அமெரிக்காவில் ஈரானிய பொப் பாடகர்கள் இருவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இசைக் குழுவினர் இடையே பணத்தை பிரித்துக் கொள்ளும் தகராறில், ஈரான் நாட்டு பாப் பாடகர்கள் 2 பேர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அமெரிக்காவில் பிரபலமான மஞ்சள் நாய்கள் என்ற பாப் இசைக்குழு இயங்கி வந்தது. இதை ஈரானின் டெஹ்ரான் நகரை சேர்ந்த சோரவுஸ், ஆராஸ் பாராஸ்மன்ட் உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். இவர்கள் 2 பேரும் சகோதரர்கள். ஈரானில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைந்தவர்கள். இவர்கள் சேர்ந்து நடத்தி வந்த இசை குழு மிகவும் பிரபலம் அடைந்தது. கடந்த 2009ம் ஆண்டு முதல் நியூயார்க் நகரில் உள்ள பல்வேறு அரங்குகளிலும் இவர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.
இதேபோல் ஈரானை சேர்ந்த இலவச சாவிகள் என்றொரு குழுவும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இரண்டு குழுவை சேர்ந்தவர்களும் நண்பர்களாக பழகினர். இந்நிலையில், இசை நிகழ்ச்சிக்கான பணத்தை பங்கு பிரிப்பதில் இவர்களுக்குள் சின்ன சின்ன தகராறுகள் இருந்துள்ளது. மஞ்சள் நாய்கள் குழுவை சேர்ந்தவர்கள் நியூயார்க்கில் உள்ள கிழக்கு வில்லியம்ஸ்பர்க் என்ற இடத்தில் வசித்தனர். இங்கு 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதுகுறித்து நியூயார்க் போலீஸ் கமிஷனர் ரெய்மாண்ட் கெல்லி கூறியதாவது:
வீட்டில் சென்று பார்த்த போது கட்டிலில் லேப் டாப் முன்பாக சோரவுஸ் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். மற்றொரு அறையில் ஆராஸ் பாராஸ்மன்ட் தோட்டாக்கள் பாய்ந்து இறந்து கிடந்தார். போலீசாரின் விசாரணையில் 29 வயது வாலிபர் ஜன்னலை திறந்து அனைவரையும் சுட்டு தள்ளி இருக்கிறார். தவிர இசை குழுவை சேராத ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். துப்பாக்கியால் சுட்ட வாலிபர், மாடிக்கு சென்று தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவர் மற்றொரு குழுவை சேர்ந்த ரபே அக்பல் (29) என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார். இந்த சம்பவம் நியூயார்க்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment