கல்முனை முஸ்லிம் சகோதரிகளின் ஆடைகளும், அணிந்த நகைகளும்..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
அறுபது வருடங்களுக்கு முன் கல்முனைப் பிரதேச முஸ்லிம் பெண்கள் எவ்வாறு உடை உடுத்திருந்தார்கள். எந்தெந்த ஆபரணங்களை அணிந்திருந்தார்கள் என்பதை இக்காலத்தில் வாழும் முஸ்லிம் வயது வந்த பெண்கள் அறிந்து கொள்ளும் நோக்கமாக இங்கு தருகின்றோம்.
அந்தக் காலத்தில் வயது வந்த முஸ்லிம் பெண்கள் அனைவரும் சாரி உடுத்து தலையை நன்கு முக்காடிட்டு மூடிக் கொள்வர். முஸ்லிம் பெண்கள் தலை திறந்து வெளியில் செல்லும் பழக்கம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.
தலையில் முக்காடிடாமல் வெளியில் செல்லும் முஸ்லிம் பெண்களை மத ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் தரம் குறைத்து மக்கள் எடை போடுவதுண்டு. இதனால் தலையில் முக்காடிடும் பழக்கம் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஒழுங்காகக் கடை பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இவர்களின் ஆடைகள் தடிப்பான துணிகளைக் கொண்டே அமைந்திருந்தன. மெல்லிய ஆடைகளை அணிவது மிகக் குறைவு. மேற் சட்டைகளும் கை நீளம் உள்ளதாகவும் இறுக்கமற்ற தளர்ச்சியுள்ள சட்டைகளுமாகவுமே இருந்தன.
சீத்தைச் சீலை, தோம்புச்சோமன், பால்ச்சோமன், வெள்ளைச்சேலை, பச்சவடச்சேலை, கருக்குப்பணிச்சோமன், மாடாவண்ணச்சோமன், அத்திராச்சேலை, ஏளடுக்குச்சோமன், நார்ப்பட்டுச்சோமன், அரைஅடுக்குச்சோமன், முக்காஅடுக்குச்சோமன், சந்திரப்பட்டுச்சோமன், பூச்சிசில்க்சேலை என்பன போன்றவை கல்முனைப் பிரதேச முஸ்லிம் பெண்கள் அணியும் உடை வகைகளாக அன்றிருந்தன.
இச்சாரிகள் தரமுயர்ந்த சரிகைப்பட்டுகளாகவும் அமைந்திருந்தன. இதன் முகதலைகளில் கூடுதலான அளவு அலங்காரமிடப்பட்டிருக்கும். இது வெள்ளி தங்கம் முலாம் பூசப்பட்டதாகவும் காணப்பட்டன.
இந்தியாவின் தலைசிறந்த பட்டு நூல் நெசவாசலைகளிலிருந்து பெங்களுர், கல்கத்தா, காஞ்சிபுரம் என்ற பெயர்களுடன் இச்சாரிகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருந்தன.
சோமன், மாடாவண்ணம், எள்ளுவண்ணம், கடுகுவண்ணம், சுந்தரப்பட்டு, முக்கடுக்கு, வெண்பட்டு, மஞ்சள்பட்டு, தோம்புச்சேலை, கருக்குப்பணி, சுங்கோடி, மூங்கில்பட்டு, மோகினிப்பட்டு, கல்குத்தா, வத்தாசி, கறுத்தச்சேலை, அந்துராசிச்சேலை, மஞ்சவர்ணப்பட்டு, காஞ்சிபுரம், பாற்சோமன், சருகச்சேலை என்பன போன்றவை அக்காலத்தில் சிறப்புப் பெற்ற சேலை வகைகளாகும்.
அந்தக் கால முஸ்லிம் பெண்கள் கழுத்து காது கை மூக்கு கால் கொண்டை என்பவற்றில் நகைகளை அணிந்திருந்தார்கள்.
அன்றைய பெண்கள் அணிந்த நகைகள்
கழுத்தில் - உட்கட்டு, சவுக்குமணி, தாலிக்கொடி, மணிக்கோர்வை, சவடி, உருண்டைகொடி, பூச்ச்சிமணி, பவளமணி.
காதில் - காதுப்பூ, அல்லுக்குத்து, சிமிக்கி, கோழிக்கூடு,
கையில் - பூட்டுக்காப்பு, முகப்பணிக்காப்பு, பூட்டுத்திறப்புக்காப்பு, அடுக்குக்காப்பு, கொம்புக்காப்பு, கொலுசுக்காப்பு, பட்டினத்துக்காப்பு, கைக்கட்டு, தாவத்துக்கொடி, மோதிரம்.
காலுக்கு - கால்மோதிரம், கொலுசம், தண்டை, கரனை.
மூக்கில் - மூக்குத்தி.
கொண்டையில் – பூக்கொண்டைக்குத்தி, மாலைக்கொண்டைக்குத்தி, திருகுபூ
இன்று முஸ்லிம் பெண்களின் உடைகள், ஆபரணங்கள் என்பனவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்று ஹபாயா அணிவது மிகவும் சிறந்தது. கருப்பு நிறம் மட்டுமே அணிய வேண்டும் என்று இல்லை, வீணான அலங்காரம் இல்லாமல் ஏனைய நிறங்களையும் பயன்படுத்தலாம்.
ReplyDeleteஅன்றைய முஸ்லிம்கள் தமிழ் கலாச்சாரத்துடன் இன்றைய முஸ்லிம்களிலும் பார்க்க கூடுதலான அளவில் ஒன்றி இருந்ததை, அவர்களது ஆடைகளும் நகைகளும் எடுத்துகாட்டுகின்றன.
ReplyDelete