Header Ads



காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை


ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஒன்றை இஸ்ரேலிய ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.இஸ்ரேல்-காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் இதன் நுழைவாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை சமீபத்தில்தான் தோண்டப்பட்டிருக்கவேண்டும் என்றும், கண்டுபிடிக்கப்படும்வரை இது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் ஒரு வாரம் வரை அங்கு ஏதேனும் வெடிபொருட்கள் உள்ளனவா என்பது குறித்த தேடுதல் வேட்டை நடைபெற்றதாகக் கூறும் ராணுவம் அது குறித்த பிற தகவல்களை வெளியிடவில்லை.

ஆயினும் இதனை மறுத்துள்ள ஹமாஸ் ராணுவத் தகவல் அதிகாரியான அபு ஒபைடா, இஸ்ரேல் ராணுவத்தினர் இதுபோல் இன்னும் ஆயிரக்கணக்கான சுரங்கங்களைத் தோண்டக்கூடும் என்று தனது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளார்.  

இதன்மூலம் ஹமாஸ் பிரிவினர் இஸ்ரேலைத் தாக்கவோ அல்லது இஸ்ரேலியர்களைப் பிடிக்கவோ திட்டமிட்டிருக்கலாம் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணுவத்தினர் கூறியுள்ளனர்.இதன் விளைவாக காசாவிற்கு செல்லவிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. 

இது பாதுகாப்பு கருதியே என்றும் பாலஸ்தீனியர்களுக்கு தண்டனை அளிக்கும்விதமாக செயல்படுத்தப்பட்டது அல்ல என்றும் இஸ்ரேலிய ராணுவத்தின் தகவல் அதிகாரியான கை இன்பர் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2006 ஆம் ஆண்டில் இதுபோல் தோண்டப்பட்ட சுரங்கப்பாதை வழியே இஸ்ரேலிய ராணுவ வீரரான கிலா ஸ்காலிட் என்பவரைக் ஹமாஸ் ராணுவத்தினர் கடத்திச் சென்று ஐந்து வருடம் காவலில் வைத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ராணுவத்தினரை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்ஞாஹு பாராட்டியுள்ளார். சென்ற வருடம் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உட்பட தங்களது உறுதியான கொள்கையே கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அமைதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.