Header Ads



உடல் எடையை குறைத்தால் தங்கம் - டுபாயில் நேற்று நிறைவுக்கு வந்தது

மக்களின் உடல்நலம் குறித்த அக்கறையில், கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் துபாய் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருந்தது. நாட்டின் சுகாதாரக்கழகம் தெரிவிக்கும் இயற்கை முறைகளின்படி ஐந்து வாரங்களுக்குள் உடல் எடையைக் குறைப்போருக்கு அவர்கள் குறைத்த எடைக்குத் தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பாகும்.

 கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இந்தத் திட்டத்தில் இணைந்திருந்தனர். நேற்று இந்தத் திட்டம் நிறைவுக்கு வந்து இதில் பங்கு பெற்ற மக்கள் சஃபா பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களின் உடல் எடை அளக்கப்பட்டு குறைத்திருந்த எடையும் குறிக்கப்பட்டது. முதல் நாள் முகாமில் 80 பேருக்கு மேல் வந்திருந்தனர். சராசரியாக, 5லிருந்து 6 கிலோ வரை குறைக்கமுடியும் என்று சுகாதாரக்கழகம் எதிர்பார்த்திருந்ததற்கும் மேலாக மக்கள் 10லிருந்து 11கிலோ வரை தங்களின் எடையைக் குறைத்திருந்தனர்.

பெரும் பான்மையானோர் 15 கிலோ வரை கூட தங்களின் எடையைக் குறைத்திருந்தனர். 5-10கிலோ வரை குறைத்தவர்களுக்கு இரண்டு கிராம் தங்கமும், அதற்குமேல் குறைத்த ஒவ்வொரு கிலோவிற்கும் மூன்று கிராம் தங்கமும் அளிக்கப்பட்டது. உடல்பருமன் குறித்த விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் அதிகப்படியான ஊக்கப் பரிசாகத்தான் தங்கம் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் பலரும் உடல் எடை குறைத்தது குறித்து தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள் என்று துபாய் நகராட்சியின் நிறுவன மற்றும் வர்த்தகத் தொடர்பு இயக்குனரான முகமது அல் நூரி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.