முஸ்லிம் போராளிகளை ஒடுக்கவும், அடக்கவும் ரஷ்யா கொண்டுவந்துள்ள சட்டங்கள்
ரஷ்யாவில், முஸ்லிம் போராளிகளின் உறவினர்களையும் தண்டிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு, அதிலிருந்த சில மாகாணங்கள் தங்களை தனி நாடாக அறிவித்து கொண்டன. செஷன்யா உள்ளிட்ட மாகாணங்கள் தனி நாடாக அறிவித்து கொண்டதை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை. இதை கண்டித்து அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள், தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், ரஷ்யாவின், காகசஸ் மலை பகுதியையொட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கர நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
போராளிகளை ரஷ்ய ராணுவம் ஒடுக்கி வருகிறது. எனினும், அவர்களுக்கு புகலிடம் அளிக்கும் அவர்களது உறவினர்களையும் தண்டிக்கும் வகையில், ரஷ்ய பார்லிமென்ட்டில், சமீபத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டப்படி, பயங்கரவாத அமைப்பில் உள்ளவர்களுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், 2.5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பயங்கரவாதிகள் நாசவேலைகளை செய்து விட்டு தலைமறைவாகி விட்டால், இழப்பு ஏற்படும் பொருட்களுக்கு, பயங்கரவாதிகளின் உறவினர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த சட்டம் ரஷ்ய பார்லிமென்ட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment