Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளை கண்டிக்க முடியாத நிலையில் முஸ்லிம் சமூகம்..!

(எஸ்.அஷ்ரப்கான்)

போதைவஸ்த்துக்களின் களஞ்சியமாக கிறேன்ட்பாஸ் பள்ளிவாயல் உள்ளது என்ற பொதுபல சேனாவின் குற்றச்சாட்டை முஸ்லிம் மக்கள் கட்சி கண்டித்திருப்பதுடன் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் ஆளுந்தரப்பு முஸ்லிம் அரசியல் வாதிகள் பதவிகளுக்காக சோரம் போயுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இது பற்றி முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் மஜீத் தெரிவித்ததாவது,

அண்மையில் இலங்கையில் அதிகளவிலான போதைவஸ்த்து கைப்பற்றப்பட்டதில் சில முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதற்கு முழு முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றஞ்சாட்டி பொது பல சேனா செயலாளர் ஞான சேகர தேரர் கூறியிருப்பது அவரது அறியாமையையும், யதார்த்தத்தை புரிந்து கொள்ளத் தெரியாத சூனியத்தையும் காட்டுகிறது.
 
இந்த நாட்டில் பௌத்த பன்சலைகளுக்குச் செல்லும் பெண்கள் பௌத்த தேரர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் பல பிக்குகள் கைது செய்யப்படுவதையும் தினமும் ஊடகங்களில் காண்கிறோம். அதன் மூலம் பௌத்த மதஸ்தலங்கள் பாலியல் ஊக்குவிப்பு நிலையங்கள் என நாம் குற்றம் சாட்டினால் அது ஏற்புடையதாகுமா?

அதே போல பல சிங்கள பாடசாலைகளின் அதிபர்கள் மாணவிகளை பலவந்தப்படுத்துவதாகவும் பலர் இது விடயத்தில் கைது செய்யப்படுவதையும் அண்மையில் கூட கண்டோம். இதன் மூலம் மொத்தமாக சிங்களப் பாடசாலைகள் பாலியல் பலாத்கார நிலையங்கள் என நாம் கூறமுடியமா?

சமூகத்தில் உள்ள சிலர் செய்யும் தவறுகளுக்கு முழு சமூகத்தையும் குற்றம் சாட்டுவது என்பது யதார்த்தத்தை புரியாமையாகும். இலங்கையிலிருந்து தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பலர் அந்நாடுகளில் பாரிய குற்றங்களில் ஈடுபடுவதையும் கைதுசெய்யப்படுவதையும் காண்கிறோம். இதன் மூலம் முழு இலங்கையரும் மோசமானவர்கள் என கூறினால் இலங்கை பௌத்த நாடு என கூறுபவர்களால் ஏற்க முடியுமா? இதனை ஏற்றுக்
கொண்டால் பௌத்த மதத்துக்கே அபகீர்த்தியாகும்.

கிறேன்பாஸ் பள்ளிவாயல், அது பள்ளிவாயல் என்பதற்காகவே தாக்கப்பட்டது. அது போதைவஸ்த்து களஞ்சியம் என்பதால் தாக்கப்பட்டது என்பது ஞானசேகரரின் புதிய கண்டுபிடிப்பாகும். இதன்மூலம் அவர் அந்தப் பள்ளிவாயலை அவமதித்துள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கையில் உள்ள எந்தவொரு பள்ளிவாயலிலும் பாலியல் பலாத்காரம் நடந்ததாகவோ, போதை வஸ்த்து பிடிபட்டதாகவோ தகவல் இல்லை. அந்தளவுக்கு அவை பன்சலைகளை விட புனிதமாக உள்ளன என்பது அறிவுள்ள சிங்கள மக்களுக்கும் தெரியும். ஆனாலும் பள்ளிவாயலுக்குள் பன்றியின் இரத்தத்தை எறிந்த சிங்கள இனவாதிகள் எதிர் காலத்தில் பள்ளிவாலுள் கஞ்சாவையோ, போதை வஸ்த்துவையோ எறிந்து விட்டு பள்ளிவாயல் மீது குற்றம் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இவர்களுக்கு ஹக்கீம், அதாவுள்ளா, பௌசி போன்றவர்கள் உள்ள அரசு துணை நிற்பதால் இவற்றை மிக இலகுவாக செய்வார்கள்.

போதை வஸ்த்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்படும் முஸ்லிம்களில் பலர் குற்றம் செய்யாமலேயே பொலிசாரின் சிறை நிரப்பு தேவைக்காக போலியாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை. கொழும்பின் சேரிப்புற முஸ்லிம்கள் இவ்வாறு கைது செய்யப்படுகிறார்கள். அவர்களால் சட்டத்தரணி ஏற்பாடு செய்யுமளவு பணவசதி இல்லாமை காரணமாக பல வருடங்களுக்கு வழக்கை தொடர்வதை விட செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொண்டு ஆறுமாத சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகிறார்கள் என்ற உண்மை அறிவற்றவர்களுக்கு புரியாது.

ஞானசேகர தேரரின் பள்ளிவாயல் போதை களஞ்சியம் என்ற இக்கருத்தை ஊடக மாநாட்டை நடாத்தி பகிரங்கமாக கண்டிக்க முன்வராத நிலையில் ஆளும்கட்சியில் உள்ள முஸ்லிம்களும் அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அதாவுள்ளா, மற்றும் அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் உள்ளமையானது இவர்களின் கோழைத்தனத்தையும் பதவிகளுக்காக சோரம் போனதையுமே காட்டுகிறது. இத்தகைய ஏமாற்று முஸ்லிம் அரசியல்வாதிகளை பகிரங்கமாக கண்டிக்க முடியாத நிலையில் முஸ்லிம் பொதுசனமும் இருப்பதுதான் இந்த சமூகத்தின் மிகப்பெரிய அவலமாகும்.

1 comment:

  1. அரசாங்கம் பொதுபலசேனவை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கின்றது, நாம் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. நாமும் சாடை மாடையாக தெரிந்தும் தெரியாமலும் நம்மளால் முடிந்ததை செய்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக இருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.