கோத்தபய ராஜபக்சவின் கருத்து முஸ்லிம் சமூகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதுய
(ஏ.எல்.ஜுனைதீன்)
பாதுகாப்புச் செயலாளரின் முஸ்லிம்கள் குறித்த அறிக்கை முஸ்லிம் சமூகத்தில் ஒரு கொந்தளிப்பான கருத்துக்களையும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது என பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் (2013.09.15) ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக் காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதுகாப்புச் செயலாளரின் பயங்கரவாத செயல்கள் சம்மந்தமான நடவடிக்கைகளில் முஸ்லிம்களில் ஒரு குழு இயங்குகின்றது என்ற கூற்றுக்கு பதிலளித்து கருத்துக் கூறுகையில் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளரின் கருத்துக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில் மேலும் தெரிவித்ததாவது,
பாதுகாப்புச் செயலாளரின் கருத்தைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பல் வேறு விதமான கருத்து வேற்றுமைக் கருத்துக்கள் கூட அதைச் சில ஊடகங்கள் இக் கருத்து சொல்லப்பட்டது உண்மைதான் என்ற ரீதியிலும் இன்னும் சில ஊடகங்கள் இல்லை அப்படிச் சொல்லப்படவில்லை வேறு விதமாகச் சொல்லப்பட்டதை ஊடகங்கள் திரித்துக் கூறியுள்ளன என்ற அடிப்படையிலும் கூறுகின்றன.
குறிப்பாக அவர் பொதுபல சேனா என்ற சிங்கள பெளத்த அமைப்பின் நடவடிக்கைகளை ஒரு நியாயப்படுத்துகின்ற அமைப்புத்தான் அவரின் அந்த பேச்சாக அமைந்துள்ளது. அதாவது இன்று அரபு வசந்தம் அல்லது இஸ்லாமிய உலகத்தில் காணப்படுகின்ற இந்த முஸ்லிம்கள் நடத்துகின்ற பயங்கரவாதம் தென் கிழக்கு ஆசியாவிலும் இலங்கையிலும் இது ஊடுருவும் என்ற பயம் அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் இருக்கின்றது. இதற்கான சில முன்னேற்பாடுகள் இலங்கையில் புகுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம்.
எனவே இவ்வாறான பயங்கரவாதத்தின் அடிப்படையில்தான் சிங்கள மக்கள் அச்சப்படுகின்றார்கள். அவர்கள் இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அந்த சிங்கள பெளத்த அமைப்புக்களின் பள்ளிவாசல் உடைப்பு, அபாயா பறிமுதல் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை நியாயப்படுத்துகின்ற அமைப்பில்தான் அவர்கள் பேசி வருகின்றார்கள்.
ஆனால் உண்மையாக நாங்கள் கூறுவோம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் நாடாளாவிய ரீதியில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகப் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த இயக்கமாகும்.இது தமிழர்கள் அல்ல தமிழ் ஈழ விடுதலைப் புலிகளாகும். ஆனால் அவ்வாறான எந்தவொரு இயக்கமும் ஆயுதங்களைக் கொண்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இயக்கம் இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்பதை நாங்கள் ஆணித்தரமாகக் கூறமுடியும்.
நான் குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு இலங்கையில் வாழ்கின்றவன். அந்த முஸ்லிம் மக்களின் ஒவ்வொரு உணர்வுகளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்கள் இந்த நாட்டில் ஏனைய மக்களுடன் ஒற்றுமையாக சாந்தி, சமாதானமாக வாழ வேண்டும் என்றிருக்கிறார்கள். இன்று ஏற்பட்ட பல பிரச்சினைகள் குறிப்பாக இந்த 30 வருட போராட்டத்தில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை அவர்கள் கண்ணாரக் கண்டிருக்கிறார்கள். எந்த வகையிலும் ஆயுதத்தைத் தூக்கக் கூடிய ஆயுதத்தைக் கொண்டிருக்கக்கூடிய முஸ்லிம்கள் இன்றில்லை.
ஆனால் குறிப்பாக இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த பொழுதும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் இருந்த போதும் அந்த இயக்கங்களில் சேர்ந்து கொண்ட சில முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்பது உண்மை. அது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இளைஞர்கள் மட்டுமேயாகும். அவர்கள் அந்த ஆயுதக் குழுக்களோடு சேர்ந்து மரணித்திருக்கிறார்கள். அல்லது அதனை தற்போது கைவிட்டு நல்ல நியாயமான வழிக்கு ஒரு இலங்கை மகனாக வந்திருக்கிறார்கள். இவ்வாறு சிரேஷ்ட விரிவுரையாளர் ஜலால்தீன் தெரிவித்தார்.

Post a Comment