65 வயது முதியவருக்கு பார்வைகொடுத்த ஒரு வயது குழந்தை
கண் மாற்று அறுவை சிகிச்சை செய்யாமல், கண்ணில் பாதிக்கப்பட்டுள்ள விழித் திரை மாற்று அறுவை சிகிச்சையை மட்டும் செய்து, சென்னை அகர்வால் கண் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. ஒரு வயது குழந்தையின் கண்ணில் இருந்து, விழித் திரையை, 65 வயது முதியவருக்குப் பொருத்தி, பார்வை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் சண்முகம், 65. இவரது இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு, 10 மாதங்களுக்கு முன் இருந்து, படிப்படியாக முழு பார்வையையும் இழந்து விட்டார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த, ஒரு வயது குழந்தை இறந்ததால், அக்குழந்தையின் கண்களை தானம் செய்ய, பெற்றோர் முன் வந்தனர். இக்குழந்தையின் கண்ணில் இருந்து எடுத்த, விழித் திரையை, சண்முகத்தின் விழித் திரையில் பொருத்தி, பார்வை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அகர்வால் கண் மருத்துவமனை, அமர் அகர்வால் கூறியதாவது: கண் பார்வை இழந்தால், முழு கண்ணையும் மாற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் இருந்து மாற்று வழியாக, கண்ணின் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் மாற்றும் முறை, தற்போது பின்பற்றப்படுகிறது. சண்முகம் என்பவருக்கு, கண்ணில் உள்ள, ஐந்து விழி படலங்களில், நான்காவது படலத்தின் பகுதி பாதிக்கப்பட்டது. இதனால், இவருக்கு பார்வை அளிக்க, கண்ணின் முழுப் பகுதியையும் மாற்றாமல், அக்குறிப்பிட்ட பகுதியை மாற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வயது குழந்தையின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட இப்படலம், சண்முகத்தின் கண்ணில் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு அதிகபட்சம், 30 நிமிடங்களாகும். நவீன கருவிகள் எதுவும் இதற்கு பயன்படுத்த தேவையில்லை; செலவும் குறைவு. ஒரு கண்ணின் பின்புறம் உள்ள பகுதியை, ஒருவருக்கு பயன்படுத்தும் போது, கண்ணின் முன் பகுதியை, மற்றொருவருக்கு பயன்படுத்தலாம். இதனால், தானமாகக் கிடைத்த கண்ணின் முழுப் பகுதியையும் பயனுள்ளதாக்க முடியும். ஒரு வயது குழந்தையின் கண், வலு உள்ளதாக இருக்கும். இதை, 65 வயதுடையவருக்கு பொருத்தும் போது, அவருடைய கண்ணின் தன்மை வலு உள்ளதாக மாறுகிறது. இந்த புதிய அறுவை சிகிச்சை, உலகளவில், சென்னையில் தான் முதல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அமர் அகர்வால் கூறினார்.

Post a Comment