புதிய இஸ்லாமிய ஆண்டுக்கான திட்டமிடலில் இளைய தலைமுறையினருக்காகவும் சிந்திப்போம்
(அபு அரிய்யா)
இன்று உலகையே தன்பால் ஈர்க்கும் அளவுக்கு சாதித்த சமூகங்களாயினும், இயக்கங்களாயினும், தனி மனிதனர்களாயினும் அனைத்து தரப்பினரதும் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருந்த அழகிய வழிமுறைதான் திட்டமிடலும் அதை நோக்கிய தொடர்த்தேச்சியான உழைப்புமாகும்.
திட்டமிடத் தவறும் சமூகம் சாதிக்கத் துணியவில்லை என்பதுதான் அர்த்தம். எதிர்காலத்தின் அடைவை கால ஓட்டத்தின் வேகத்தில் நிறுத்தி அதற்கான தனது செயற்திட்டத்தை அழகிய முறையில் வகுக்கும் சமூகத்தை காலம் வென்றுவிடுவதில்லை. மாறாக அதுதான் நாளைய தினத்தை சிறப்பாக எதிர்நோக்கும் சக்தி மிக்கதாக மாறிவிடுகின்றது.
அந்த வகையில் ஒரு சமூகத்தின் அழகிய மாற்றத்தில் பெரிதும் பங்களிக்கும் முக்கிய தரப்பினர்கள்தான் அச்சமூகம் சுமந்திருக்கும் சிறுவர்களாவர். இவர்கள்தான் நாளைய சமூகத்திற்கான வழிகாட்டிகள். ஒன்றில் சிறப்பானதோர் உருவாக்கத்தின் பங்காளர்களாகவும் அல்லது இழிவுமிக்க செயற்பாடுகளின் தொகுப்பாளர்களாகவும் அமையும் சக்திமிக்கவர்கள் அவர்கள்.
குழந்தைகள் உலகில் பிறக்கும் போது மனிதத்துவம் சுமந்திருக்க வேண்டிய அனைத்து உயரிய இயல்புகளோடும் பண்புகளோடும்தான் உதயமாகின்றனர். ஆனால் அவர்களை பராமரிக்கும் பெற்றோர்கள், அவர்கள் நடமாடும் சூழல்கள் என்பவைதான் எதிர்காலத்தில் அவர்களின்; வடிவத்தைத் தீர்மானிக்கும் கருவிகளாக மாறிப்போய் விடுகின்றன.
ஒரு மனிதனின் சிறப்பான வளர்ச்சி என்பது அவனது அறிவு, ஆன்மா, உடல் என்பனவற்றின் பூரணத்துவத்திலேயே தங்கியிருக்கிறது. இவை மூன்றினதும் செல்வாக்குகள்தான் அவனை மனிதத்துவம் கொண்ட முழுமையான உருவமாக காட்சியளிக்கப் போதுமானது. இதற்கு மாறாக இவைகளில் சமநிலையற்ற பாரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழுமாயின் அது பூரணத்துவமற்ற வளர்ச்சியின் நிலையையே விளைவாகத் தரும்.
இன்று எமது சமூகத்திலுள்ள சிறுவர்களுக்கு அறிவை வழங்க முயற்சிக்கும் அளவுக்கு அவர்கள் சுமந்திருக்கும் ஆன்மாவை நெறிப்படுத்த எடுக்கும் பிரயத்தனம்; குறைவாகவே காணப்படுகிறது. இதன் விளைவு விகாரமான ஒழுக்க வீழ்ச்சிக்கும், மோசமான பண்பாடுடைய ஒரு தலைமுறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பதாக மாறிவிடும்.
இன்று எமது மாற்றுமத சகோதரர்கள் அவர்களினது சமூகத்திலுள்ள சிறுவர்களை அழகிய ஒழுக்கத்தின்பால் நெறிப்படுத்த சமய போதனைகள் மூலமான வழிகாட்டல்களை திட்டமிட்டு நாட்டில் செயற்படுத்தி வருவதை எம்மால் அவதானிக்க முடியும்.
அது போலவே எமது சமூக ஒழுங்கைப் பொறுத்த வரைக்கும் எம்மிலுள்ள சிறுவர்களை திட்டமிட்டு ஒழுங்குபடுத்துவதற்குரிய அழகிய சமூக நிறுவனங்களாக குடும்பம், பாடசாலை, குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யா பாடசாலைகள் என்பவைகள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனது பணியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயற்படுத்துமாயின் ஆரோக்கியமானதோர் சந்ததியின் உருவாக்கத்திற்கான அழகிய பணியாக அவை மாறும்.
தற்போது புதியதோர் வருடத்தில் காலடி பதிக்கவிருக்கும் நாம் இவ்வருடத்திற்கான அனைத்து திட்டமிடல்களின் போதும் நாம் சுமந்திருக்கும் சிறுவர்களினது ஒளிமயான எதிர்காலத்தை கவனத்திற் கொண்டு அதற்காக திட்டமிடும் நிலையை எம்மில் உருவாக்க முனைவோம். அதுவே எமது நாளைய சமூகத்தின் வெற்றிக்கான முதற்படியாகும்.
.jpg)
Post a Comment