Header Ads



வலியால் துடிக்கிறதே..!

(அஹமட் முபாரக் முஸ்னி)

அஸ்ஸலாமு அலைக்கும்

நோன்புப் பெருநாளை ஒற்றுமையுடன் கொண்டாடிய நாம் ஈகைத்திருநாளுக்காக காத்திருக்கும் இவ்வேளையினிலே, நம்மால் நிறைவேற்றப்படும் உழ்ஹிய (குர்பானி) பற்றிய விஞ்ஞான ரீதியான தெளிவு நம்மிடையே இருப்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

அண்மை காலமாக இலங்கை நாட்டில் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டு வருகின்றது. அதிலே முதலாவது குறிவைக்கப்பட்டது ஹலால். உலமாக்கள் தங்களால் இயலுமானமுறையில் மக்களுக்குத்   தெளிவூட்டுகிறார்கள். இன்றைய சமுதாயத்தின் தேவையாக நான் கருதுவது எங்களிடம் போதியளவு விளக்கம் வேண்டும். அப்போது தான் எமது ஈமான் அதிகரிக்கும் அதே நேரம் மற்றவர்களுக்கு தகுந்த விளக்கம் கொடுக்கவும் முடியும். மனிதனின் பல் அமைப்பினில்  வேட்டைப் பற்கள் மாமிசத்தை உண்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மனிதன் மாமிசம் உண்ண தகுதியானவன். இம்மாமிசத்தைப் பெற  மனிதன் விலங்குகளை கொலை செய்கிறான். இஸ்லாமிய அறுப்பு முறை (slaughtering) ஏன் உகந்தது என்பதையும்; இது தான்  சரி என்பதையும் சில விஞ்ஞான ஆதரங்களுடன் பார்ப்போம்.

 “ (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டி செத்ததும், (கரடி புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப்பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப்பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும். இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:173)

1. பிராணியை தெரிவு செய்தல்
இஸ்லாம் மாமிசம் உண்ண  அனுமதியளித்துள்ளது ஒருசிலவற்றை தவிர. தாவர உண்ணிகளான  ஆடு, மாடு போன்றன அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே விலங்கு உண்ணிகளான சிங்கம்> புலி போன்றனவற்றை தடை செய்துமுள்ளது. கரணம் ஓர் மனிதன் உண்ணும் மிருகத்தின் மாமிசம் மூலம் அதன்; பண்பு அவன்  வாழ்வில் வரும் என்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. தாவர உண்ணிகள் சாந்தமாக இருக்கும் அதே வேளை விலங்கு உண்ணிகள் மற்றய உயிரினம் மீது பாய்ந்து அதை அடக்கி ஒடுக்கி கொன்று உண்ணும். பன்றி கேவலமான உணவுப்பழக்கம் உடையது. தான் கழிக்கும் மலத்தை ரசித்து உண்ணக்கூடியது. எனவேதான்; அறிவுள்ள எவரும் உண்ண நினைப்பது ஆடு, மாடு போன்றவற்றையே. இஸ்லாம் அறுக்கப்படும் மிருகத்தின் மீதும் கருணை காட்டி உள்ளது. அதனாலதான் அறுக்கப்படும் அப் பிராணி ஆனது உரிய இனத்தின் அனுமதிக்கப்பட்ட வயதுக்குட்பட்ட> ஊனமற்றதாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

2. அறுப்பவரும் அவர் தகைமையும்
வீடுகளில் அறுக்கும் பழக்கம் அரிதாகி விட்டது.  6ம் 7ம் வகுப்புகளில் படித்த இஸ்லாம் பாடத்தையும் மறந்துவிட்டோம். அறுப்பவர் அனுபவம் உள்ளவராக அறுக்கும்  சட்டங்களை சரியாக நிறைவேற்ற கூடியவராக  இருக்க  வேண்டும்.

3. படைத்தவனின் பெயரால் ஆரம்பித்தல்   
படைத்த றப்பினை நாம் நினைவு  கூற வேண்டும். “பிஸ்மில்லாஹ்“என்று அல்லாஹ்வின் பெயர் கூறப்படுவது  அறுப்பவரினால் அல்ல அல்லாஹ்வினாலே உயிர் பறிக்கப் படுகின்றது என்பதனை நாம் அறிவதற்கே. அல்லாஹ்வின் பெயர் அன்றி வேறு பெயர்கள் கூறப்பட்டவை ஹராம் ஆகும். “எதன் மீது (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.” (அல் குர்ஆன் 6:121)

4. அறுத்தலும் அறுக்கும் முறையும்
அறுக்கும் ஆயுதம் கூரியதாயும் போதியளவு நீண்டதாயும் இருக்க வேண்டும். ஒரே இழுவையில் இரு கழுத்து பெருஞ்சிரை (இரத்த குழாய்களையும்) Jugular vein சுவாச குழாயினையும் wind tube வெட்டப்படல் வேண்டும். அபூதாவுதில் பதிவாகிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முறையாக வெட்டப்படாத கழுத்து பெருஞ்சிரையைக் கண்டு அதனை தடை செய்தார்கள். மேலும் அவ்வறுவை தலையினை உடலில் இருந்து பிரிக்கப்படுவத்தையும் தடுத்தார்கள். காரணம் முதுகு தண்டு எனும் spinal cord  வேட்டப்படக் கூடாது. கழுத்தின் பின் புறமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டியது ஹலால் இல்லை என்றும் வெட்டும் இடமானது தலைக்கும் நெஞ்சிற்கும் இடையிலான கழுத்துப்பகுதி என்றும் இரண்டு ஹதீஸ்கள் புஹாரியில் பதிவாகி உள்ளது.

மேற்சொன்ன முறைகளில் அருக்கப்படுமாயின் அது ஹலால் ஆகும். நான் இக்கட்டுரையினை எழுதுவதன் நோக்கம் கடைசியாக  கூறப்பட்ட அறுத்தலும்  அறுவை முறையும் ஆகும். ஒருபோதும் வலி இல்லை. ஏன்? (Why? no pain at all)

இறந்த மனிதர்கள் யாரும் மரணத்தின் அனுபவத்தை பகிர்த்து கொள்ளவில்லை. ஆனாலும்  மனிதன் எவ்வாறு மரணித்தான் என்பதினை அறிய விஞ்ஞானம் தவறவில்லை. மருத்துவ ஆய்வுகளின்படி  உயிரினங்களின்  இறப்பை மூன்று பிரிவுகளில் உள்ளடக்கலாம்.

1. இதயம் மற்றும் இரத்தோட்டம் 
2. மூளை, நரம்புத்தொகுதி 
3. சுவாசம்

இவற்றில் ஏற்படும் பாதிப்பே மரணத்திற்கு காரணமாகும். பரவலாக நாம் அறிந்த ஹாட் அட்டாக் heart attack, ஸ்ட்ரோக் stroke போன்றவை யும் இவற்றுள் உள்ளடங்கும். சந்தோசமாக புன்னகையுடன் உயிர் பிரிவதையும், வேதனையினால் துடிக்க துடிக்க உயிர் பிரிக்கப்படுவதும் நாம் பார்த்ததுண்டு. இலேசான (மவ்த்) மரணம்; வேண்டும் என்று துஆக் கேட்கிறோம். இவ்விரண்டு வகையான உயிர் பிரிதலிலும் மேற்சொன்ன காரணங்களில் ஏதோ ஒரு  காரணம் உண்டு. புன்னகையுடன் மரணிப்பவர் தனது வலியினை உணர்வதில்லை இவ்விரண்டு மரணத்திற்கும் அவ்வளவுதான் வித்தியாசம். வலியினை கடத்தகூடிய நரம்புத்தொகுதி செயல் இழக்குமாயின் அவரினால் அந்த வலியை  உணர முடியாது. உயிர் பிரியும் வேளையில் முதலில் வலியினை கடத்தும் தொகுதி செயல் இழக்குமாயின் அமைதியான முறையில் நமது உயிர் பிரியும். இவ்வாறே அனைத்து உயிரினங்களும். வல்ல அல்லாஹ்; அந்த பாக்கியத்தினை நம் அனைவருக்கும் தருவானாக.! 

ஆய்வுகள் மேற்கொண்ட பல மேல்நாடுகளின் ஒரே முடிவு, இஸ்லாம் கூறிய பிரகாரம் அறுக்கப்படும் போது  வலி, வேதனை உணரப்படுவதில்லை. அவர்கள் முன் வைக்கும் ஆதாரமானது வலியினைக் கணிக்க உபயோகிக்கும் வரைபானது சற்றும் அதிகரிக்கவில்லை என்பதாகும். இதனை வலி வாங்கிகள் (pain receptors) மூலம் கணிக்கலாம்.  இதயத்தின் செயல் பாட்டை அறிய  ECG எனும் வரை படம் இருப்பது போல் வலியினை கணிக்கவும் இன்றைய விஞ்ஞானம் தவறவில்லை. ஆகவே ஒரு போதும் வலி இல்லை.

வலி இல்லை என்றால் ஏன் அது அறுத்தபின் துடிக்கிறது? இஸ்லாம் முள்ளந்தண்டு அறுக்கப்படுவதை தடை செய்துள்ளது. தசைக் கலங்கள் எப்போதும் இயங்குவதற்காகவே  ஆயத்தமாக உள்ளது. மூளையில் இருந்துவரும் அறிவிப்பு “இயங்காதே” என்பதாகும். இவ்வறிவிப்பு வராதவிடத்து அவை இயங்க தொடங்குகிறது. உதாரணமாக ஆபத்தின் போது உயிரினம் தானாக ஓடுகின்றது. இதன் போது பல தசைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு தசைக்கும் இயங்குக என்று அறிவிப்பு செய்வதை விட இயங்காதே என்று சொல்லும் ஒரு அறிவிப்பை தடை செய்வதால் உடனடியான செயற்பாடு அங்கு நடை பெற்று ஆபத்தில் இருந்து அது தப்புகிறது. கழுத்து அறுக்கப்படும் போது மூளையின் இரத்த ஓட்டம் தடைபெற்று மூளை செயலிழக்கின்றது. அறிவிப்பு வரவில்லை இதனால் தசைகள் இயங்குகிறது.துடிப்பதுபோல் காட்சியளிக்கிறது.  இதில் இன்னொரு நன்மை யாததெனில் இவ்வாறு துடிப்பதனால் உடம்பில் உள்ள அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுகிறது. மாமிசம் சுத்தமாக்கப்படுகிறது.

மனிதன் மாமிசத்தை உட்கொள்ள வேண்டும் என்பதையும், அவ்வாறாயின் அது எந்த மாமிசம் என்பதும், பெற்றுக்கொள்ளப்படும் அவ் விலங்கிட்கு வேதனை இன்றி எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் படைத்த வல்ல நாயன் அல்லாஹ்வை தவிர வேறு எவராலும் கூற முடியுமா?. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் நாம் இவற்றினை இலகுவாக விளங்குகிறோம் ஆனால் ஈமான் அதிகரிப்பதில்லையே. இவை அறியாத நமது முன்னோர்களின்  ஈமான் எங்களைவிட உறுதியாக  இருந்ததே ஏன்?

No comments

Powered by Blogger.