைவரான ஏ.பி.எம். அஸ்ஹர் வெளியிட்டுள்ளார். அதில் இன்றைய பிரச்சினைக்குக் காரணமாக அமைகின்றவர்கள் தலைவர் றஊப்ஹக்கீம், அமைச்சர் பசீர்சேகுதாவுத், மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோரே காரணர்களாக உள்ளனர் என்றும் கூறுகின்றார். மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில், 'கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு இந்த இழுபறி நிலை ஆரம்பமானது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது கூட இழுபறிக்கு மத்தியில்தான் கட்சியின் கல்முனை தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள்கூட  கட்சிக்கும் சமுகத்திற்கும்  விசுவாசமான மற்றும் தகுதியானவர்களை வேட்பாளர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கு எத்தனித்தும் அது முடியாமல் போகவே இந்நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருந்தது யாவரும் அறிந்த உண்மை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸைப் பொறுத்தவரைக்கும் பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்கிற எண்ணப்பாடு அதன் ஆதரவாளர்களிம் காணப்படுகின்றது. இதுவே கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத்;தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் தாக்கம் செலுத்தியது. கட்சிக்காக உயிர்த்pயாகங்கள்  மற்றும் உடல்தியாகங்கள் செய்து, கட்சிக்காக மரணிக்கக்காத்திருக்கும் பலர் இக்கட்சியில் இருக்க வெறுமனே பணத்தகுதி மட்டும் இருந்தால் போதும் என்று கருதியதனால் ஏற்பட்டதன் விளைவை இரண்டு வருடங்கள் கழித்து இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி;ரஸ் அனுபவிக்கின்றது. கனவான் ஒப்பந்தங்கள் என்பதெல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸிற்கும் அரசுக்குமிடையிலான ஒப்பந்தங்கள் போன்று (நிறைவேறுவதுமில்லை நிறைவேற்ற முயற்சிப்பதுமில்லை) இறக்காமத்திற்கு இதுசரி. அங்குள்ளவர்கள் கனவான்கள்.

எனவே, உங்களின் அற்ப சொற்ப அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் பிரதேசவாதங்களைக்கிளப்பி அதில் குளிர்காயாதீர்கள். தவிசாளர் பஸீர் சேகுதாவுத் இவர் தற்போது கட்சிக்குள் இருக்கின்றாரா? அல்லது கட்சிக்கு வெளியே இருக்கின்றாரா? என்று யாருக்கும் புரியவில்லை இவர்தான் இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்குமுக்கிய காரணம். தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருதில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெறுபவர்களுக்கே மேயர் பதவி வழங்கப்படும் என வாக்களித்தார். இவரது உரைதான் சாய்ந்தமருது மக்களை மேயரைப்பெறத் தூண்டியது. அதே போன்று தற்போதுள்ள மேயரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்தேயாகவேண்டும் என்று அடம்பிடித்தவர். தற்போது இவரை என்ன விலைகொடுத்தாவது அக்கதிரையிலிருந்து  கழற்றியாகவேண்டும் எனத் துடித்துக்கொண்டிருப்பவர் ஏ.எம்.ஜெமீல் இவர்களே இன்றைய சூழழுக்கான முக்கிய காரணகர்த்தாக்களாவர்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு மொத்தத்தில் தென்கிழக்கின் முகவெத்திலையாக அமைந்துள்ள வர்த்தக நகரான கல்முனை இன்று அபிவிருத்தியின் ஓரத்தில்தான் நிற்கின்றது. அதற்குப் பிறகு மாநகரசபையாக உருவெடுத்த அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தியின் உச்சியில் நிற்கின்றன. இதனை இங்குள்ள மக்கள் கண்டுகொண்டாலும் தொடர்ந்து ஒரே கட்சிக்கு வாக்களித்து வாக்காளர்களை வாக்களிக்கும் இயந்திரமாக மாற்றியுள்ளமை கவலை தரும் விடயமாகும். இன்று சாய்ந்தமருதையும், கல்முனைiயும் மோதவிடுவதற்கு யார் காரணமாக அமைந்துள்ளனர் என்பதையும் இப்பிராந்திய மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். அதிகூடிய வாக்குகளைப் பெற்றவருக்கு வழங்கப்பட்ட மேயர்பதவியை ஏற்றுக் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் கையளிப்பது சிறப்பாக இருந்தாலும் சுழற்சியடிப்படையில் அடுத்தவருக்கு சொந்தமான பொருளை சிலவேளை அவரே விட்டுக் கொடுக்காமல் விட்டால் அந்த சமூகம் அவரை தூற்றும்;.

எனவே, இன்று முஸ்லீம் இனத்தினை குழிதோன்டிப் புதைக்கும் நடவடிக்கைகளில் இனவாதிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் வெறும் மேயர் பதவிக்காக முஸ்லீம் பிரதேசங்கள் காவுகொள்ளப்படுமாக இருந்தால் அதனை என்னவென்று கூறுவது. இனத்தின் பெயரால் அன்று பிரதேசமற்ற ஒரு விடிவுக்காக உரமிட்டு வளர்க்கப்பட்ட கட்சி இவ்வாறு துண்டுதுண்டாக உடைந்து செல்கின்ற ஒரு நிலமை மீண்டும் ஏற்படுமாக இருந்தால் அதற்கான முழுப்பொறுப்பு யார்? என்பதை அடுத்துவரும் தேர்தலில் வெளிக்காட்டி மக்கள் இவர்களை நிராகரிக்கச் செய்து ஓடஓட விரட்ட வேண்டும். இன்றைய காலகட்டம் முஸ்லீம்களுக்கு எதிரான வாதங்கள் பலமாக எழுப்பட்டடு வருகின்ற நிலையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் தங்களது கடமைகளை மேற்கொள்ள கட்சிகளும், கட்சித் தொண்டர்களும் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்ற போது பதவிகளும், பட்டங்களும் தேடிவரும் என்கிற உண்மையை உணரத் தவறுகின்றனர். அதுவே பிரச்சினைக்கு அத்திவாரமாக அமைகின்றது என்பதையும் கூறலாம்.

No comments

Powered by Blogger.