அல்லற்படும் மாந்தர்களை, தியாகத் திருநாளில் திரும்பிப் பார்ப்போம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
வல்ல இறைவன் சோதிப்பதற்காகவே சிலரை எல்லா வளமும் கொண்டவர்களாகவும் இன்னும் சிலரை வளமாற்றவர்களாகவும் படைத்துள்ளான்.
இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்களும் சோதிக்கப்ட்டிருக்கிறார்கள். அச்சோதனையில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்தவகையில், நபி இப்றாகிம் (அலை) அவர்களை வல்ல இறைவன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களைக்கொண்டு சோதித்து அதில் அவர்கள் பெற்றிபெற்றதற்குப் பரிசாக வழங்கினான் இந்த தியாகத் திருநாள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை.
நம்பில் பலர் உடல், உள, குடும்ப, பொருளாதார ரீதியில் பல்வேறு சோதனைகளையும் சுமைகளையும் சுமந்தவர்களாக இப்பெருநாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள்;. அவர்களின்; இதயப் பரப்பமெங்கும் வேதனை அப்பிக்கிடக்கிறது.
குடியிருக்க வீடுவாசல் இல்லாமல் வாடகை வீட்டிலும் மாற்றார் தயவிலும் வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாகவும், உடல் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலைக் கட்டில்களின் சொந்தக்காரர்களாகவும், வாழ்க்கையின நெருக்குவாரங்களால் உள்ளம் உருக்குழைந்து தன்நிலை மறந்த உள நோயாளர்களாகவும், வருமானம் வற்றிக் குடும்பச் சுமையின் அவஸ்தையால் அல்லறுபவர்களாகவும் பொருளாதாரப் பற்றாக்குறைக்காகவும் பெருமை வாழ்க்கைக்காகவும் கை நீட்டி வாங்கிய கடனனைத் திருப்பளிக்க இயலாது அதன் வலியால் சுய கௌரவத்தை காற்றில் வீசிவர்களாகவும் இன்னும பற்பல இன்னல்களோடு நம்மைச் சுற்றிப் பலர் வாழ்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெருநாளின் சந்தோசப் பெருமழை நம்மிலும் பொழியாதா என்ற பெரு மூச்சை வெளிச்செலுத்தியவர்களாவே உள்ளனர்.
இவர்களின் இதயங்களை சந்தோஷத்தால் நனைப்பவர்கள் யார்? இவர்களும் இத்திருநாளின் இன்பப் பொழுதை ரம்பியமாகக் கழிக்கக் கூடாதா? என்ற கேள்விகளுக்கு நம்மில் பலரிடம் விடை இருக்கிறது. ஆனால் அதற்கு விடைகொடுக்க இதயமில்லை.
'அயல் வீட்டார் அன்னியவராக இருந்தாலும் அவர் அயல்வீட்டார் என்பதற்காக அவரிலும் நமக்கு பொறுப்பு உள்ளது' என்ற நபிகளாரின் திருவசனம் நம்மில் பலரது உள்ளங்களிலிருந்து எடுபட்டுவிட்டது. இதனால்தான், அண்டைவீட்டு நம் சகோதரன் குடிசை வீட்டில் பாயில் படுத்துறங்க நம்மில் பலர் மாடா மாடிகைகளில் பஞ்சன மெத்தையில் தூங்கி எழும்புகின்றனர்.
ஒரு வேளை சோற்றுக்காக நம் சகோதர சகோரிகள் ஏங்கிக் கிடக்க நம்மில் பலர் புரியாணி சாப்பிட்டு மிஞ்சியதை குப்பையில் வீசி விட்டு ஏப்பமிடுகின்றனர்.
கல்யாண வாழ்க்கைக்காக காந்திருந்து காந்திருந்து காலம் கடந்த பின் மணவாழ்கை காணது கண்ணீரால் காவியம் வடிக்கும் நமது சமுதாயக் கன்னியரைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாது, நம்மில் பல கொடை வள்ளல்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணத்தை வீண்விரையம் செய்து தங்கள் பெண்மணிகளுக்கு திருமணம் நடத்தி அழகு பார்க்கின்றனர்.
அல்லாஹ்வையும் அண்ணல் நபியையும் அவர்களின் அருமைத் தோழர்களையும் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வாய் கிழியப் பேசுவர்கள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைக் கடைபிடிக்காது போலிக் கௌரவத்தை மதித்து ஊருக்குதான் உபதேசம் எனக்கல்ல என்ற நிலையில் வாழ்கின்றனர்.
சமுதாயத்திலுள்ள வளம் படைத்தோர் தங்கள் வளத்தை முறையாக சமுதாய எழுச்சிக்காக, சமுதாய மேம்பாடுக்காக பயன்படுத்தத் தவறுவதனால் சமுதயாத்திலுள்ள வளம் குன்றியவர்கள், தேவையுள்ளவர்கள் அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வும் ரஸுலும் விரும்பாத வழிகளை நாடுகின்றனர்.
இதனால் சமுதாயத்தின் மானமும் மரியாதையும் காற்றில் பறக்க அவமானத்தோடும் கவலையோடும் சமுதாயத்திலுள்ள சீதேவிகள் கண்ணீர் சிந்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் காரணம், நம்மில் வளம் இருந்தும் அவற்றை சமுதாயத்தின் தேவைக்காக அதன் நலனுக்காக பயன்படுத்தாதவர்களே. சமுதாயம் ஒவ்வொரு துறையிலும் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை இன்னும் நம்மால் சரியாக அடையாளம் காணப்படவில்லை.
தனதும் தனது குடும்பத்தினரதும் வாழ்க்கையின் ரம்பியம்போல் அடுத்தவரின் வாழ்விலும் ரம்பியமான பொழுதுகள் மலர வேண்டும். அதற்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் உருவாகும் வரை இந்தப் பின்னடைவு தொடரத்தான் செய்யும். இருப்பினும், குறைந்த பட்சம் நமது சமுதாயத்தில் இன்னல்களால் அல்லலுரும் மக்களின் வாழ்வில் எவ்வாறு ஒளியை ஏற்ற முடியும் என்று சிந்திப்பதற்கும் அதற்காக முயற்சி மேற்கொள்ளவதற்கும் இடமளிக்காத, நமது சமுதாய சிந்தனையற்ற மனப்பாங்கையாவது மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இந்த மனப்பாங்கின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு நமக்குக் கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பமாக இத்தியாகத் திருநாளைப் பயன்படுத்த முன்வருவோம்.
தியாகத் திருநாளில் வீண்விரையம் செய்யப்படும் வளங்களை நமது சமூதாயத்தில் நமது குடும்பத்தில் இன்னல்களோடு அல்லலுருவோருக்காக செலவு செய்ய முயற்சிப்போம். இந்நாட்களில் பல்வேறு நெருக்கடிகளால் அல்லலுருவோர் உதவும் மனப்பாங்கோடு திரும்பிப் பார்க்கபடுதல் வேண்டும்.
நம்மால் முடிந்தவற்றை முடியுமான அளவு அள்ளி வழங்கி அவர்களும் இந்தத் தியாகத் திருநாளின் ரம்பியமான பொழுதுகளின் இன்பத்தை அனுபவித்திட உதவிட வேண்டும். அதற்கான மனப்பாங்கை நம்மில் வல்ல இறைவன் ஏற்படுத்துவானாக. ஆமீன்

Post a Comment