இழப்பினை ஈடுசெய்ய முடியுமா..?
நாவல்லான் நாட்டு நலங்காணுஞ் சேவையினால் மாவள்ளல் அன்பால் மதிப்புயந்தோன். வரலாற்று நாயகன் மாவீரன் மர்ஹூம் அப்துல் மஜீத் ஆவான்.
உலக வரலாற்றில் மனிதர்கள் படைத்த வரலாறுகளுண்டு, வரலாறுகள் படைத்த மனிதர்களுமுண்டு. இந்த வகையில் காலத்தால் அழியா வரலாற்றுச் சிறப்புடையோர் பலர் உண்டு. இருந்தும் ஒரு சிலரே அடிக்கடி நினைவு கூறப்படுகின்றனர். நமது நாட்டில் நம்மிலேயே அழியாப் புகழ் ஈட்டிக் கொண்டோரிடையே தனக்கென தனியானதோர் இடத்தைத் தட்டிக் கொண்டவர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் எம்மைவிட்டு மறைந்த மாமானிதர் அவர்களின் வரலாறுகள் இன்றும் மறையாமல், மறவாமல் நினைவு கூறப்பட்டு வருகிறது என்றால் அதன் மகத்துவம் நிகரற்றது என்றே கூற வேண்டும். கிழக்கின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள கிண்ணியாவில் ஒரு கண்ணியமான குடும்பத்தில் பிறந்த அவர் தனது இளம் பராயத்திலேயே சிறந்த மாணவனாக, மேடைப் பேச்சாளனாக எதனையும் துணிச்சலோடு முகங்கொடுக்கின்ற தைரியசாளியாக தம்முள் புதைந்து கிடந்த சிறப்பியல்புகளை வெளிக்காட்டத் தொடங்கியதோடு அவற்றைப் படிப்படியாக வளர்த்துக் கொள்வதில் காட்டிய ஈடுபாடு வியக்கத்தக்கதாகவே இருந்து வந்தது. இவர் படிக்கும் காலத்திலே சிறந்த தலைவராக அரசியல் வாதியாக எதிர்காலத்தில் வருவார் என ஆசிரியர்களாலும் அதிபர்களாலும் புகழாரம் சூட்டப்பட்ட ஒருவராக இருந்தார்.
1960 ஆம் ஆண்டு முதல் அரசியல் வாதியாக பிரவேசித்த காலத்திலேயே நமது சமூகம் ஏனைய சமூகத்தினரோடு நேர்மையான முறையில் சகல துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமென்ற சிந்தனையில் செயற்பட்டு வந்த அவர் 17 வருட கால நேரடி அரசியலில் ஈடுபட்டு தேசிய அரசியலில் அவருக்கென தனியான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டமைக்கு அவரது தூர நோக்கும் ஆளுமை நிறைந்த சிந்தனைகளும் செயற்பாடுகளுமே பிரதான காரணமாகும். ஈழ நாட்டுப் பண்பாடு மனிதாபிமானம், ஆத்மீகம் மற்றும் ஜனநாயகப் பாரம்பரியம் போன்ற துறைகளில் உலகளாவிய பெருமையுடன் சகல இன மக்களும் உயிர்களிடத்திலும் பெரும் அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கியிருக்கின்றார்கள். சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்; மட்டுமன்றி தமிழ் இனமும் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமெனவும் முஸ்லிம்-தமிழ்-சிங்கள மக்களின் உறவை வளர்த்து உன்னத பானியில் வீறு நடை போட்டு அரசியலிலே மங்காத இடத்தில் இப்போதும் உள்ளார் புகழ் பூத்த 'மஜீத்'.
தனக்கென தனிவழி என்று வாழ்ந்து காட்டிய மர்ஹூம் அப்துல் மஜீதின் நினைவு தினத்தை இன்று திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்கள் நினைவு கூறுவது சரித்திரத்தில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல வாழும் போது அவர் அடிக்கடி கூறும் விடயம் கிழக்கு மாகாணத்திற்கு தனியான மாகாண சபை வேண்டும் என்றும் அதில் ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வரவேண்டும் என்ற அவாவோடு இருந்தார். அவரது எண்ணம் உறுதிப்படுத்தப்பட்டு மாகாண சபையின் முதலமைச்சராக தற்போது அவரது புத்திரர் நஜீப் ஏ மஜீத் மக்களுக்கு சேவையாற்றி வரும் நிகழ்வைப் பார்க்கும் போது அவரது எண்ணங்கள் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதாகவே இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அல்லாஹூத் தஆலா திருகோணமலை மாவட்ட மக்களுக்கு அளித்த மங்காச் செல்வமே!
செல்லமாக அழைக்கப்பட்ட சிங்கம் மஜீத் அவர்களின் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களின் இளமைக்காலத்திலிருந்தே 'என்வழி தனி வழியாகவே' இருந்திருக்கிறது. அந்த தனி வழியின் காரணமாகவே அரசியல் துறையையும் இலக்கியத் துறையையும் இரு கண்களாக்கிக் கொண்டார். இவ்விரு கண்களும் மக்களோடு இரண்டரக் கலந்து அரசியல் சேவகனாகி மக்களுக்கு ஊழியம் செய்கின்ற அதே நேரத்தில் இலக்கிய வாயிலாக அவர் தம் கலாச்சார பண்பாட்டை வெளிக்கொணர்ந்தார்.
இத்தனிநோக்கை சீர்படுத்த, செம்மைப்படுத்த வெற்றிபெற வைக்க மர்ஹூம் மஜீதின் முதல் பிரவேசமே அகில இலங்கை இஸ்லாமியக் கலை விழா 1961 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அல்ஹாஜ் பதியுதீன் மஃமூத் தலைமையின் கீழ் நடைபெற்ற கலைவிழாவில் தமிழையே முஸ்லீம்களின் போதன மொழியாக கொள்ளவேண்டுமென்றும் இஸ்லாமிய இலக்கியம் முஸ்லிம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் மௌலவிமார்களுக்கு பயிற்சிக் கலாசாலையோடு அராபிக் கலாசாலையொன்றும் நிறுவப்பட வேண்டுமென்றும் இவற்றின் மூலமே முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அவ்விழாவில் கூறினார்.
அதுமட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் வாழும் மக்கள் தரை வழி மார்க்கமாக ஒரு நிரந்தர இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையில் பல பாலங்கை அமைக்கும் திட்டங்களை அப்போதே வகுத்திருந்தார்.
அதுமட்டுமல்ல 1970 முதல் 1977 வரை தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராக பதவிவகித்த போது ஒலிபரப்பு துறைக்கு அவர் ஆற்றிய பணி அளப்பெரியது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சேவைக்கு புதிய பதவிகள் பலவற்றை உருவாக்கியதோடு மட்டுமன்றி சமய நிகழ்ச்சிகள் பலவற்றை புகுத்துவதற்கும் ஒலிபரப்பு நேரத்தை நீடிப்பதற்கும் முஸ்லிம் சேவையில் இடம் பெற்ற குறைபாடுகளை நீக்கி நிகழ்ச்சிகளின் தராதரத்தை செம்மைப்படுத்தியதோடு தேசிய ரீதியில் அவர் என்றுமே முஸ்லிம்களின் நலனை என்றுமே பேணிக்காத்து வந்தார்.
அப்துல் மஜீது அவர்கள் ஓர் அலாதியான அரசியல்வாதி, நம்பிக்கையோடும், மன உறுதியோடும் துணிச்சலோடும் அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்து அளப்பரிய சேவையைப் புரிந்த அன்னாரின் மறைவு ஓர் துன்பியல் சம்மவமாக இந்நாள் வரை அதற்கான பின்னணியோ சூத்திரதாரியோ உடந்தையானவர்கள் பற்றியோ சரியான தகவல்கள் கிடைக்காதது அதிர்ச்சியும் வேதனையும் தருவன. எனினும், இழப்பினை ஈடுசெய்ய முடியுமா?
அவர் நாமம் மக்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதி. இன்றைய நாட்களில் பரவலாக 'வாழ்வோரை வாழ்த்துவோம்' நிகழ்வு நாடாளவிய ரீதியாக நடத்தப்படுவதை நாம் அறிவோம். இது ஒன்றும் புதுமையானதல்ல. 1960 ஆம் ஆண்டு இதன் முதல் மூலகர்த்தாவாக முதல் முதலில் இந்நாட்டிற்கு வாழ்வோரை வாழத்துவோம் நிகழ்வை நிகழ்த்திக் காட்டியவர் மர்ஹூம் அப்துல் மஜீத் என்றால் அது மறுக்கமுடியாத உண்மையாகும். இதனோடு இப்போது முஸ்லிம்களின் தனித்துவம் பற்றி அரசியல் வாய்களில் புரள்வதை அறிகிறோம்.
ஆனால் முதன் முதலாக 1960ம் ஆண்டில் 'எம் வழி தனி வழி' என்று உரத்துக்கூறியவர் மர்ஹூம் அப்துல் மஜீத் ஆகும். இதற்கு ஆதாரமாக அந்நாட்களில் அவரால் நூலில் உருவாக்கம் பெற்ற எமது பாதையில் இன்றும் பாதையில் காணலாம்.
ஆகவே ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் தனித்துவம் பற்றி முதன் முதலாக குரல் கொடுத்து இலங்கை பாராளுமன்றத்தில் அதற்கான தனியொரு அந்தஸ்த்தை வழங்கி மறைந்த அரசியல் வாதி என்றால் அது மர்ஹூம் அப்துல் மஜீது என்பது எவரும் மறக்க முடியாத உண்மையாகும்.
இறுதியாக முஸ்லிம்களின் தனித்துவத்தையும் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பற்றியும் தனது மரணம் வரையும் நினைத்துக் கொண்டு வாழ்ந்து தலைவரை நாம் நிரந்தரமாக நினைத்துக் கொள்ளல் காலத்தின் தேவையாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் அக்கட்சியின் கைச்சின்னத்தையும் நேசித்த மஜீதுக்கு இன்றும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் தொகுதிக்குட்பட்ட கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, தோப்பூர் ஆகிய பிரதேசங்களில் சுதந்திரக் கட்சிக்கென்றே ஒரு வாக்கு வங்கியை சேமித்து வைத்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அன்னாரது அரசியல் பாதையை ஒற்றுமையாக நாம் தொடர்வது தான் எமது கடமையாகும்.
1987.11.13 அன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அகால மரணமாகி இன்று 26 வருடங்கள் கடந்தும் அரசியலிலும் இலக்கியத்திலும் மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் பேசப்படும் மா மனிதராக வாழ்கின்றார். அவருக்கு 'யா அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை அன்னாருக்கு கொடுப்பாயாக'
1976.11.18 ல் பாராளுமன்றத்தில் மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் ஆற்றிய உரையில் சிந்திய சில முத்துக்கள்
கௌரவ சபாநாயகர் அவர்களே! சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளுக்கு நான் காணும் ஒரு வழியை ஆலோசணையாக இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். சிங்கள மொழியும் தமிழ் மொழியும் தேசிய மொழிகளாக தேசிய மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சிங்கள மொழியை தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழியை சிங்கள மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஒரு சூழ்நிலையைத் தேசியக் கல்வித் திட்டத்தில் அவசியம் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, சனத்தொகை விகிதாசாரப் படி 70 சத வீதமான பௌத்த சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள். அதன் படி 70 சத விகிதாசாரமான உரிமைகளை அவர்கள் முழுமையாகப் பெறட்டும். 30 சதவீதம் சிறுபான்மை மக்கள் வாழ்கின்றார்கள். அதன்படி 30 சதவீதமான உரிமைகளை அவர்கள் முழுமையாகப் பெறட்டும். அதாவது 70 வீதம் சிங்கள பௌத்த மக்களுக்;கு: 20 வீதம் தமிழ் மக்களுக்கு: 10 வீதம் முஸ்லிம் மக்களுக்கு என்ற அடிப்படையில் இந்த நாட்டின் சகல துறைகளிலும், சகல அமைச்சுக்களிலும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பொழுது தேசிய ஒற்றுமை ஏற்படும். நாடு வளம் பெறும் என்று நான் கருதுகின்றேன். அப்போது நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற கோஷம் எழாது. நாடு இரண்டாக பிளவுபடாது.
ஜமால்தீன் எம்.இஸ்மத்
கிண்ணியா

Post a Comment