பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை நோக்கி ஒரு பார்வை
(Dr. N. Ariff)
1949ம் ஆண்டிலிருந்து இந்த மகாநாடு நடைபெற்று வருகின்ற போதிலும், 1971ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற மகாநாட்டிலிருந்தே, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமகாநாடு என நாமம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்ற 22 மகாநாடுகளில், இறுதியாக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 2011ம் ஆண்டு இடம் பெற்றது. இம்மகாநாடு நடைபெறுகின்ற நாட்டின் தலைவர் அதற்கு தலைமை தாங்குகின்ற போதிலும், அதன் தலைவராக இருப்பவர் இரண்டாவது எலிசெபத் மகாராணியாகும். 1971ம் ஆண்டு இடம் பெற்;ற மகாநாட்டைத் தவிர ஏனைய 21 மகாநாடுகளிலும் அவர் கலந்து கொண்டுள்ள போதிலும், இம்முறை அவருக்குப் பதிலாக இளவரசர் சார்ல்ஸ் அவர்களே பங்குபற்றுவார்.
இத்தகையதொரு மகாநாடு, உலக வரைபடத்தில் குண்டூசித்தலையளவு போல் காணப்பட்டாலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எமது தாய்த்திரு நாட்டிலே நடப்பது இந்நாட்டின் சகல குடிமக்களுக்கும் பெருமையே. ஒரு காலத்தில், கொழும்பைப் போல சிங்கப்பூரையும் மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு எழில் கொஞ்சும் நாடாக விளங்கிய எமது நாட்டை, மூன்று தசாப்த காலமாக ஆட்கொண்டிருந்த அந்தக் கொடிய நாசகார யுத்தமானது சின்னாபின்னமாக்கி, நிம்மதி என்றால் என்ன என்று கேட்கக்கூடியளவு மக்கள் கதிகலங்கிப்போய் இருந்தார்கள்.
அதிர்ஸ்டவசமாக, இலங்கையின் சனாதிபதியாக வந்த அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில், மூன்று தசாப்தங்களாக புரையோடிப்போயிருந்த கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மக்கள் நிம்மதிக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து படிப்படியாக நாட்டை முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோட வைப்பதை கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, நாட்டின் பெருந்தெருக்களின் அபிவிருத்தியைக் கூறலாம். பாதைகள் சிறப்பாக இருந்தால், ஒரு இடம் தானாகவே முன்னேற்றமடைந்து விடும்.
அழிவின் விழிம்பிலிருந்து மீட்சி பெற்று, முன்னேற்றப்பாதையில் வீறுநடைபோடுகின்ற இந்தத் தருணத்திலே நடக்கப்போகின்ற இந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மகாநாடு நடக்கப்போகின்ற இந்த சந்தர்ப்பத்திலே, உட்பூசல்களையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, ஒருமித்த குரலாக எமது சனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவது இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும். ஒரு குடும்ப உறவினர்களிடையே கருத்து முரண்பாடுகள் காரணமாக விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலும், ஒரு உற்சவம் வருகின்ற போது, பேதங்களை மறந்து எல்லோரும் ஒன்றுபட்டு உற்சாகமாக அந்த நிகழ்வை நடத்தி இன்புறுவதில்லையா? அது போலவே, இனத்தால், கட்சியால், கொள்கைகளால் வேறுபட்டிருந்தாலும,; இத்தருணத்திலே, இந்த உற்சவத்திலே சகலரும் ஒன்றுபட்டு இந்நிகழ்வு சிறப்புற நடந்து வெற்றிபெற ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலே, நாட்டை முன்னேற்றுகின்ற முயற்சிகளை யார் மேற்கொண்டாலும், அவர்களுக்கு முட்டுக்கொடுத்தேயாக வேண்டும். இந்த வகையிலே, எமது அதிமேதகு சனாதிபதியின் கரங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் சகலரும் பங்கேற்போம்.
அடுத்;த 24வது உச்சி மகாநாடு மொரிசியஸின் போர்ட் லூயிஸ் நகரத்தில் இடம்பெறுமென உத்தியோகபூர்வமாக இம்முறை மகாநாட்டில் வைத்து அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி இந்த உச்சி மகா நாடு சகல வழிகளிலும் வெற்றி பெற்று, எமது தாய்த்திரு நாட்டின் புகழ் சர்வதேச அரங்கில் மேலோங்க சகலரும் வாழ்த்துவோம்!

Post a Comment