மு.கா.வின் அப்பங்களும், பிரிக்க முடியாத குறியீடுகளும்!
(தம்பி)
பொன் முட்டையிடும் வாத்தினை அறுத்துச் சாப்பிட்டவனின் கதை போல் ஆகிவிட்டது கல்முனை மேயரின் அரசியல். இரண்டு வருடங்கள் மேலதிகமாக மேயர் கதிரையில் இருக்க நினைத்து – மு.கா.வில் தனக்கிருந்த அத்தனை அரசியல் எதிர்காலங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டார். இனி, மேயர் சிராஸ் - தனது அரசியலின் ஒவ்வொரு கணமும் கல்லில் நாருரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இது - அவரே தேடிக் கொண்ட வினையாகும்.
கல்முனை மாநகரசபையின் தற்போதைய 'மேயர் பதவிக் காலம்' என்கிற அப்பத்தை சிராஸ் மீராசாஹிபிடம் கொடுத்து, 'ஒரு பாதியை நீங்கள் சாப்பிட்டு விட்டு, மற்றைய பாதியை - உதவி மேயராகவுள்ள நிசாம் காரியப்பருக்குக் கொடுங்கள்' என்று மு.காங்கிரஸ் தலைமை கூறிய கதை குறித்து நீங்கள் அறிவீர்கள். சிராஸும் சரி என்று சொல்லி அப்பத்தை வாங்கிச் சுவைக்கத் தொடங்கினார். அப்பம் நல்ல ருசி போல. சிராஸின் பாதி அப்பம் முடிந்து விட்டது. இப்போது, அடுத்த பாதியையும் - 'நானே தின்று முடிக்கப் போகிறேன்' என்கிறார் சிராஸ். ஆனால், அதற்கு ஒத்துக் கொள்ள முடியாது என்கிறது மு.கா. தலைமை.
சிராஸ் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மு.காங்கிரசுக்குப் புதியவர். ஆனால், தன்னிடமிருந்த பண பலம் மூலமாக கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை அப்போது பெற்றுக் கொண்டார். மு.கா.வும் - பணத்தோடும், சண்டித்தனத்தோடும் வருகின்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை தாராளமாக அள்ளி வழங்கும் கட்சியாக மாறி விட்டதால், கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொள்வதென்பது சிராஸுக்கு அத்தனை சிரமமாக இருக்கவில்லை.
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட சாய்ந்தமருதுக்காரரான சிராஸ் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இரண்டாவது கூடிய விருப்பு வாக்குகள் கல்முனைக்காரரான நிஸாம் காரியப்பருக்குக் கிடைத்தன. நிஸாம் காரியப்பர் என்பவர் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவர். கட்சிக்காக நிறைய பணியாற்றியிருக்கின்றார். அவரை கௌரவிக்க வேண்டும். அதனூடாக கல்முனை மக்களையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், மேயர் பதவிக் காலத்தை சிராஸும் நிஸாம் காரியப்பரும் இரண்டிரண்டு வருடங்களாக வகிக்க வேண்டும் என்று கட்சி முடிவு செய்ததாகக் கூறியது.
நேர்மையாகப் பார்த்தால், இந்த 'அப்பம் பிரிக்கும்' செயற்பாடுகளே தவறானவையாகும். தேர்தல் என்பது மக்களின் விருப்புகளை அறிவதற்கான ஜனநாயக செயல் முறையாகும். தேர்தல் ஒன்றில் எவருக்கு அதிகபட்சமான விருப்பு வாக்குகள் கிடைக்கின்றனவோ, அவரை குறித்த பதவிக்கு நியமித்தால் - பிரச்சினைகள் எதுவுமில்லை. அப்படிப் பார்த்தால், ஜனநாயகரீதியாக கல்முனை மேயர் பதவி சிராஸுக்கு உரியது. அதனை அவர்தான் முழுமையாக வகிக்க வேண்டும். ஆனால், 'அப்பம் பிரிப்பதற்கு' சிராஸ் ஒத்துக் கொண்டமையால் - இன்று, கட்சிக்கு அவர் துரோகியாகிப் போய் விட்டார்.
அரசியலுக்கு சிராஸ் புதியவர். அதன் தந்திரங்கள்மிக்க நுணுக்கங்களை அவர் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை அவரின் நடத்தைகள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மேயர் பதவி இரண்டாண்டுகளுக்கு என பங்கு வைக்கப்பட்ட போதே, சிராஸ் அதற்குச் சம்மதித்திருக்கக் கூடாது. 'அரைவாசிச் காலத்துக்கு என்றால் - எனக்கு மேயர் பதவி தேவையில்லை' என்று கூறிவிட்டு சிராஸ் வந்திருக்க வேண்டும். அந்த நிலையானது கட்சித் தலைவர் ஹக்கீமுக்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். மாற்றுவழியில்லாமல் கடைசியில், ஹக்கீமே கூப்பிட்டு - மேயர் பதவியை சிராஸுக்கு முழுமையாகக் கொடுத்திருப்பார். ஆனால், சிராஸ் இதைச் செய்யவில்லை. சிறு குழந்தையொன்று பஞ்சுமிட்டாயை குதூகலத்துடன் பெற்றுக் கொண்டு வந்ததைப் போல், பாதி அப்பமாக வழங்கப்பட்ட மேயர் பதவியினை சிராஸ் வாங்கிக் கொண்டு வந்தமைதான் - இத்தனை அலம்பலுக்குமான மூல காரணமாகும்.
சிராஸ் - தனது மேயர் பதவியினை ராஜிநாமாச் செய்ய மாட்டார் என்பதை அரசியல் தெரிந்த பலர் அனுமானித்திருந்தார்கள். ஆனால், இது புத்திசாதுரியமானதொரு முடிவல்ல. அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியானது மு.காங்கிரசின் கோட்டையாகும். அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், சம்மாந்துறைத் தொகுதிகள் மு.காங்கிரசின் கைகளிலிருந்து வீழ்ந்த போதெல்லாம், கல்முனை தொகுதியில் மட்டுமே மு.கா. வெற்றி பெற்று வந்தது. அந்தவகையில், மு.கா.வையும், அதன் தலைமையினையும் வெறுத்தொதுக்கி விட்டு, சிராஸால் தனது பிரதேசமான கல்முனைத் தொகுதியில் அரசியல் செய்து வெற்றி பெற முடியாது.
'அரசியலில் சில இழப்புகள் - எதிர்காலத்துக்கான முதலீடு' என்பதை துரதிஸ்டவசமாக சிராஸின் பின்புலத்தில் உள்ளவர்கள் கூட, அவருக்குச் சொல்லிக் கொடுக்காமல் விட்டமையானது கவலையளிக்கிறது. கட்சித் தலைமையின் கட்டளைக்குப் பணிந்து அல்லது பணிவது போல் நடித்துக் கொண்டு தனது மேயர் பதவியினை சிராஸ் ராஜிநாமாச் செய்து கொடுத்திருந்தால் - கட்சிக்குள் ஒரு குட்டி ஹீரோவாக சிராஸ் வலம் வந்திருக்க முடியும். மக்கள் மத்தியிலும் மதிக்கப்பட்டிருப்பார். அந்த நிலை – அவரை பல உச்சங்களுக்குக் கொண்டு விட்டிருக்கும்.
ஆனால், இப்போது கட்சிக்குள் தனக்கிருந்த அத்தனை மதிப்புக்களையும் ஒற்றை இரவுக்குள் சிராஸ் தொலைத்து விட்டுள்ளார். கல்முனை மேயர் பதவியினை வகிப்பதற்கான தார்மீக உரித்துக்கள் எவையும் சிராஸுக்கு இல்லை என்று மு.கா. தலைவர் ஹக்கீம் பகிரங்கமாக அறிவித்து விட்டார். சிராஸுக்கு ஆதரவு வழங்கும் கல்முனை மாநகரசபையின் மு.கா. உறுப்பினர்கள் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹக்கீம் எச்சரித்திருக்கின்றார். இவ்வாறானதொரு நிலையில் - சிராஸினால் மேயர் பதவியில் நிலைத்திருப்பது மிகவும் கஸ்டமாகும்.
கல்முனை மாநகரசபையின் மொத்த உறுப்பினர்களின் தொகை (மேயரையும் சேர்த்து) 19 ஆகும். இவர்களில் 11 பேர் மு.காங்கிரஸ்காரர்கள். 04 உறுப்பினர்கள் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். மூவர் ஐ.ம.சுமுன்னணி கட்சியினர். ஒருவர் ஐ.தே.கட்சிக்காரர். இந்த நிலையில், மு.கா.வை பகைத்துக் கொண்டு மேயர் சிராஸ் இயங்கும் பட்சத்தில் அவருக்கு அந்தக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்காது என வைத்துக் கொள்வோம். இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைத்தாலும் கல்முனை மாநகரசபையில் பெரும்பான்மை ஆதரவு சிராஸுக்குக் கிடைக்காது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், அடுத்த மாதத்துக்குள் கல்முனை மாநகரசபைக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தோற்கடிக்கப்பட்டால், மேயருக்கு இரண்டொரு வாரகாலம் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் சபையின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்றுக் கொண்டு, வரவு – செலவு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். தவறினால் - அம்போதான்.
இது ஒருபுறமிருக்க, மேயர் பதவியிலிருந்து இரண்டாண்டுகளில் விலகிவிடுவேன் என்று மு.காங்கிரசுக்கு தான் எந்தவித எழுத்து மூல ஒப்பந்தங்களையும் வழங்கவில்லை என்றும், அதனால், தனது பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் சிராஸ் கூறுவது சிறுபிள்ளைத்தனமானதாகும். இந்தக் கூற்றினூடாக, அவர் தன்னை மலினப்படுத்திக் கொண்டுள்ளார். ஒப்பந்தமென்பது எழுத்து மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. வாய்மொழி ஒப்பந்தகளும் உள்ளன. அவற்றினை நிறைவேற்றுகின்றவர்கள் கனவான்களாகப் பார்க்கப்படுகின்றனர். அதனால், வாய்மொழி மூல ஒப்பந்தங்களுக்கு – 'கனவான் ஒப்பம்' என்றும் ஒரு பெயர் இருக்கிறது.
வாய்மொழி மூல ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும் மீறியவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்குள் மலிந்து கிடக்கின்றார்கள். மு.கா.வின் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடைய காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றும் இப்படித்தான் பங்கு வைக்கப்பட்டது. காத்தான்குடியைச் சேர்ந்த ஹிஸ்புல்லாவும், ஓட்டமாவடியைச் சேர்ந்த முகைதீன் அப்துல் காதரும் பங்குதாரர்கள். முதலில் அப்பத்தை எடுத்துக் கொண்ட ஹிஸ்புல்லா தனது பாதியையும் தின்று – மீதியையும் தின்று முடித்தார்.
வாக்குறுதிகளை மீறுவதில் மு.கா.வின் இப்போதைய தலைவர் ரஊப் ஹக்கீமும் சளைத்தவரல்லர். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக, அவர் வாக்குறுதியளித்த ஊர்களின் பட்டியல் நீளமானவை. ஆனால், அவரின் வாக்குறுதிகள் தேர்தல் கால மேடைகளின் ஒலி பெருக்கிச் சத்தங்களோடு கரைந்து போய்விடும். பிறகு, வாக்குறுதியளிக்கப்பட்ட பிரதேசத்து மக்கள் ஹக்கீமிடம் சென்று - தமது ஊருக்கு வழங்குவதாகச் சொன்ன - தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைக் கேட்பார்கள். அப்போது ஹக்கீம் - 'உங்கள் ஊருக்கு ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று நான் கூறியது உறுதி மொழியல்ல, அது எனது விருப்பமாகும்' என்பார். இவை – நாம் கண்ட அனுபவங்கள்.
அதற்காக, பிழைக்குப் பிழை – சரியென்று ஆகிவிடாது. அவரும் ஏமாற்றினார் - நானும் ஏமாற்றினேன். கணக்குச் சரியென்று சிராஸ் சொல்லி விட முடியாது. 'தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழிதான்' அல்லது 'தலைவன் சரியாக இருந்தால் தொண்டர்கள் பிழைத்துப் போக மாட்டார்கள்' என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் - ஹக்கீமுடைய வாக்குறுதி மீறல்களை இந்த இடத்தில் பதிவு செய்தோம்.
கல்முனை மேயர் விவகாரத்தில் நடந்து முடிந்த கூத்துக்களிலிருந்து சில விடயங்களை அவதானிக்க முடிகிறது.
* காசு பணம் உள்ளவர்கள் தேர்தலில் வெல்லலாம். ஆனால், வெற்றியைத் தக்க வைப்பதற்கு கொஞ்சூண்டேனும் – சாணக்கியம் தேவையாகும்.
* புதுப் பணக்காரர்களுக்கும், சண்டியர்களுக்கும் முன்னுரிமை வழங்கி, கட்சிக்காக உழைத்தவர்களை உதாசீனம் செய்யும் கட்சித் தலைமைகளுக்கு இவ்வாறான அவமானங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
* பதவிகளை அப்பம் பிரிப்பதுபோல் பங்கு வைத்து விளையாடுதலானது, கட்சிகளுக்கு நலவுகளை விடவும் கெடுதிகளையே அதிகம் ஏற்படுத்தும்.
* ஒப்பந்தங்களை எப்போதும் எழுத்தில் நிறைவேற்றிக் கொள்தல் அவசியமாகும்.
பட்டறிவுகளிலிருந்து திருந்திக் கொள்ளுங்கள்!
.jpg)
சிராஸ் இவ்வளவு தைரியமாக செயல்பட்டிருப்பதைப் பார்த்தால் இவர் ஏதோ ஒரு பின்புலத்துடந்தான் இருக்கின்றார் என்பது மட்டும் தெளிவு. சாய்ந்தமருதுக்கான ஒரு தனியான பிரதேச சபை அமையுமானால்.........மற்றும் எதிரியின் எதிரி நன்பன் என்ற அடிப்படியில் குதிரையில்கூட இவர் சவாரிவர வாய்ப்புகள் உள்ளது. உன்மையில் சொல்லப்போனால்.........ரனிலைப் போன்று......ஹக்கீமும்.............மஹிந்தையை போன்று அதாவும் .....இருவர்களுடைய கட்சிகளும் உள்ளன.
ReplyDelete